For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவில்பட்டியில் ஜாதி கலவரத்தை உருவாக்க திமுக சதி திட்டம்- வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவில்பட்டி: ஜாதி கலவரத்தை தூண்டிவிட திமுக முயற்சி செய்ததால் நான் கோவில்பட்டியில் போட்டியிடும் முடிவை கைவிட்டேன் என்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்த வைகோ திடீரென தனது கட்சியை சேர்ந்த விநாயகா ரமேஷ் என்பவரை வேட்பாளராக நிறுத்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார்.

இதன்பிறகு தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் இருந்தபடி வைகோ இதற்கான காரணம் குறித்து தெரிவித்தார். வைகோ பேசியதாவது:

 DMK plans to create caste rift among people says MDMK leader Vaiko

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் என் உயிரான கண்மணிகளுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அக்கட்சிகளின் தோழர்களுக்கும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும், அக்கட்சியின் தொண்டர்களுக்கும், தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் போட்டியிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சமூகங்களுக்கு இடையில் பகையையும், வெறுப்பையும் நெருப்பாக மூட்டி, அதன் வெப்பத்தில் குளிர் காய்ந்து தங்களை நிலைப்படுத்திக் கொள்ளத் தமிழ்நாட்டின் பல இடங்களில் பலர் முயல்கிறார்கள்.

நாம் 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றோம். வளரும் பிள்ளைகளிடம், பிஞ்சு உள்ளங்களில் கல்லூரி மாணவர்கள் இடையே, சாதி வெறி எனும் ஆலகால விஷம் திணிக்கப்படுகிறது.

தங்கள் சுயநலத்திற்காக, அரசியல் லாப வேட்டைக்காக, தங்களை அரசியல் தலைவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக, 1980க்குப் பின்னர் தீவிரமாகப் புறப்பட்டுள்ள சிலர், தமிழ்நாட்டின் வளமான எதிர்காலத்திற்கே உலை வைக்கும் கொள்ளிக் கட்டைகளைத் தூக்கித் திரிகிறார்கள்.

நான் போட்டியிடுவதாக அறிவித்த கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர், தான் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்; எங்களுக்கு 70000 வாக்குகள் இருக்கின்றன; வைகோ சார்ந்துள்ள சமுதாயத்திற்கு 52000 வாக்குகள்தான் உள்ளன; அதையும் போட்டி போடும் வேட்பாளர்கள் பிரித்துக் கொள்வார்கள். அதனால் நான்தான் வெற்றி பெறுவேன் என்று கூறுகிறார்.

இதைக் கண்டித்துத்துத் தி.மு.க. தலைமை எந்த அறிக்கையும் தரவில்லை. அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கா இந்தக் கதி?

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது சாதி மத வேறுபாடுகள் ஏதும் இன்றிப் பணி ஆற்றியுள்ளேன். வடக்கு திட்டங்குளம் கிராமக் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளும், ரேசன் கடையும் கட்டுவதற்கு எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணம் ஒதுக்கிக் கட்டித் தந்துள்ளேன்.

கோவில்பட்டி பிரச்சாரத்தில் என் முதல் நிகழ்ச்சியே வடக்கு திட்டங்குளம்தான். அந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம் நான் பசும்பொன் தேவர் திருமகனாரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அப்போதெல்லாம் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாகத் திரண்டு என்னை வரவேற்பார்கள்.

ஆனால், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் என்னை மையப்படுத்தி சாதி வேற்றுமையையும், சாதி மோதலையும் ஏற்படுத்த தி.மு.க. திட்டமிட்டு இருப்பது, ஆதாரபூர்வமாக எனக்குத் தெரிய வந்துள்ளது.

அதனால்தான், நேற்றைய தினம் திட்டங்குளத்தில் தி.மு.க.வினர் சிலர் தேவர் சிலையை நெருங்க விடாமல் கலவரம் செய்ய முனைந்தார்கள். நண்பகல் இரண்டு மணியில் இருந்தே முழு மது போதையில், சாதியைக் குறித்து என்னை வசைபாடிக் கொண்டே இருந்துள்ளனர்.

சாதியைக் குறித்தும், கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கர் உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்டதற்கு நான் கண்டனம் தெரிவித்ததையும், மருத்துவமனையில் கௌசல்யாவுக்கு நான் ஆறுதல் சொன்னதையும் குறிப்பிட்டு, தொடர்ந்து வெறிக் கூச்சல் போட்டுள்ளனர்.

நான் பிரச்சார வேனில் ஊருக்குள் சென்று, தேவர் சிலைக்குச் சற்றுத் தொலைவில் வேனை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி தேவர் சிலை நோக்கிச் சென்றபோது, பத்துப் பேர் கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டிக்கொண்டே, சங்கர் கொலையைப் பற்றிப் பேசினவனுக்கு இங்கே என்னடா வேலை? தேவர் சிலைக்கு மாலை போட விட மாட்டோம். மரியாதையாத் திரும்பிப் போ என்று கூச்சல் போட்டனர்.

அவர்கள் திட்டமிட்டுக் கலகத்திற்கு முனைகிறார்கள் என்பதை உணர்ந்து திரும்பி பிரச்சார வேனுக்குச் சென்றேன். நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன்; மாமன்னர் பூலித்தேவருக்குத் தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் கழுகுமலைக்கு அருகில் உள்ள சிதம்பராபுரத்தில் என் சொந்தச் செலவில், சிலை அமைத்தவன் நான். அவர் தேவர் என்பதற்காக அல்ல. வெள்ளையரை எதிர்த்து முதல் வாள் ஏந்தியவர் என்பதற்காக.

நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தேவர் சமூகத்து இளைஞன் வானமாமலையை ஒரு காரணமும் இல்லாமல் திட்டமிட்டுக் காவல்துறை ஆய்வாளர் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து, ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டி வட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே என் தலைமையில் உண்ணாவிரத அறப்போர் நடத்தினேன்.

அதில் பொது உடைமை இயக்கத்தின் தலைவர் அண்ணன் நல்லகண்ணு அவர்களும் கலந்து கொண்டார்கள்.
கொலையுண்ட இளைஞனின் மனைவிக்கு, அரசாங்க வேலையும் பெற்றுக் கொடுத்தேன்.

23.4.1979 அன்று, பனவடலிசத்திரத்தில் விவசாயப் போராட்டத்தின்போது, அய்யாப்பழம் என்ற காவல்துறை அதிகாரி மோதலில் கொல்லப்பட்டபோது, அந்தச் சம்பவத்திற்குத் தொடர்பு இல்லாத, வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நிரபராதிகளான பரமசிவத் தேவர், வெளியப்பத் தேவர் ஆகிய இருவருக்கு, நெல்லை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நான், பாளைச்சிறையில் இருந்தபோது, அவர்கள் இருவரும் என்னைச் சந்தித்துத் தங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் வேண்டினார்கள். தமிழ்நாட்டின் அன்றைய பிரபல வழக்கறிஞரும், பார்-அட்-லா படித்தவருமான கோவிந்தசாமிநாதன் அவர்களைக் கொண்டு அந்த வழக்கை என் சொந்தச் செலவில் நடத்தி, அவர்கள் இருவருக்கும் விடுதலை பெற்றுத் தந்தேன்.

தாழையூத்து காவல் நிலையத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், தேவர் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. ஒன்றியச் செயலாளர் புல்லையாவின் அண்ணன் மகன் பாண்டி கைது செய்யப்பட்டார். அவர்களது வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துத் தரை மட்டமாக்க முயன்றபோது, நான் குறுக்கே நின்று அதைத் தடுத்தேன்.

1991 நாடாளுமன்றத் தேர்தலில், கயத்தாறுக்கு அருகில் உள்ள காப்புலிங்கம்பட்டி என்ற, மறவர் சமுதாயத்தினர் மட்டுமே வாழ்கின்ற ஊரில், வாக்குப்பதிவு அன்று காவல்துறையினரைத் தாக்கி விட்டார்கள் என்று, அந்த ஊரையே சூறையாட ஆயிரம் போலீசார் கயத்தாரில் குவிக்கப்பட்டபோது, போலீஸ் டிஐஜி, எஸ்.பி.யிடம், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக, ஊரையே அழிக்கப் பார்க்கின்றீர்களே? ஊருக்குச் செல்லும் பாதையின் குறுக்கே நான் படுப்பேன்; என் பிணத்தின் மீதுதான் நீங்கள் ஊருக்குள் நுழைய முடியும் என்றேன்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, காவல்துறையினர் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டார்கள். ஊர் மக்கள் காளியம்மன் கோவிலுக்குப் படையல் செய்து, என்னை அழைத்து நன்றி தெரிவித்தார்கள்.

1996-இல், விருதுநகர் மாவட்டத்தில் தேவர் சமூகத்தினருக்கும், தேவேந்திர சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டு, இருதரப்பிலும் படுகொலைகள் நிகழ்ந்தன. அப்பொழுது, இருதரப்புக் கிராமங்களுக்கும் சென்ற என்னை மட்டும்தான் நள்ளிரவிலும் கூட மக்கள் காத்திருந்து வரவேற்றனர்.

வைகோ எல்லோருக்கும் பொதுவான ஆள்; அவர் மட்டும் ஊருக்குள் வரட்டும் என்று அனுமதித்தனர். ஒவ்வொரு ஊரிலும் இருதரப்பினரும் ஒற்றுமையாக வாழ மன்றாடினேன்.

இவற்றை எல்லாம் திட்டங்குளம் மக்களிடம் கூறியதோடு, கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பசும்பொன்னுக்குச் சென்று தேவர் திருமகனுக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகின்ற, தேவர் சமுதாயம் அல்லாத ஒரு அரசியல்வாதி நான்தான். ஓட்டு வேட்டைக்காகக் கடந்த இருபது ஆண்டுகளாக மற்ற தலைவர்கள் அங்கே வருகின்றார்கள்.

அப்படிப் பசும்பொன்னுக்குச் செல்வது, அத்தலைவர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. வங்கத்துச் சிங்கம் நேதாஜிக்கு அவர் வலதுகரமாகத் திகழ்ந்ததாலும், பிரம்மச்சரியத்தை ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவர் என்பதாலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசத்திற்குப் பாதுகாப்புக் கொடுத்தவர் என்பதாலும், அவை எல்லாவற்றையும்விட, எனக்குப் பத்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு வந்து பசும்பொன் தேவர் அவர்கள் என் தந்தையிடம் நீங்கள் இனிமேல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கக் கூடாது என்று கூறியபோது, அரைக்கால் சட்டை போட்ட சிறுவனாக இருந்த நான், அவரது தோற்ற கம்பீரத்தில் மனதைப் பறிகொடுத்ததாலும், அவர் மீது எனக்கு இனம் புரியாத பற்றுதல் ஏற்பட்டதாலும் பசும்பொன் செல்கிறேன் என்பதையும் சொன்னேன்.

எனது கோவில்பட்டி தொகுதிப் பிரச்சாரத்தின் முதல் நிகழ்ச்சி இது. இதில் தேவர் சிலைக்கு மாலை போட விடாமல் தடுத்து விட்டால், வைகோவை ஊர் மக்கள் விரட்டி அடித்தார்கள் என்று அனைத்து ஏடுகளிலும் செய்தி போடுவார்கள்; அதுதான் அவர்களது நோக்கம் என்பதை உணர்ந்துதான், தேவர் சிலைக்கு மாலை போட வருகிறேன்; எத்தனை பேர் அரிவாளோடு வருகிறீர்கள்? தேவர் சிலைக்கு மாலை போடாமல் இந்த ஊரை விட்டுப் போக மாட்டேன் என்று கூறி, என் காலணிகளை வேனிலேயே கழற்றி வைத்து விட்டு, கலகம் வரும் என எதிர்பார்த்து, கருப்பு சால்வையையும் வேனில் போட்டு விட்டு, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சிலையை நோக்கிச் சென்றேன்.

இதன்பிறகுதான், காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். வன்முறையில் ஈடுபட நான் கருதி இருந்தால், என்னோடு வந்த 50 க்கும் மேற்பட்ட தொண்டர் படை வீரர்கள், எனக்காகத் தங்கள் உயிரையும் தத்தம் செய்யும் தீரர்கள், என் சொல்லுக்கு அஞ்சியே மிகக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்கள்.

அவர்கள் அனைவருமே மறுகால்குறிச்சி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 1983இல் அண்ணன் கலைஞருக்காக நான் ஏற்படுத்திய தொண்டர் படையைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுள் பலர் நடுவயதை எட்டியதால், அவர்களது பிள்ளைகள் இப்போது எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, தெற்கு திட்டங்குளம் சென்று, அங்கே இமானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, விளாத்திகுளம் தொகுதிப் பிரச்சாரத்தை நான் தொடர்ந்தேன்.
எனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, இந்தத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் என்னை மையமாக வைத்து, தேவர் - நாயக்கர் சாதிக் கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க, தலைமையைத் தற்போது இயக்கிக் கொண்டு இருப்பவர் திட்டமிட்டு இருப்பதும், அந்த யோசனையை தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஊக்குவித்ததையும் நான் அறிய நேர்ந்தது. கோவில்பட்டி தொகுதி முழுவதும் கலவரம் நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன்.

என்னைக் குறிவைத்துச் சாதி மோதல் ஏற்படுவதையும், ரத்தக் களறி ஆக்க முனைவதையும் நினைத்துப் பார்க்கவே மனம் வேதனையில் துடிக்கின்றது.

சாதி வெறியும், சாதிய ஆணவமும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்கி விடும் என நான் உணர்வதால், அந்த அபாயகரமான சீர்கேட்டைத் தடுக்கவும், தமிழ்நாட்டின் ஜீவாதார, நீராதார நிலைகளையும் காக்கவும், நான் பிறந்த பொன்னாடாகிய தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வுக்குப் பாடுபடவும், புற்று நோயாகி வரும் ஊழலை அறவே ஒழிக்கவும், மதுக்கொடுமையில் இருந்து தமிழ்நாட்டை மீட்கவும், தரணியெங்கும் வாழும் தமிழர்களின் நலனைக் காக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிக்கவும் எஞ்சிய என் வாழ்நாளை அர்ப்பணிப்பது என முடிவு செய்துள்ளேன்.

ஐவரின் தியாகத் தணலில் உதயமான மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை எவரும் நெருங்க முடியாத எஃகுக் கோட்டையாக நிர்மாணிப்பேன். திராவிட இயக்கத்தில் ஒளி வீசுகின்ற தந்தை பெரியாரின் சுயமரியாதையுடன், அண்ணாவின் இலட்சியக் கனவுகளை நனவாக்கி வெற்றி பெறுவேன் என்று என் நெஞ்சுக்குள் தவம் செய்து, சபதம் பூண்டுள்ளேன்.

இந்தப் பின்னணியில், 2016 மே 16 இல் நடைபெற இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், நான் போட்டியிடுவது இல்லை என்றும், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளராக விநாயகா ரமேஷ் அவர்களது பெயரையும், கழகத்தின் அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் சு.துரைசாமி, ஆட்சி மன்றக் குழுச்செயலாளர் அ. கணேசமூர்த்தி, அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன், அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் ஆகியோரிடமும், துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை. பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் தெரிவித்து, அவர்களின் முழு சம்மதத்துடன் இந்த முடிவை அறிவிக்கிறேன்.

எமது அணியின் முதல்வர் வேட்பாளரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி, நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க, பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது நான் பாடுபடுவேன்.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத கழகக் கண்மணிகள், எனது முடிவை ஏற்றுக்கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்று, தோழமைக் கட்சித் தலைவர்கள் நம்மைப் பாராட்டும் வகையில் பணியாற்றிடப் பாசத்தோடும் உரிமையோடும் வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

English summary
DMK plans to create caste rift among people says MDMK leader Vaiko.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X