For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் நலனைவிட்டு சினிமா துறையில் கவனம் செலுத்துவதா? பாஜகவுக்கு திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் கண்டனம்

மக்கள் நலனில் அக்கறையில்லாமல் சினிமா துறையில் கவனம் செலுத்துவதா என்று பாஜகவுக்கு திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாமல் சினிமா துறையில் கவனம் செலுத்துவதா என்று பாஜகவுக்கு திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெர்சல் படம் குறித்து பாஜகவினர் கடந்த சில தினங்களாக விமர்சித்து வருகின்றனர். மெர்சல் பட வசனங்களுக்கு மக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் அமோக ஆதரவு உள்ளது.

DMK MLA Mano Thangaraj says condemns BJP on Mersal criticism

இந்நிலையில் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத ரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் கருத்துக்கள் ஏதும் பதிவு செய்யாத ஒரு திரைப்படம் ஒவ்வொரு சாதாரண மனிதனின் உள்மனத்தையும் பிரதிபலிக்கும் வண்ணமாக சில கருத்துக்களை பதிவு செய்திருப்பதை வரவேற்பதே கல்வியறிவுடையவர்களின் பெருந்தன்மை ஆகும். அரசாங்கங்கள் செய்து வரும் ஒவ்வொரு செயலையும் மக்கள் கை தட்டி வரவேற்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவறு.

ஜனநாயகத்தின் ஆணிவேரே கருத்து சுதந்திரம் தான். எதிர் கருத்து பதிவு செய்தால் அதற்கு அர்த்தம் கருத்து தெரிவித்தவர் தவறு செய்து விட்டார் என்பதோ அவரை தண்டிக்க வேண்டும் என்பதோ அல்ல. ஆட்சியாளர்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள மக்கள் சந்தர்ப்பம் அளிக்கின்றனர் என்பதே ஆகும். ஆனால் மக்களின் பிரச்சனைகளை ஒரு போதும் கண்டுகொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக அரசு ஏற்கனவே அலை விட்டு சென்ற நுரையாய் மக்கள் மனதில் இருந்து காணாமல் போய் விட்டது என்பதில் யாதொரு ஐயமும் வேண்டாம்.

அலை வருகிறது என்றும், அவ்வலை நாட்டின் அநேக பிரச்சனைகளை இழுத்துச் சென்று மக்களின் வாழ்க்கையில் வளமையை ஏற்படுத்தும் என்றும் பொய் புரட்டுக்களைக் கூறி மக்களை நம்ப வைத்து விட்டு, ஈவு இரக்கம் இல்லாமல் சாதாரண மக்களின் வாழ்க்கையை பாலைவனமாக்கும் 28% ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு, வியாபாரங்கள் வீழ்ச்சி, போன்ற பேரழிவுகளை கொண்ட பேயாய் உருவெடுத்தது சுனாமியை விடக்கொடியதாகும். இவ்வளவு பேராபத்தை விளைவிக்கும் பேரலையாய் இருக்கும் என்று தெரியாதவாறு தந்திரமாய் தனியார் நிறுவனம் மூலம் விளம்பரப்படுத்தி மக்களிடம் சூழ்ச்சி செய்து ஆட்சியை பிடித்து ஆர்.எஸ்.எஸ்.ன் நோக்கங்களை பூர்த்தியாக்கும் ஒரு சுயநினைவற்ற அரசு மத்தியில் இருப்பது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். அது ஒன்றே இந்தியாவின் பல்வேறு சிறப்பம்சங்கள் பாதுகாக்கப்பட வழிவகுக்கும்.

மக்கள் பாஜகவிற்கு இசை பாட வேண்டும் என நீங்கள் நினைப்பது, உங்கள் தவறுகளை நியாயப்படுத்த விழைகிறீர்கள் என்றே அர்த்தம். நீங்கள் சரியான செயலை செய்யும் போது நீங்கள் சொல்லாமலேயே மக்கள் உங்களை போற்றுவார்கள். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல, தாங்கள் செய்வதெல்லாம் சரி என்றும், மற்ற தலைவர்கள் செய்த அனைத்தும் தவறு என்றும் சித்தரிக்கும் இருண்ட மனப்பான்மை மாறி கல்வி என்னும் கதிரவனின் கதிர்கள் உங்கள் மனதில் உதிப்பதன் மூலம், நன்மை எது? தீமை எது? என்று பிரித்தறியும் பகுத்தறிவு பிறக்கட்டும்.

தமிழிசை, ஹெச். ராஜா, சுப்ரமணியசாமி போன்றோர் திரைவிமர்சனம் எழுதுவதை விட்டுவிட்டு இனியாவது நாட்டு மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது நல்லது. ஒரு மருத்துவராக, தமிழகத்தில் டெங்கு நோய் பரவி வரும் காலகட்டத்தில் தான் சார்ந்திருக்கும் கட்சியின் ஆட்சி மூலம் அதை தடுக்க எடுத்த முயற்சி என்ன?

மத்தியில் தங்களது கட்சி ஆட்சி நடத்தி வரும் சூழலில் ஜி.எஸ்.டி. வரியால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அரசிடம் எடுத்துக்கூற ஏன் முடியவில்லை? நீட் தேர்வில் தமிழக மக்கள் நலனுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? பத்திரிகையாளர்களை கொன்று குவிக்கும் கயவர்களை ஏன் கண்டு கொள்ளவில்லை? மாடு பாதுகாப்பு என்ற பெயரில் மரணவெறி தாக்குதல் நடத்தும் மனிதாபிமானமற்ற மாக்களை ஏன் நசுக்கவில்லை? ஏனெனில் மக்கள் நலன் அல்ல உங்கள் நோக்கம். மதத்தின் பெயரால், மனிதர்களிடையே பகையை உருவாக்கி ஆட்சியை தக்க வைப்பதே உங்கள் நோக்கம். இந்த மக்கள்விரோத செயல்களுக்கு நிச்சயம் அடுத்த தேர்தலில் மக்கள் தண்டனையளிப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, வீடு திரும்ப வழி தேடுவது நல்லது. அதுவே காலத்தின் கட்டாயமும் ஆகும்.

இவ்வாறு மனோதங்கராஜ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Padmanabhapuram MLA Mano Thangaraj condemns BJP party on Mersal issue instead they are not focussing on people interests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X