For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவின் 15 தீர்மானங்கள் - பகுதி 3

Google Oneindia Tamil News

DMK conference resolutions
திருச்சி: திமுகவின் திருச்சி மாநில மாநாட்டில் இன்று 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் குறித்த விவரம்

11. நெசவாளர் துயர் துடைத்திடுக!

தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியின்போது, ஒவ்வொரு ஆண்டும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்குடனும் - கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் விழா காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமென்ற நல்லெண்ணத்துடனும், உரிய நேரத்தில் ஆடைகள் உற்பத்தி செய்திடத் தேவையான நெசவுப் பொருள்களை கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு அளித்து வந்ததையும், அதன் மூலம் தயாரிக்கப்பட்ட இலவச வேட்டி - சேலைகள் விழா நாட்களுக்கு முன்பே, தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வந்ததையும் தமிழக மக்கள் நன்கறிவர்.
ஆனால், தற்போது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு பொங்கல் விழாவுக்கும் இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்திட, உரிய நேரத்தில் ஆணை வெளியிடாமலும், இலவச வேட்டி - சேலைகள் உற்பத்தி செய்வதற்கு நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேவையான நூல் மற்றும் கூலி முன்பணம் வழங்காமலும், ஒவ்வொரு ஆண்டும் காலதாமதப்படுத்தி, வெளிமாநிலங்களிலிருந்து வேட்டி - சேலைகளைக் கொள்முதல் செய்வதற்கான கட்டாய சூழ்நிலையை அ.தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கி வருகிறது.

இப்படிப்பட்ட குளறுபடிகளால் பொங்கல் விழாவுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலை பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், நெசவாளர்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வந்தது தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சி. ஆனால், தற்போதைய ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு, நெசவுத் தொழிலை நசுக்கி - நெசவாளர்களை நலிவடையச் செய்திடும் வகையில், அவர்களிடமிருந்து பன்மடங்கு நிலையான மின்கட்டணம் மற்றும் அதற்குரிய வரி ஆகியவற்றை வசூலித்து அவர்களை வேதனைக்குள்ளாக்கி வருவதை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

12. நெல்லுக்கும், கரும்புக்கும், தேயிலைக்கும் உரிய விலை

இன்றைய விலைவாசி உயர்வு, இடுபொருள்கள் விலை உயர்வு மற்றும் வேளாண்மைச் செலவினங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப, நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வழங்கிட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனையேற்று விவசாயிகளுக்கு கட்டுபடியாகக் கூடிய வகையில், உற்பத்திச் செலவை விடக் கூடுதலாக கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் என்று நிர்ணயித்து வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டுமென்றும்;
அது போலவே, 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் "கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தப்படும்" என்று அறிவித்தார்கள். அதை நம்பி விவசாயிகள் எல்லாம் வாக்களித்து இவர்களை ஆட்சியிலே அமர வைத்து, மூன்றாண்டுகள் ஆகின்றன. கரும்பு வெட்டுக் கூலி மற்றும் வாகன வாடகையை, சர்க்கரை ஆலை நிர்வாகங்களே ஏற்க வேண்டுமென்றும், கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு 3,000 ரூபாயாக வழங்க வேண்டுமென்றும் கரும்பு விவசாயிகள் கடந்த ஆண்டிலேயே கோரிக்கை வைத்தார்கள். ஆனால் இன்னமும் டன்னுக்கு 2,650 ரூபாய் என்ற அளவில் தான் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்றி கரும்பு கொள்முதல் விலையை குறைந்த பட்சம் டன் ஒன்றுக்கு 3,500 ரூபாயாவது வழங்கிட இந்த அரசு முன் வர வேண்டுமென்றும், இம்மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள தேயிலை விவசாயம், தற்போதுள்ள விவசாய இடு பொருள்களின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர். ஆகவே, அத்தொழிலையே வாழ்வாதாரத்தின் அடிப்படையாகக் கொண்டு நம்பி எதிர்பார்த்திருக்கும் விவசாயிகளைக் காப்பாற்றும் பொருட்டு 1 கிலோ பச்சைத் தேயிலைக்கு ரூபாய் 25 என கொள்முதல் விலை நிர்ணயம் செய்திட வேண்டுமென அ.தி.மு.க. அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

13. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1989ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கித் தர வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் 2-7-1990 அன்று நியமனம் செய்யப்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அவர்கள் நியமனம் பெற்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் மீதும் சினம் கொண்டு, அ.தி.மு.க. ஆட்சி அமைந்த போதெல்லாம் அவர்களைப் பணி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பி வந்தார்கள். இதுபற்றிய வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று, அங்கே அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யலாம் என்ற உயர் நீதி மன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும் அந்த உத்தரவில் "வழக்கை மறுவிசாரணை செய்து, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். தமிழக அரசு வழக்கை ஒத்தி வைக்குமாறு கோரக்கூடாது. 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களின் வாழ்க்கையை அரசு பாழடித்துள்ளது, கண்டிக்கத்தக்கது. இருபது வருடம் அரசுக்காக அவர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர் என்பதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும்" என்று உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், மக்கள் நலப் பணியாளர்கள் மீது அ.தி.மு.க. அரசு கொண்டிருக்கும் பழி வாங்கும் போக்கை கை விட்டு உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கும்வரை காத்திருக்காமல், மக்கள் நலப் பணியாளர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றிடத் தாமாகவே முன் வரவேண்டுமென்று இம்மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

14. கோதுமைக்கு உள்ள சலுகை, அரிசிக்கு ஏன் இல்லை?

மத்திய நிதித்துறை அமைச்சகம் கடந்த 27-12-2013 அன்று "நிதிச்சட்டம் பிரிவு 65 (பி) எஸ்" என்றொரு புதிய சட்டப் பிரிவை உருவாக்கியது. அதில் அரிசி வேளாண் விளைபொருள் இல்லை என்பதால், மத்திய, மாநில அரசுக் கிடங்குகளில் அரிசியை இருப்பு வைத்திருந்தால், இருப்பு வைக்கப்படும் அரிசிக்கு கிட்டங்கிகளுக்கான மாத வாடகையோடு, சேவை வரியும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் முன் தேதியிட்டு 1-7-2012இல் இருந்தே அமலுக்கு வருகிறது என்று கூறி 18 மாதங்களுக்கு உண்டான சேவை வரியையும் சேர்த்துக் கட்ட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது." அரிசிக்குச் சேவை வரி விதித்தது போலவே பருத்திக்கும் மத்திய அரசு இந்தச் சட்டத்தின் மூலம் சேவை வரி விதித்துள்ளது. அரிசிக்கும், பருத்திக்கும் சேவை வரி விதித்துள்ள மத்திய அரசு கோதுமைக்கு மட்டும் சேவை வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.

மத்திய அரசு கோதுமையை அடிப்படை உணவாகக் கொள்ளும் வட மாநிலங்களைச் சார்ந்த மக்களுக்கு ஒரு நீதி, அரிசியை அடிப்படை உணவாகக் கொண்டிருக்கும் தென்னக மக்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் சமநீதி வழங்கக்கூடிய வகையில் அரிசிக்கு மட்டும், விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியையும், ஏற்கனவே பஞ்சாலைத் தொழில் நலிந்த காரணத்தால் அவதிப்படும் நெசவாளர்களை மேலும் பாதித்திடும் பருத்திக்கான சேவை வரியையும் உடனே ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை இம் மாநில மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

15. சிதைந்து சின்னாபின்னமாகும் சட்டம் - ஒழுங்கு நிலை.

ஜெயலலிதா 2011ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாள் முதல் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது சிதைந்து சின்னாபின்னமாகி, தற்போது முழுவதுமாக கெட்டுப் போய்விட்ட நிலைமை உருவாகியுள்ளது. சரிந்து விட்ட சட்டம் ஒழுங்கை மீட்டு, பொது மக்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டியதை விடுத்து, தன் அதிகாரத்தின் கீழ் உள்ள காவல் துறையின் முழு நேரக் கவனத்தையும் எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குகின்ற நடவடிக்கைக்குத் திருப்பி விட்டு, சட்டம் ஒழுங்கு சீர் குலைவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவே முழு முதல் காரணமாக இருந்து வருகிறார்.

மக்கள் நலன் - நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்கும் ஆக்கப் பூர்வமான நியாயமான கருத்துகளையும் விமர்சனங்களையும் கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய ஜனநாயக உணர்வு ஜெயலலிதாவுக்கு சிறிதும் இல்லை. அவரது அகம்பாவப் போக்கின் காரணமாக சட்டம், ஒழுங்கு முறையாகப் பேணப்படாமல் சமூக விரோத நடவடிக்கைகள் பல்கிப் பெருகி தமிழ்நாட்டில் எந்தவொரு பகுதியும் மக்கள் அமைதியாகவும், சுமூகமாகவும் வாழ்வதற்கு பாதுகாப்பானதாக இல்லாமல் போய் விட்டது. தமிழகத்தில் கொலை நடக்காத நாள் இல்லை; கொள்ளை நடக்காத ஊர் இல்லை; திருட்டு, செயின் பறிப்பு நடக்காத தெரு இல்லை; என்று சொல்லும் அளவுக்கு கடும் குற்ற நிகழ்வுகள் கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருகின்றன.

ஏன்? அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் வீட்டிலேயே 50 இலட்சம் ரூபாய் கொள்ளை என்கிற அளவுக்கு சட்டமும் ஒழுங்கும் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் மோசமாகி விட்டது. பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. பாலியல் கொடுமைகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. கூலிப் படையினரின் அட்டூழியங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. மொத்தத்தில் தமிழகமே அபாயகரமான பூமியாக மாறி விட்டது. இவ்வாறு சட்டம் ஒழுங்கு நிலைமை அழுகிப் போய் விட்டதைச் சிறிதும் உணராமல், தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லிக் கொண்டே ஜெயலலிதா மாய்மாலம் செய்து வருவதை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.

English summary
Here are the DMK conference resolutions adopted in the Trichy meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X