For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவில் இன்று முதல் 15-வது உட்கட்சித் தேர்தல்.. 5 மாதங்கள் நீடிக்கும்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் இன்று தொடங்கியது. இத்தேர்தலானது 5 மாதங்கள் வரை ஒவ்வொரு அமைப்பாக நடைபெற உள்ளது.

திமுகவில் இன்று முதல் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக திமுக கிளை கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது.

DMK party organisational elections begin today

திமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 1949ஆம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்புகள் முதல் தலைமைக் கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக, இதுவரை 14 பொதுத் தேர்தல்களை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும். தி.மு.கழக சட்டத்திட்டங்களின்படி, பல கட்டங்களாக கழக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும்.

இத்தேர்தலின் முதல் கட்டமாக கிளைக் கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் 2020 பிப்ரவரி 21ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. திமுக 15வது பொதுத் தேர்தலின் முதல் கட்டமான ஊர் கிளை - உட்கிளைக் கழகத் தேர்தலை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள - பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு மிகவும் பிடித்த - ஐய்யங்கார்குளம் கிராமத்தில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில், "1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 15வது பொதுத் தேர்தல் அண்ணாவிற்கு பிறகு கலைஞருக்குப் பிறகு தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை பொறுப்பு ஏற்ற பிறகு நடைபெறுகின்ற முதல் கழகத் தேர்தல். இந்த தேர்தல், 2020 பிப்ரவரி 21ம் தேதியிலிருந்து மார்ச் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கிளைக் கழக தேர்தல் இன்று துவங்குகிறது.

DMK party organisational elections begin today

தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 398 கிளைகளுக்கு இன்று முதல் தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த தேர்தல் மூலமாக 16 லட்சத்து 88 ஆயிரத்து 388 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்தியாவிலேயே சிறப்பாகவும் முறையாகவும் தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்" என்று கூறினார்.

இந்நிகழ்வில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் - உத்திரமேரூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகரன், ஒன்றிய செயலாளர்கள் க.குமணன், டி.குமார், பி.எம்.குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளைகழக தேர்தல்களைத் தொடர்ந்து ஒன்றியம் மற்றும் நகர செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். அதன் பிறகு மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் தேர்தல் நடத்தப்படும். இத்தனை தேர்தல்களும் நிறைவடைந்த பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்படும். அதில் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். பின்னர் கட்சி தலைமை, பல்வேறு அமைப்புகளுக்கான பொறுப்பாளர்களை நியமிக்கும்.

தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெறும். ஆகையால் தற்போதைய உட்கட்சித் தேர்தலை சுமூகமாக நடத்த வேண்டும் என விரும்புகிறது திமுக தலைமை.

English summary
DMK's party organisational elections began on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X