• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழகத்தை அழிக்க கற்பனை குதிரையில் சவாரி செய்தவர்களின் தோல்வி.. உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்

By Mohan Prabhaharan
|

சென்னை : கற்பனை குதிரையில் சவாரி செய்து, கழகத்தை வீழ்த்தி விடலாம் என நினைத்த அரசியல் எதிரிகளுக்கும் இனப் பகைவர்களுக்கும் இந்த தீர்ப்பு தோல்வியை கொடுத்து உள்ளதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

2ஜி ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தி.மு.க.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா எம்.பி கனிமொழி ஆகியோரை நேற்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக தமிழகமெங்கும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாகவும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி வகையிலும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் இனி மீண்டும் தி.மு.க வீறு கொண்டு எழும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில்,

 எத்தனை அவதூறுகள் ...?

எத்தனை அவதூறுகள் ...?

அப்பப்பா.. எத்தனை அவதூறுகள், எத்தகைய அவமானங்கள்.. என்னென்ன பழிச்சொற்கள்! அத்தனையையும் சட்டரீதியான போராட்டத்தின் மூலம் வென்றுகாட்டி, நீதியின் முன் தன்னை நிரூபித்துள்ளது நம் உயிரணைய இயக்கமாம், திராவிட முன்னேற்றக் கழகம்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அவர்கள் வழங்கியுள்ள வரலாற்று தீர்ப்பு, தி.மு.க மீது நிரந்தரமான ஒரு கறையை படிய வைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு எல்லாம் சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.

 தவறான குற்றச்சாட்டு

தவறான குற்றச்சாட்டு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஆ.ராசா 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்குவதில், இந்திய மக்களின் நலன்கருதி பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாக, இந்தியா முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியது. அதே நேரத்தில் செல்போன் பயன்பாட்டுக்கான கட்டணம் வெகுவாக குறைந்தது. தொலைத் தொடர்புத்துறையில் ஓர் அமைதிப்புரட்சியாக இவை நிறைவேறிய நிலையில், மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் அளித்த அறிக்கையில், 2ஜி ஒதுக்கீட்டினால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்ற அனுமானக் கணக்கை வெளியிட்டார்.

 தி.மு.க.,விற்கு எதிரான சதி வலை

தி.மு.க.,விற்கு எதிரான சதி வலை

நடைமுறைக்கும்- அனுமானத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதவர்கள் மட்டுமல்ல, தெரிந்தவர்களும் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக 2ஜி ஊழல் என அதை ஊதிப் பெரிதாக்கினர். தலைவர் கருணாநிதியின் ஆலோசனையுடன் செயல்பட்ட மத்திய அரசில் அங்கம் வகித்தவரான ஆ.ராசா மீது இதனால் பெரும்பழி சுமத்தப்பட்டது. அதுபோலவே, கழக மாநிலங்களவைக் குழுத் தலைவராக உள்ள சகோதரி கனிமொழி எம்.பி. மீதும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோரும், பரபரப்பை வித்திடுவதில் பெயர் பெற்ற ஊடகங்களும் நாள்தோறும் 2ஜி விவகாரத்தை பூதாகர மாக்கி, தேர்தல் களத்தில் தி.மு.கழகத்திற்கு எதிரான சதிவலைகளைப் பின்னத் தொடங்கினர்.

 மறைக்கப்பட்ட உண்மைகள்

மறைக்கப்பட்ட உண்மைகள்

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் பரப்புரைகளும், வழக்குகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. எந்த நெருக்கடியையும், எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளும் வலிமை மிகுந்த இயக்கமான தி.மு.க., 2ஜி வழக்கையும் துணிவோடு சட்டரீதியில் எதிர் கொண்டது.

ஆ.ராசாவும், கனிமொழியும் மாதக்கணக்கில் சிறைப்பட நேர்ந்தபோதும், ஊடகங்களில் உண்மை மறைக்கப்பட்டு, அவதூறுகள் பரப்பப்பட்ட நிலையிலும், அதன் காரணமாக தேர்தல் களங்களில் தி.மு.க. பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போதும், 2ஜி வழக்கை உறுதியுடன் எதிர்கொண்டது தி.மு.கழகம். முக்கியமாக, ஆ.ராசா அவர்களின் மீது தலைவர் கலைஞர் அவர்கள் முழு நம்பிக்கை வைத்து, அதனை பொதுக்கூட்ட மேடையிலேயே வெளிப்படுத்தி, "அநீதி வீழும்.. அறம் வெல்லும்", என்று உறுதிபட தெரிவித்தார்.

 கழகத்தின் மீதிருந்த கறை

கழகத்தின் மீதிருந்த கறை

‘மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் இருக்கும்?' வழக்கு என்றாலே, வாய்தாமேல் வாய்தா வாங்கும் வாய்ச்சொல் வீராங்கனைகளை பார்த்த மண்ணில், ஒருமுறைகூட வாய்தா வாங்காமல் 2ஜி வழக்கை தி.மு.க. எதிர் கொண்டது. ஏறத்தாழ 7 ஆண்டுகள் நடை பெற்ற இந்த வழக்கில் 2017 டிசம்பர் 21 ஆம் தேதியன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.ஷைனி, இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆதாரமற்றவை - கற்பனையானவை என்ற அடிப்படையில் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தபோது, இந்திய அளவில் கழகத்தின் மீது சுமத்தப்பட்ட பெரும்பழி நீங்கிய மகிழ்ச்சியை கழகத்தின் ஒவ்வொரு தொண்டரின் முகத்திலும், அகத்திலும் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

 தி.மு.க தொண்டர்கள் உற்சாகம்

தி.மு.க தொண்டர்கள் உற்சாகம்

1200 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக சி.பி.ஐ. சுமத்திய குற்றச்சாட்டுகளை அலசி, ஆராய்ந்து தீர்ப்பை எழுதியிருக்கும் நீதிபதி ஓ.பி.ஷைனி குறிப்பிட்டிருக்கும் சில வாசகங்கள், இந்த வழக்கின் அரசியல் பின்னணியையும், சதிச்செயல்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. தலைவர் கலைஞரிடம் தீர்ப்பின் விவரங்களை தெரிவித்தபோது, அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கழக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் உயிரணைய இயக்கத்தின் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி, உதயசூரியன் ஒளிபட்ட பனிபோல் விலகியதைக் கண்டு ஆர்ப்பரித்து, அக மகிழ்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

 என்றைக்கும் மறக்க முடியாது

என்றைக்கும் மறக்க முடியாது

நெடிய சட்டப்போராட்டத்தில் தி.மு.கழகத்தின் பக்கம் நின்றவர்களை எல்லாம் என்றைக்கும் மறக்க முடியாது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தோழமைக் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் அமைச்சரும மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் உள்ளிட்ட பலரும் இந்த நியாயமான தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அவர்களுக்கும் என நெஞ்சார்ந்த நன்றி.

 வீறு நடை போடும் தி.மு.க

வீறு நடை போடும் தி.மு.க

கற்பனை குதிரையில் சவாரி செய்து, கழகத்தை வீழ்த்தி விடலாம் என நினைத்த அரசியல் எதிரிகளுக்கும் இனப் பகைவர்களுக்கும், நீதியின் துணையுடன் பதிலடி தந்துள்ளது கழகம்.வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை வெற்றிக் கொண்டாட்டமாக கழகம் முன்னெடுக்கும். தலைவர் கலைஞர் சொன்னது போல, அநீதி வீழ்ந்து, அறம் வென்றுள்ளது. அடுத்தடுத்த வெற்றிகள் தொடரும் வகையில் கழகம் எழுச்சி யுடன் வீறுநடை போடும். எதிரிகளின் எண்ணங்கள் தவிடுபொடியாகும் என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

 
 
 
English summary
DMK Leader Writes Letter to His party Cadres and Alliance Party Leader for Supporting them in 2G Case Verdict . He also says that this verdict is now setback new path for DMK again.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X