• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ரயில்வேத் துறையை தனியாரிடம் ஒப்படைப்பதா? ! மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம் !!

|

சென்னை : நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான ரயில்வேத் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் பரிந்துரைக்கு தி.மு.க. தலைவர் கருணாதநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியமிக்கப்பட்ட விவேக் தேவ்ராய் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியுள்ளதாவது...

நவரத்னா என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இலாபம் வரக்கூடிய பல பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் இலக்கு நிர்ணயித்து மத்திய பா.ஜ.க. அரசு மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய போக்குவரத்து நிறுவனமான ரெயில்வே துறையிலும் தனியார் மயத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சியிலே அக்கறை காட்டத் தக்க வகையில், நரேந்திர மோடி அவர்கள் அமைத்த நிபுணர் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்குத் தந்துள்ளது.

பல இலட்சம் தொழிலாளர்கள் பணிபுரியும் ரெயில்வே துறையைச் சீரழிக்கும் வகையிலான பல்வேறு பரிந்துரைகளை "சீர்திருத்தம்" என்ற பெயரில் இந்த நிபுணர் குழு மத்திய அரசுக்குச் செய்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசின் அமைச்சகம் ஆய்வு செய்துவிட்டு, பின்னர் பிரதமர் அலுவலகத் திற்கு கோப்பினை அனுப்பி வைக்க உள்ளது.

இந்தக் குழு செய்துள்ள பரிந்துரைகளையெல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளில் நடைமுறைப்படுத்தினால், அதன் பின்னர் ரெயில்வேக்கு என்று தனியாக பட்ஜெட் ஒன்றே தேவைப்படாது என்று ஜனநாயக ரீதியிலான கருத்துப் பரிமாற்றங்களையும், விவாதங்களையும் புறந்தள்ளக்கூடிய வகையில், இந்தக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் ரெயில்வே துறையை சமூக அக்கறையற்ற, இலாப நோக்கம் மட்டுமே கொண்ட நிறுவனமாக மாற்றிடும் வகையிலான பரிந்துரை களாக உள்ளன.

எனவே மத்திய பா.ஜ.க. அரசு, கோடிக்கணக்கான ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன்களையும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத் தையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்தப் பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் என்று அறிவிப்பதே நன்மை பயக்கும் செயலாக அமைந்திடும்!

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்குச் சொந்தமான குழுமம், தமிழகத்தில் 1400 கோடி ரூபாய் மதிப்பில் 200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட் டுள்ளதாகச் செய்தி வெளிவந்துள்ளது.

இதையும் ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்துவதற்கான பேச்சு வார்த்தைகளும் அ.தி.மு.க. அரசுடன் நடைபெற்று வருகிறதாம். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கு மேல் முறையீட்டில் ஜெயலலிதா பெற்றிருக்கும் விடுதலைக்கும், அதானியின் இந்தச் சூரிய மின் சக்தி நிலைய ஒப்பந்தத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக யாரோ சிலர் கூறினால், அதில் உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது!

தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலைப் பல வழிகளிலே குறைத்து விட்டது! விவசாயிகள் பாலைக் கறந்து கூட்டுறவு சங்கங்களுக்குக் கொண்டு வந்தால், அந்தப் பாலை முழுவதுமாகக் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்களாம்.

கொள்முதல் செய்யும் பாலுக்கான பணத்தையும் உடனடியாகப் பட்டுவாடா செய்யாமல் இழுத்தடிக்கிறார்களாம். "கமிஷன்" கொள்ளை நடத்துவதற்காக, தனியார் வியாபாரிகள் இடைத்தரகர்கள் மூலமாக பாலைக் கொள்முதல் செய்து அதிக விலைக்கு விற்கிறார்கள்.

பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஆங்காங்கு போராட்டம் நடத்தியும், இந்த அரசினர் அதைப்பற்றிக் கவலையேபடுவதில்லை! பால் உற்பத்தியாளர்கள், அல்லல்பட்டு ஆற்றாது வடித்திடும் கண்ணீருக்கு, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை!

டெல்லியிலிருந்து வெளிவரும் "பார்வர்டு பிரஸ்" என்ற மாதம் இருமுறை இதழில் பெரியார் பற்றி கூறியிருந்ததை, "விடுதலை" நாளேட்டில் முழுவதுமாக மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

அதில் ஆதிக்கச் சாதியினரின் சர்வாதிகாரத்தைச் சாமானிய மக்களிடம் விளக்கி மகத்தான வெற்றி பெற்ற மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார் என்றும், அவருடைய கருத் துக்கள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவை என்றும், அந்தக் கருத்துக்களை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டுமென்றும் எழுதியிருக்கிறது.

பெரியார் போன்ற தலைவர்களின் கருத்துக்களால்தான் இந்தியா இன்று சமூக நீதிக் களத்தில் முன்னேற்றம் பெற்று வீர நடைபோடுகிறது. தற்போது இந்துத்துவாக் கொள்கை களைப் போற்றும் ஆட்சியாளர்களால் சமூக நீதிக்குச் சிறிது பின்னடைவு ஏற்படத் துவங்கியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் பெரியாரின் கருத்துக்களுக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுத்து இந்தியா முழுவதும் கொண்டு செல்லக் கடமைப்பட்டுள்ளோம் என்றெல்லாம் அந்த இதழில் செய்தி வந்துள்ளது. காலந்தோறும் பெரியார், மனித குலத்துக்குத் தேவைப்படும் மாமருந்து என்பது அசைக்க முடியாத உண்மை!

தடியெடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்" என்பார்களே; அதனைப் போல மத்திய அரசின் பா.ஜ.க. அமைச்சர்கள் ஒவ்வொரு நாளும், சமூக முரண்பாடாக ஏதாவது சொல்லி வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக் கிறார்கள்.

பெரும் பின்னடைவைத் தந்து கொண்டிருக்கும் அந்த வரிசையில் தற்போது, மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர், மகேஷ் சர்மா கூறும்போது, "இராமாயணா சர்க்யூட்" என்கிற பெயரில், இராமாயணத்தைப் பரப்புவதற்கான பல்வேறு செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக, இராமாயணத்தில் கூறப்பட்டவைகளைக் கொண்டு அயோத்தியாவில், "இராமன் அருங்காட்சியகம்" அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத் திட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன் எவ்வளவு நிதி இருக்கிறதோ அந்த அளவுக்குச் செய்யப்படும்" என்றெல்லாம் அவர் தெரிவித்திருக்கிறார். இந்திய தொல் பொருள் துறையின் தலைவராக உள்ள ராகேஷ் திவாரி கூறும்போதோ, "இராமாயணா சுற்று குறித்த விவாதங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளன. அதன் செயல்பாடுகளில் சுற்றுலாத் துறைக்கு இயன்ற அனைத்து உதவிகளையும், தொல் பொருள் துறை செய்யும்" என்று தெரிவித்திருக்கிறார்.

அயோத்தி சர்ச்சை நாடெங்கிலும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தச் சர்ச்சையை மீண்டும் தட்டி எழுப்பும் விபரீதத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இறங்கி யிருப்பதாகத் தோன்றுகிறது.

அயோத்தி - மதுரா - காசி என்ற ஆர்.எஸ்.எஸ். இலக்கிலிருந்து பா.ஜ.க. அரசு பின்வாங்காது போலிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, மத்திய பா.ஜ.க. அரசு திருந்தாது, யாராலும் திருத்தவும் முடியாது என்ற ஏமாற்றத்தைத்தான் ஏற்படுத்துகிறது!

யோகாவை பெரிதும் விரும்புபவன் தான் நான்! இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்தில் நானும் அன்றாடம் யோகா செய்து கொண்டிருந்தவன் தான். யோகக் கலையில் வல்லுனரான தேசிகாச்சார் அவர்களிடம் அந்தக் கலையைக் கற்றுக் கொண்டேன். அந்தக் கலையை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் என் விருப்பம்தான்.

நான் எழுதிய ஒரு கட்டுரையிலே கூட, "நடைப் பயிற்சி மூலம் முக்கியமாக உடலின் எடையைக் குறைப்பது - மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசப் பைகளை முறையாக இயங்கச் செய்வது - குருதியோட்டத்தைச் சீராக்கிக் கொள்வது - அதன் அடிப்படையில் இருதயத்துக்குப் பாதுகாப்பு உருவாக்கு வது - யோகப் பயிற்சி மூலம் எலும்புகள், நரம்புகளுக்கு வலுவூட்டுவது - தியானப் பயிற்சி மூலம் மன அமைதி காண்பது; இவை போன்றவை வாழ்வுக்கு இன்றியமையாதவை" என்றே தெரிவித்திருக்கிறேன்.

ஆனால் அரசின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது பற்றி தோழர் சீத்தா ராம் யெச்சூரியிடம் கருத்து கேட்ட போது, அவர் கூறியது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.

அதாவது "நாட்டிலே உள்ள குழந்தைகளில் 1 கோடியே 95 இலட்சம் குழந்தைகள் முறையாக உணவு கிடைக்காமல், பசி, பட்டினியோடு படுக்கச் செல்கிறார்கள்; 24 சதவீதத்தினர் போதிய சத்துணவு இன்றி வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மோசமான நிலையிலே இருக்கும்போது அவர்களால் எப்படி யோகாசனம் செய்ய முடியும்? 3 வயதுக்கும், 6 வயதுக்கும் இடையிலான குழந்தை களைப் பராமரிப்பதற்காக அங்கன்வாடி உட்பட பல திட்ட ஊழியர்களை முந்தைய அரசு அமர்த்தியிருந்தது.

பா.ஜ.க. அரசு இத்திட்டங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கு முறையான ஊதியம் அளிக்காதது மட்டுமல்ல; இத்திட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாக இருக்கிறது. இந்த நிலையில் சர்வதேச யோகா தினம் என்பது இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலில் ஓர் அங்கமே யொழிய வேறல்ல" என்று கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் யெச்சூரியின் கருத்தும் சிந்தித்துப் பார்க்கத்தக்கதே!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் உச்ச நீதிமன்றத்திலே நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்களே, கடந்த ஒரு மாதமாக பல்வேறு சமூக வலை தளங்களில், இன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறி வருகிறார்.

பல்வேறு மூத்த பத்திரிகையாளர்களுக்கும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களுக்கும், மத்திய அரசுக்கும் அவரிடம் உள்ள ஆதாரங்களை யெல்லாம் கொடுத்து, அது பற்றி விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பதோடு, அவற்றுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம் அளிக்கும்படியும் கட்ஜு அவர்கள் வலியுறுத்தி வருகிறார்.

அவர் கூறுகின்ற குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படியும், இல்லையென்றால் தன் மீதே நடவடிக்கை எடுக்கலாம் என்றும் வெளிப்படையாகச் சவால் விடும் பாணியில் தெரிவித்திருக்கிறார்.

குற்றம் சாட்டுபவரும் சாதாரணமானவரல்ல; குற்றம் சாட்டப்பட்டவரும் சாதாரணமானவரல்ல! இந்த நிலையில் குழப்பத்திலிருந்து விடுபட சாதாரணப் பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா? உண்மையைத் தெரிவித்திடக் கடமைப்பட்டவர்கள் ஊமை வேடம் அணிந்து கொள்ளலாமா?

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்து ஓராண்டு முடிந்த பிறகும், அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக போராட்டம் நடைபெற்றுள்ளது.

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை அமல்படுத்தினால், 22 இலட்சம் முன்னாள் ராணுவத்தினரும், போரில் கணவனை இழந்த 6 இலட்சம் பெண்களும் பயனடைவார்களாம்.

எனவே மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் இனியும் காலம் கடத்தாமல், உடனடியாக இதுகுறித்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இந்தக் கோரிக்கை இடம் பெற்றிருக்கிறது என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

கொள்ளை போகின்ற செய்திகள் வருகின்றனவே தவிர, எந்தக் கொலையையாவது, கொள்ளையையாவது காவல் துறையினர் கண்டு பிடித்ததாகச் செய்தி வருகிறதா? அதுதான் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலே உள்ள காவல் துறையின் "அசாத்தியத் திறமை"!

தமிழக அரசின் மூத்த அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மாநில அமைச்சர் ஒருவரையும், வேளாண்மை பொறியியல் துறை தலைமைப் பொறியாளரையும் கைது செய்ததும், பிறகு அவர்களை ஜாமீனில் விட்டதும் மேலிடத்தையும் மற்றும் பலரையும் காப்பாற்றுவதற்கான நட வடிக்கை என்று அனைவராலும் சொல்லப்படுவது நூறு சதவிகித உண்மையாகும்.

இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் சி.பி., சி.ஐ.டி., துறை விசாரித்தால் உண்மை வெளிவராது என்றும், அரசு நினைப்பது போலத்தான் விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மை வெளிவரக் கூடாது என்பதற்காகவே சி.பி.ஐ. விசாரணை மறுக்கப்பட்டது.

தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்பது, உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக, அரசு என்ன எண்ணுகிறதோ, அவ்வாறே விசாரணைகளை நடத்துகின்ற ஓர் அமைப்பாகவே உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் இந்த வழக்கு பற்றி கூறும்போது, "வழக்கு சி.பி.ஐ.க்குச் சென்றால், கூடுதலாக பலர் சிக்கக்கூடும் என்பதால், அதனைத் தடுக்கத்தான் இருவரை மட்டும் கைது செய்தார்கள்.

கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் அறுபது நாட்களாக ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? கண் துடைப்பாக கைது செய்யப்பட்டவர்கள், இப்போது ஜாமீனில் சென்று விட்டார்கள்.

தமிழகத்தில் சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கும் பல வழக்குகளில் நிலைமை திருப்திகரமானதாக இல்லை. எனவே இந்த வழக்கும் கிடப்பில் போடப்படுமா என்ற சந்தேகம் உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார். இதே கருத்தைத்தான் ராகுல் காந்தி ரத்த தான கழக நிறுவனர் வழக்கறிஞர் பிரம்மா என்பவரும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் உஸ்மான்கான் என்பவரும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆவின் பால் ஊழல் உள்ளிட்ட ஏனைய பல வழக்குகளைப் போலவே இந்த வழக்கும் ஒன்றுமில்லாமல் ஆகி, ஊறுகாய்ப் பானைக்குப் போய் விடும் என்று தான் இப்போது கூறுகிறார்கள்.

செம்மரக் கடத்தலில் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கு உதவியாக ஆளுங் கட்சியைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் இருந்ததாகச் செய்திகள் வந்ததே தவிர, அவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களின் பெயர்களையும், விவரங்களையும் மூடி மறைப்பதற்குத்தான் மிகப் பெரிய முயற்சி நடைபெற்று வருகிறதாம்!

இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களில் சிலர் அரசியலில் மிகப் பெரிய பதவிகளிலே இருப்பதால், அவர்களைக் காப்பாற்று வதற்கு முயலுகிறார் களாம்.

இதுபற்றிக் கூட வேலூரில் செய்தியாளர்களிடம் ஆந்திர மாநில செம்மரக் கட்டைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரன் என்பவர் நேற்று கூறும்போது, செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் கலால் டி.எஸ்.பி., தங்கவேலுவைக் காப்பாற்ற, வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டிய தங்கவேலுவை மூன்றாவது குற்றவாளியாகச் சேர்த் துள்ளனர். இந்த வழக்கு "குற்றம் நிரூபிக்கப்பட வில்லை" எனக் கூறி தள்ளுபடி செய்யப்படும். அந்த வகையில் வழக்கு விசாரணை மோசமாக இருக்கிறது.

தங்கவேலுவுடன் ஒரே பேட்ச்சில் பயிற்சி பெற்ற டி.எஸ்.பி.க்கள் தான் இப்போது இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் உள்ளனர். இந்த வழக்கில் அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கை மாறி உள்ளதால், அவர்கள் தங்கவேலுவைக் காப்பாற்றவே முயற்சி செய்கின்றனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியும், இரண்டாவது குற்றவாளியும் தங்கவேலு குறித்து விசாரணையில் சொன்ன முக்கிய தகவல்களைப் பதிவு செய்யவே இல்லை. தங்கவேலு ஜாமீனில் வெளியே வந்துவிட்டால், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், கோல்கத்தாவுக்கு கடத்தப்படுவது நிச்சயம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் எப்படியெல்லாம் உயர் பதவிகள் வகிக்கும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் சட்டத்தை நொறுக்கும் காரியங்கள் வேகமாக நடைபெறுகின்றன என்பதை ஆந்திர மாநிலக் காவல் துறை அதிகாரி ஒருவரே செய்தியாளர்களிடம் விவரித்திருக்கிறார். அவர் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல.

இவ்வாறு கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
 
 
English summary
DMK Leader Karunanithi condems to privatization of Railway Department
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X