For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக ஆதரவு உமா பாரதி தலைமையில் காவிரி ஆலோசனை கூடாது.. விளாசும் கருணாநிதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பங்கீடு தொடர்பாக நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில், தமிழகம்-கர்நாடகா முதல்வர்கள் ஆலோசனைக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெறுவதே நியாயமாக இருக்கும் என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி இன்று மதியம் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதி நீரைப் பங்கிடுவது தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. "கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், தண்ணீர் திறந்து விடும்படி பிறப்பித்த உத்தரவைத் திருத்த வேண்டும்" என்ற கோரிக்கையோடு கர்நாடகா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உச்ச நீதி மன்றம் 21-9-2016 முதல் 27-9-2016 வரை தினந்தோறும் ஆறாயிரம் கன அடி நீர் தமிழகத்திற்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறது.

"உச்ச நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றாமல், அந்த உத்தரவைத் திருத்தக் கோரும், கர்நாடகாவின் மனுவை விசாரிக்கக் கூடாது" என்று தமிழகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று (27-9-2016) நடந்த அந்த விசாரணையின் முடிவில், உச்ச நீதிமன்றம், "நீதி மன்றத்தின் மாண்பைக் குலைக்கும் வகையில், கர்நாடகா செயல்படுவது முறையல்ல; இந்த நீதி மன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடகாவுக்கு உள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அடுத்த மூன்று நாட்களுக்கு, 6,000 கன அடி வீதம், காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வேண்டும். இந்த உத்தரவை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்."" என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

எனினும், சட்டப் பேரவை தீர்மானத்தின் மூலம் கர்நாடக அரசு உச்ச நீதி மன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி செய்ததற்கு அனைத்துத் தரப்பிலும் எதிர்பார்த்தபடி, கர்நாடக அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் எதையும் கேட்டுப் பெறவில்லை.

கூட்டாட்சி தத்துவம்

கூட்டாட்சி தத்துவம்

வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல், முகுல் ரோத்தகி, "பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மாநில முதல்வர்கள் விரும்பினால், முதல்வர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது" என்று கூறியிருக்கிறார். இதுபற்றி உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கூறும்போது, "முன்னர் ஒரு முறை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் இணைந்து, சென்னைக்கு 5 டி.எம்.சி. தண்ணீரைத் தந்தன. இதுதான் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை. அடுத்த இரண்டு நாட்களுக்குள், மாநில முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும். அதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, வரும் 30ஆம் தேதி தெரிவிக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்கள்.

கர்நாடகா தீவிரம்

கர்நாடகா தீவிரம்

உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவது தொடர்பாக, நேற்று (29-9-2016) கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மூத்த சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதோடு, தற்போது காவிரிப் பிரச்சினையில் மூன்றாவது முறையாக, இன்று (28-9-2016) காலையில் கர்நாடகாவில் அவருடைய தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம், அதனைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டமும் நடைபெறுமென்று அறிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மிஸ்சிங்

அமைச்சர்கள் மிஸ்சிங்

நமது முதலமைச்சர் ஜெயலலிதாவும், அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவாறே அரசு அதிகாரிகளையெல்லாம் அழைத்து உச்ச நீதி மன்றத் தீர்ப்பு பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார் என்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் காவிரி பற்றிய அந்த முக்கியமான ஆலோசனையில் பொதுப்பணித் துறை அமைச்சரோ, பொதுப்பணித் துறையின் செயலாளரோ கலந்து கொள்ளாததற்கு என்ன காரணமோ தெரிய வில்லை.

தலைமைச் செயலாளர் வாசிப்பார்

தலைமைச் செயலாளர் வாசிப்பார்

மேலும் அரசு செய்தி வெளியீட்டில் "இந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து தமிழக முதல் அமைச்சர் விரிவாக விவாதித்தார். பின்னர், இரு மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில், தமிழக முதல் அமைச்சர் உரை அவர் சார்பில் தலைமைச்செயலாளர் வாசிக்க உள்ளார். இந்த உரையை முதல் அமைச்சர் சொல்லச் சொல்ல அதிகாரிகள் தயாரித்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

மேட்டூருக்கு நீர் வரத்து குறைந்தது

மேட்டூருக்கு நீர் வரத்து குறைந்தது

தமிழகத்தில் டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து, 20ஆம் தேதி முதல், வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. உச்ச நீதி மன்றம் 20-9-2016 அன்று பிறப்பித்த உத்தரவுப்படி, 21 முதல் 27ஆம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை, கர்நாடக அரசு திறக்கவில்லை. இதனால், நான்கு நாட்களாக, மேட்டூர் அணைக்கு ஆயிரம் கன அடிக்குக் குறைவான நீரே வந்துள்ளது; நேற்று 708 கன அடி நீர் மட்டுமே வந்துள்ளது.

விவசாயிகள் கவலை

விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையில் நீர் இருப்பு 44 டி.எம்.சி. யாகக் குறைந்து விட்டது. இதில் 6 டி.எம்.சி. குடிநீர் தேவைக்குப் போக மீதம் உள்ள 38 டி.எம்.சி. நீரை, அதிகப் பட்சம் 40 நாட்கள் மட்டுமே திறக்க முடியும் என்பதால், டெல்டா மாவட்டங்களில் பம்ப் செட்டைப் பயன்படுத்தும் சிறுபான்மை விவசாயிகள் மட்டுமே நெல் விதைப்பு செய்துள்ளார்கள். பெரும்பான்மையான இதர விவசாயிகள் இறுதி வரை நீர் கிடைக்குமா என்ற சந்தேகத்தில், சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளாமல் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்ற கவலையோடு இருக்கிறார்கள்.

ஜனவரி மாதம்வரை நீர் தேவை

ஜனவரி மாதம்வரை நீர் தேவை

மேட்டூர் அணையில் தற்போதுள்ள இருப்பு நீரை, நவம்பர் 5ஆம் தேதி வரை மட்டுமே திறக்க போதுமானதாகும். ஆனால் சம்பா சாகுபடியை நிறைவு செய்ய, ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை பாசனத்திற்கு நீரைத் திறக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை கை கொடுத்தாலும் கூட, மேட்டூர் அணைக்கு குறைந்த பட்சம் 80 டி.எம்.சி. நீர் தேவை. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, கர்நாடக மாநிலம் ஜுன் 1 முதல் நேற்று (27-9-2016) வரை 123 டி.எம்.சி. நீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வழங்கியது, 52 டி.எம்.சி. மட்டுமே! மீதம் 71 டி.எம்.சி. நீரை விடுவிக்காத நிலையில், 20ஆம் தேதி தமிழகத்திற்கு விடுவிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட நீரையும், ஜனவரி மாத இறுதியில் வழங்குவதாக தற்போது உச்ச நீதி மன்றத்தில், கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பல கோடி இழப்பு

பல கோடி இழப்பு

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை, கர்நாடகா தற்போது வழங்கினால் மட்டுமே, நவம்பர் 5க்குப் பின் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க முடியும். நடுவர் மன்றத் தீர்ப்பையொட்டி, கர்நாடகா, இப்போது நீர் வழங்க மறுக்கும் பட்சத்தில், சாகுபடி செய்த பயிர்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, ஏற்கனவே சாகுபடியைத் தொடங்கிவிட்ட விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். மேலும் சாகுபடிப் பணியைத் தொடங்காத விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.

விவசாய பரப்பு குறைந்தது

விவசாய பரப்பு குறைந்தது

காவிரிப் பாசன பாதுகாப்புச் சங்கப் பொதுச் செயலாளர் விமலநாதன் இது பற்றிக் கூறும்போது, தற்போதைய நிலவரப்படி டெல்டா மாவட்டங்களில் 10.60 இலட்சம் ஏக்கருக்குப் பதிலாக 4 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். 40 சதவீத நிலங்களில் மட்டுமே சாகுபடி; 60 சதவீத நிலங்களில் சாகுபடி சந்தேக இழையில் ஊசலாடுகிறது.

உமா பாரதி வேண்டாம்

உமா பாரதி வேண்டாம்

டெல்லியில் நடைபெறவிருக்கும் இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டம், மத்திய நீர் வள ஆதார அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற வேண்டும் என்பது போல ஒரு கருத்து சில ஏடுகளில் வெளிவந்துள்ளது. காவிரிப் பிரச்சினையில் அவர் சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக அரசுக்கு முற்றிலும் ஆதரவாக, "சிவசமுத்திரம் மற்றும் மேகதாதுப் பகுதியில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது. அணை கட்டுவதால் தமிழகத்துக்கு தண்ணீர் விட மாட்டோம் என்று கர்நாடகம் கூறவில்லை. காவிரி நதி நீதிப் பங்கீட்டு விவகாரத்தை ஆராய்ந்து பார்த்தால், 200 ஆண்டுகளாக கர்நாடகத்துக்கு அநியாயம் ஏற்பட்டுள்ளதை உணர முடியும்"" என்றெல்லாம் பெரிதும் பாரபட்சமான கருத்து தெரிவித்திருக்கின்ற நிலையில், இரண்டு மாநிலங்களின் முக்கிய பிரச்சினையை விவாதிப்பதற்கான கூட்டம் அவருடைய தலைமையில் நடத்தினால் அது எப்படி இருக்கும் என்ற பெருத்த சந்தேகம் எழக் கூடும் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலேயே காவிரி பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று சுமூகமான முடிவு காணப்பட வேண்டும்.

மோடி தலைமை

மோடி தலைமை

ஏற்கனவே இரண்டு முறை காவிரிப் பிரச்சினையிலிருந்து தன்னைத் தவிர்த்துக் கொள்ள முயற்சி செய்ததைப் போல இல்லாமல், இந்த முறையாவது உச்ச நீதி மன்றத்தின் கட்டளைப்படி ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற, பிரதமர் மோடி அவர்களே உடனடியாகத் தலையிட்டு இரு மாநில முதல்வர்களின் கூட்டத்தை தலைமையேற்று நடத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்!

English summary
DMK chief Karunanidhi requested PM Modi to be seated instead of Uma Bharathi in the Cauvery discussion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X