For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சி இடைத் தேர்தலை தி.மு.க. புறக்கணிக்கிறது: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

வேட்பாளரை தேர்தெடுக்க எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் வழங்கப்படாதது உள்பட ஆளுங்கட்சியின் அராஜகங்களை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்..

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட 28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4.9.2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்றையதினம் திடீரென அறிவித்து இன்று தேர்தல் பற்றிய அந்தச் செய்தி நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

DMK boycott local body elections in Tamil Nadu

தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய 28ஆம் தேதி முதல் துவக்கம் என்று 29ஆம் தேதிய நாளேடுகளில் வெளிவருகின்ற இந்த ஒன்றே இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறும் என்பதற்குத் தக்க உதாரணமாகும்.

அது மாத்திரமல்ல; எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்போது அறிவிப்பார்கள் என்பதற்கே நேரம் கொடுக்காமல், இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4.9.2014 என்கிற போது, மற்ற எதிர்க்கட்சிகள் அங்கே போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேரம் இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏன் என்றால், இடையில் 29, 30, 31 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள்.

உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இந்தப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஏற்கனவே ஒரு முறை அதாவது கடந்த 6.8.2014 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது சட்ட மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், முதல் அமைச்சரால் விதி 110ன் கீழ் அன்றாடம் ஓரிரு அறிவிப்புகளை வெளியிட்டு, பத்திரிகைகளில் அவர் பெயரில் அறிக்கை வெளி வர முடியாது என்ற காரணத்தால், உள்ளாட்சி இடைத் தேர்தல்களுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு, ஏடுகளிலும் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று அந்த அறிவிப்பினைத் திரும்பப் பெற்ற விநோதமும் அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்றது.

சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகுகூட, கடந்த ஒரு வார காலமாக அன்றாடம் முதல்வர் உள்ளாட்சிகளுக்கு பல கோடி ரூபாயில் பல திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உதாரணமாக, தற்போது தேர்தல் நடைபெறவுள்ள கோவை மாநகராட்சிக்கு 2,377 கோடி ரூபாய்க்கான திட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளுக்கு 800 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டங்களும் நிறைவேற்றப்படுமென்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இதே மாதத்தில் பேரவையில் பல்வேறு மானியக் கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த உள்ளாட்சித் துறைக்கான மானியங்கள் நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் துறையின் அமைச்சரோ, அல்லது முதல்வரோ இந்த அறிவிப்புகளை ஏன் செய்யவில்லை? மாறாக தற்போது அவசர அவசரமாக இத்தனை கோடி ரூபாய்க்கு தேர்தல் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சிகளுக்கு திட்டங்களை முதல்வர் அறிவிப்பது முறை தானா? இது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டது தானா என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்.

அது மாத்திரமல்ல; இந்த மாதம் 6ஆம் தேதியன்று தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அந்த அறிவிப்பு ஏடுகளிலும் வெளிவந்து, பின்னர் அதே நாள் மாலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில், செப்டம்பர் 18ஆம் தேதியன்று தான் இந்த இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தான் சொல்லப்பட்டது.

அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதே செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தான் இடைத் தேர்தல்கள் நடை பெறும் என்று, எதிர்க்கட்சிகளுக்கு எந்த விதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் நகராட்சி ஆணையரோடு ஏற்பட்ட பிச்சினைகளைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்தக் கடலூர் நகராட்சிக்கு இடைத் தேர்தல் என்று அவர் ராஜினாமா செய்த மறுநாளே அறிவிக்கப்படுகிறது என்றால், இதைவிட வேறொரு கோமாளிக் கூத்து நடைபெற முடியுமா?

அ.தி.மு.க. வேட்பாளர்களையெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு மற்ற எதிர்க் கட்சிகளுக்கெல்லாம் நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இந்த அரசின் விருப்பத்திற்கு ஏற்பத் தான் மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதே தவிர, நடுநிலை தவறி நடந்து கொள்கிறது என்பது ஊர்ஜிதமாகி விட்டது.

இன்னும் சொல்லப் போனால், 2011ஆம் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. எப்படியெல்லாம் நடந்து கொண்டது என்பதை பல உதாரணங்களின் மூலமாக அப்போதே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.

இந்த நிலையில் ஆளுங்கட்சியின் அராஜகங்கள், பல கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிற விதிமுறை மீறல்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாறுதல், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரம் எதிர்க் கட்சிகளுக்கு வழங்காமல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதில்லை என்றும், புறக்கணிப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கின்றது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK president M. Karunanidhi Friday announced that his party would boycott the Sep 19 local body elections in Tamil Nadu. In a statement issued here, Karunanidhi said the state election commission made the poll announcement Aug 28 and also said nominations could be filed on the same day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X