For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது: ஸ்டாலின்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தொடர்பான மரபுகளை எதேச்சாதிகாரமாக மாற்றி, நிதி நிலை அறிக்கையின் மாண்பையும், மதிப்பையும் குறைத்து, தமிழக அரசின் கடன் சுமையைத் தொடர்ந்து அதிகரித்து வரும் அ.தி.மு.க. அரசை கண்டித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் உரையை திமுக புறக்கணித்தது ஏன் என்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

DMK, allies stage walkout from Tamil Nadu assembly over budget 'shortcomings'

"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் கடந்த 6-2-2014 அன்று தரப்பட்ட பத்திரிகை செய்தியில், தமிழகச் சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை, 13-2-2014 அன்று பேரவைத் தலைவர் கூட்டியிருப்பதாக தெரிவித்து, அன்றைய தினம் காலை 10 மணிக்கு 2014-2015 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப் பெறும் என்று அறிவித்து, பேரவையின் செயலாளர் ஏடுகளுக்கெல்லாம் அந்தச் செய்தியினை அனுப்பி அது அனைத்து நாளேடுகளிலும் வெளி வந்திருந்தது.

ஆனால் 10-2-2014 அன்று பேரவைச் செயலாளர் ஏடுகளுக்கு அறிவித்துள்ள செய்தியில், நிதி நிலை அறிக்கை காலை 10 மணிக்குப் பதிலாக முற்பகல் 11 மணிக்கு என்று மாற்றி பேரவைத் தலைவர் ஆணையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிலை அறிக்கைக்கு என்று ஒரு முக்கியத்துவம் உண்டு. நிதி நிலை அறிக்கை ஆளுநரால் குறிப்பிடப்பட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் பேரவையில் வைக்கப்பட வேண்டுமென்பது நீண்ட காலமாக அவையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபாக இருந்து வருகிறது.

துக்ளக் தர்பார்

தற்போது அந்த மரபுக்கு மாறாக இத்தனை மணிக்கு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என்று முதலில் ஒரு அறிவிப்பைச் செய்து விட்டு, அந்த நேரத்தை மீண்டும் இவ்வாறு மாற்றினால், அதனை 'துக்ளக் தர்பார்' என்று தானே விமர்சனம் செய்வார்கள்?

நேரம் மாறியது ஏன்?

பேரவை சார்பில் ஒரு அறிவிப்பு என்றால், அந்த அறிவிப்பினை பேரவையே நிறைவேற்றத் தவறுவது என்பது, சாதாரணமான நிகழ்வு என்று கருதி மறந்து விடக் கூடியதா? முதலில் சரியாகக் கவனிக்காமல் காலை 10 மணி என்று அறிவிக்கப்பட்டதா? அந்தத் தவறுக்குக் காரணம் யார் என்று தெரிவிக்க வேண்டும். என்ன காரணத்திற்காக இவ்வாறு நேரம் மாற்றப் பட்டது என்பதை அவையின் உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

கடன் சுமை அதிகரிப்பு

ஒரு முறை ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, பேசிய இன்றைய முதலமைச்சரும், அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா, 'தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ் நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது' என்று தி.மு. கழக அரசைக் குற்றஞ்சாட்டும் வகையில் பேசினார். ஆனால் இன்று என்ன நிலைமை?

அ.தி.மு.க. 2011 மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு 2011-2012ஆம் ஆண்டில் 17,261 கோடி ரூபாயும்; 2012-2013இல் 18,387 கோடி ரூபாயும், 2013-2014இல் 21,142 கோடி ரூபாயும் ஆக மொத்தம் இந்த மூன்றாண்டுகளில் மாத்திரம், 56,790 கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமையை ஏற்றியிருக்கிறது.

எவ்வளவு கடன்

ஆனால் 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் தி.மு.க ஆட்சியில், ஐந்தாண்டு காலத்தில் 44,084 கோடி ரூபாய் மட்டுமே கடனாகப் பெறப் பட்டிருந்தது. அப்படியிருந்த நேரத்திலேயே தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போது 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறதென்று கேலியும், கிண்டலும் செய்த இன்றைய முதல்வர் ஜெயலலிதா இப்போது அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியிலே 56,790 கோடி ரூபாய் கடன் சுமையை ஏற்றி யிருக்கிறாரே; அதன் காரணமாக தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை எவ்வளவு கடன் சுமையோடு பிறக்கிறது என்பதற்கான விளக்கத்தையும் அவையில் தருவாரா?

மீறப்படும் மரபுகள்

நிதி நிலை அறிக்கை தொடர்பான மரபுகளை எதேச்சாதிகாரமாக மாற்றி, நிதி நிலை அறிக்கையின் மாண்பையும், மதிப்பையும் குறைத்து, தமிழக அரசின் கடன் சுமையைத் தொடர்ந்து அதிகரித்து வரும் அ.தி.மு.க. அரசை, தி.மு.க சார்பில் கண்டிக்கிறோம்.

ஜனநாயகத்திற்கு முரண்

நாங்கள் சுட்டிக்காட்டி வரும் குறைபாடுகளுக்கு அரசின் சார்பில் விளக்கம் அளித்திட முன்வராத நிலையில், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை படிக்கும் நேரத்தில் நாங்கள் அவையில் இருப்பது சட்டப் பேரவை ஜனநாயகத்திற்கு முரணானது என்பதால் தி.மு. கழகம் வெளி நடப்பு செய்கிறது" என்றார் மு.க.ஸ்டாலின்.

English summary
DMK and its alliance parties today walked out of the Budget session of the Tamil Nadu Assembly alleging that certain traditions over budget were not being maintained. Talking to reporters outside the Assembly, he said, it would not be appropriate for DMK to be present in the Assembly, when government is not willing to look into its "shortcomings."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X