For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்காடு இடைத் தேர்தல்.. திமுக பிரசாரத்தில் கோஷ்டிப் பூசல் தலை தூக்குகிறதா..?

Google Oneindia Tamil News

DMK men upset over the groupism in Yercaud by poll campaign
ஏற்காடு: ஏற்காடு சட்டசபை இடைத் தேர்தலில் திமுக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால் முதல் நாள் பிரசாரத்திலேயே கோஷ்டிப் பூசல் தலை தூக்கியதாக குமைச்சல் கிளம்பியுள்ளது.

நேற்று வேட்பாளர் மாறன், மாசிநாயக்கன்பட்டி ஸ்ரீ தொட்டிய மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து சாமி கும்பிட்டார். பின்னர் தனது பிரசாரத்தைத் தொடங்கினார் மாறன்.

ஆனால் பிரசாரத்தின்போது கோஷ்டிப் பூசல் வெடித்ததால், வேட்பாளர் மாறன் பிற்பகலுக்கு மேல் முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குமைந்து கொண்டிருக்கின்றனராம்.

சேலம் திமுகவில் வீரபாண்டி ஆறுமுகத்தின் காலத்தில் இருந்தே பல்வேறு கோஷ்டிகள் வெளிப்படையாகச் செயல்பட்ட நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சி.தமிழ்ச்செல்வன் ஏற்காடு தொகுதி வேட்பாளராக கட்சித் தலைமை முன் நிறுத்தப்பட்டார்.

ஆனால், ஸ்டாலின் ஆதரவாளரான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் அணி சார்பில் கட்சித் தலைமைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அயோத்தியாப்பட்டணம், பூவனூரைச் சேர்ந்த இளைஞரணி கிளைச் செயலர் மாறனே வேட்பாளராகத் தேர்வு பெற்றார்.

சீட் மறுக்கப்பட்ட ராஜாவை கட்சித் தலைமை சமாதானம் செய்து அனுப்பி வைத்தது.

இரு அணியினரும் ஒன்றிணைந்து வேலை செய்தால் அதிமுகவுக்கு தன்னால் கடுமையான போட்டியை அளிக்க முடியும் என்று மாறன் நம்பியிருந்தார். ஆனால், வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார தொடக்க நிகழ்ச்சியில் ராஜா அணியினர், சில நிமிஷங்கள் மட்டுமே பங்கேற்றுவிட்டு கழன்று கொண்டது மாறன் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மாவட்டப் பொறுப்பாளரான எஸ்.ஆர்.சிவலிங்கமோ பணி நிமித்தம் பிரசாரத்துக்கு வர முடியாது என்று கூறியிருந்த நிலையில், ராஜாவும் அவரது ஆதரவாளர்களும் தன்னுடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள் என்று மாறன் எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் அவருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், 4 வீடுகளுக்கு மட்டுமே சென்று மாறனுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு, ராஜாவும் அவரது ஆதரவாளர்களும் திரும்பிச் சென்றுவிட்டனர். இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே செல்வகணபதியும் திரும்பிச் சென்றார்.

நண்பகல் வரையிலும் மாறனுடன் இருந்த ராஜேந்திரன் ஆதரவாளர்களும் சென்றுவிடவே, மாலையில் அதிகாரிப்பட்டியில் நடைபெற்ற பிரசாரத்தில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியச் செயலர் விஜயகுமார் மட்டுமே உடன் இருந்தார். இதனால் மாறனின் ஆதரவாளர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி, இந்த கோஷ்டிப் பூசலுக்கு முடிவு கட்டி அனைத்துத் தரப்பினரையும் கண்டித்து பிரசாரத்தில் ஒற்றுமையைக் காக்க முன்வர வேண்டும் என்று உத்தரவிட்டால்தான் நல்லது என்று மாறன் ஆதரவாளர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
DMK men in Yercaud constituency are upset over the groupism in Yercaud by poll campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X