For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முத்துக்குமாரசாமி முதல் முத்துக்கிருஷ்ணன் வரை… தொடரும் அரசு ஊழியர்கள் தற்கொலை: கருணாநிதி லிஸ்ட்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்கிருஷ்ணன் முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலர் முத்துக்கிருஷ்ணன் வரை அதிமுக ஆட்சியில், அரசு அலுவலர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெறும் சோக நிகழ்வாகத் தான் இருந்து வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் தற்கொலைகள் பற்றி பட்டியலிட்டுள்ள கருணாநிதி, திமுக தொண்டர்களுக்கு கடித வடிவில் எழுதியுள்ளார்.

''அரசு அலுவலர்கள் என்றாலும், ஆசிரியர்கள் என்றாலும், அதிமுக ஆட்சியினருக்கு எப்படிப்பட்ட அலர்ஜி என்பது, இந்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு அல்ல; இதற்கு முன்பு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 1991 முதல் 1996ஆம் ஆண்டுகளிலும் சரி; 2001 முதல் 2006ஆம் ஆண்டுகளிலும் எந்த அளவுக்குக் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்பதை நான் புதிதாக நினைவுபடுத்த வேண்டியதில்லை.

ஹிட்லர் கால சட்டம்

ஹிட்லர் கால சட்டம்

அரசு அலுவலர்கள் ஜனநாயக ரீதியாக அமைதியாக அறப்போராட்டம் நடத்துவதையே ஒடுக்குவதற்காக அதிமுக ஆட்சியில் புதிய சட்டமே கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தை மீறி வேலை நிறுத்தம் செய்பவர்கள், மற்றும் அதைத் தூண்டுபவர்கள் ஆகியோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க ஏதோ ஹிட்லர் காலம் போலச் சட்டத்திலே வழி செய்யப்பட்டிருந்தது.

எஸ்மா சட்டம்

எஸ்மா சட்டம்

முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழகச் சட்டப்பேரவையில் ஒரு முறை பேசும்போது, "போராட்டத்தில் ஈடுபடுகின்ற அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 31-10-2002க்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், அவர்கள் மீது எஸ்மா சட்டம் உட்பட இன்னும் என்னென்ன சட்டங்கள் இருக்கின்றனவோ அத்தனை சட்டங்களும் அவர்கள் மீது பாயும். படிப்படியாக பணியிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டு, புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்றே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிரிகள்-அவர்கள் மீது போர் தொடுக்க ஆயத்தம் செய்து கொண்டிருப்பதைப் போலக் கூறினார்.

கூண்டோடு டிஸ்மிஸ்

கூண்டோடு டிஸ்மிஸ்

இன்னும் சொல்ல வேண்டுமேயானால், 13-4-2003 முதல் அரசு அலுவலர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துச் சங்கங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்து அதிமுக ஆட்சி உத்தரவிட்டது. போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள் இரவோடு இரவாக எஸ்மா சட்டத்தின்கீழ் வீடு புகுந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1 இலட்சத்து 70 ஆயிரம் பேர் ஒரே உத்தரவின் பேரில் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.

தொடர் தற்கொலைகள்

தொடர் தற்கொலைகள்

இப்படியெல்லாம் கடந்த காலத்தில் அரசு அலுவலர்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் இடையறாத இன்னல்களுக்கு ஆளானார்கள் என்றால், தற்போது தொடர்ந்து அரசு அலுவலர்கள் இந்த அதிமுக ஆட்சியில் தற்கொலை செய்து கொண்டும், தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தும் வருவதென்பது தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கின்றது.

முத்துக்குமாரசாமி தற்கொலை

முத்துக்குமாரசாமி தற்கொலை

அதிமுக ஆட்சியினரே எவ்வளவோ முயற்சித்தும் மறைக்க முடியாமல் மாட்டிக் கொண்டு, ஒரு அமைச்சரை பலிகடாவாக்கி கைது செய்திருக்கிறார்களே, அந்த நிகழ்ச்சியில் முத்துக்குமாரசாமி என்ற அதிகாரி தன் குடும்பத்தினரைத் தவிக்க தவிக்க அனாதைகளாக விட்டு விட்டு ரயிலுக்கு முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாரே; எத்தகைய கொடுமை? அவர் எந்த அளவுக்கு ஆட்சியினரால் மன ரீதியாக அவதிக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் தற்கொலை செய்து கொள்கின்றமுடிவினை எடுத்திருப்பார்?

அதிமுக அமைச்சர்கள்

அதிமுக அமைச்சர்கள்

அமைச்சர் அக்ரி மட்டும்தான் இந்த அளவுக்குக் கட்டாய வசூலில் இந்த ஆட்சியிலே டுபட்டாரா? அவரை விட கூடுதலாகவே அதிகார ஆணவத்தோடு சேட்டை செய்யும்அமைச்சர்கள் மேலும் பலர், இந்த அமைச் சரவையிலே இல்லையா? அவர்களைப் பற்றிய உண்மைவிவரங்கள் எல்லாம் தற்போது வெளிவராமல் இருக்கலாம்.

அரசு அதிகாரிகள்

அரசு அதிகாரிகள்

சாதாரணமான அரசு அலுவலர்கள் மட்டுமல்ல, ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் எல்லாம் இந்த ஆட்சியிலே எந்த அளவுக்குக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். முத்துக்குமாரசாமியைப் போல் இவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லையே தவிர, ஒவ்வொரு நிமிடமும் செத்துப் பிழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று ஒரு வாரப்பத்திரிகையிலேயே கட்டுரை வந்ததே.

செந்தில் வாக்குமூலம்

செந்தில் வாக்குமூலம்

வேளாண் துறை அதிகாரி செந்தில் என்பவர், ''மறைந்த முத்துக்குமார சாமியை வலியுறுத்தி, மிரட்டிப் பணம் வசூலிக்கும்படி அமைச்சர் கூறினார், எனவே நான் அவ்வாறு அந்த அதிகாரியை மிரட்டினேன்" என்று வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறப்பட்டதே, அது உண்மை தானா? அந்த அதிகாரியைப் போலவே, முன்னாள் அமைச்சர் அக்ரி""யும் உண்மை வாக்குமூலம் கொடுத்தால், யார் யார் மாட்டிக் கொள்வார்கள்?

சோதனை இல்லையே

சோதனை இல்லையே

இது போன்ற குற்ற வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டால், உடனடியாக அவரது வீடு, அலுவலகம் போன்றவை சோதனையிடப்படும். ஆனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்ட பிறகு அப்படிப்பட்ட சோதனை ஏன் நடத்தப்படவில்லை? மேலும் இதைப்போன்ற வழக்குகளில் யாராவது கைது செய்யப்பட்டால், அவர்களை உடனடியாக போலீஸ் விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்படும். அதுவும் இவரது விஷயத்தில் கேட்கப்படவில்லை.

கண்துடைப்பு நாடகம்

கண்துடைப்பு நாடகம்

மூன்றாவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீதிபதியிடம் ஆஜர்படுத்திய போது, முதல் கட்ட விசாரணையின்போது, அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் நகல் ஒன்றைத் தாக்கல்செய்வார்கள். அதுவும் இந்தப் பிரச்சினையிலே நடந்ததாகத் தெரியவில்லை.

அக்ரி வாக்குமூலம்

அக்ரி வாக்குமூலம்

நான்காவதாக, இவரிடம் செய்தியாளர்கள் இதைப் பற்றிக் கேட்ட போது, "எல்லாம் அம்மாவுக்குத் தெரியும்" என்றார். அதுபற்றி சிபிசிஐடி விசாரணை நடத்துவோர் காதிலே போட்டுக் கொண்டதாகவேதெரியவில்லை. இதையெல்லாம் கூட்டிப் பார்த்தால், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எதிர்க் கட்சிகளை ஏமாற்றுவதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட கண் துடைப்பு நாடகமாகத்தான் தெரிகிறது.

தொடரும் தற்கொலைகள்

தொடரும் தற்கொலைகள்

அரசு அலுவலர்களின் தற்கொலை ஒரேயொரு முத்துக்குமாரசாமியுடன் முடிந்து விட்டதா? சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள சத்துணவுப் பிரிவு அலுவலகத்தில் சண்முகவேல் என்ற அரசு அலுவலர், மின் விசிறியில் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரே, அதுபற்றிய உண்மைகள் என்ன?

திருச்சி ஆர்எம்ஓ

திருச்சி ஆர்எம்ஓ

திருச்சியில் அரசு பொது மருத்துவமனையில் ஆர்எம்ஓ நேரு என்பவர் மேலிடத்திலே இருப்பவர்களின் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதும் இந்த அதிமுக ஆட்சியில்தான்.

நெல்லை மாவட்ட தற்கொலை

நெல்லை மாவட்ட தற்கொலை

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தாசில்தாராகப் பணியாற்றிய தியாகராஜன் - நெல்லை மாநகராட்சியில் பணியாற்றிய பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு மாண்டதும் இந்த அதிமுக ஆட்சியிலேதான்.

ரேசன் ஊழியர் இளங்கோ

ரேசன் ஊழியர் இளங்கோ

சென்னை தங்கசாலை பகுதியில் ரேஷன் கடை அலுவலர் இளங்கோ என்பவர் தற்கொலை செய்து கொண்டு மாண்டாரே; அதிகாரிகள் மிரட்டல் காரணமாகத்தான் தற்கொலை செய்துகொண்ட தாகச் செய்திகள் வந்ததே! அது பற்றிய விவரம் என்ன?

திருவாரூர் முத்துகிருஷ்ணன்

திருவாரூர் முத்துகிருஷ்ணன்

திருவாரூர் அருகே, அதிகாரியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தீக்குளித்த அரசு அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மருத்துவமனையிலே உயிரிழந்திருக்கிறாரே; அவருடைய குடும்பத்திற்கு இந்த ஆட்சியினர் தரப் போகின்ற பதில் என்ன?

கோவை சக்திவேல்

கோவை சக்திவேல்

கோவையில் சக்திவேல் என்பவர் அதிமுக கவுன்சிலர் மிரட்டியதன் காரணமாக 16 தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தன் சாவுக்கு மூல காரணம் அதிமுக கவுன்சிலர் தான் என்று தன் கைப்பட கடிதமே எழுதி வைத்திருக்கிறார்.

ஈரோடு பழனிச்சாமி

ஈரோடு பழனிச்சாமி

இதற்கெல்லாம் முன்பாக ஈரோட்டில் வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பழனிச்சாமி என்பவர் இந்த ஆட்சியினரின் தொந்தரவு தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்.

மக்கள் நலப்பணியாளர்கள் தற்கொலை

மக்கள் நலப்பணியாளர்கள் தற்கொலை

ஏன், இதற்கெல்லாம் முன்பு 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை, அவர்கள் திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, டிஸ்மிஸ் செய்த காரணத்தால், சுமார் பதினைந்து பேர் தற்கொலை செய்து மாண்டதும் இந்த அதிமுக ஆட்சியிலே தான்.

அண்ணாவின் உத்தரவு

அண்ணாவின் உத்தரவு

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற போது, "கட்சிக் காரர்கள் அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியிலே இருக்கக் கூடாது"என்று குறிப்பிட்டதை, இன்றைய ஆட்சியாளர்கள் படித்திருந்தால், பல அரசு அதிகாரிகளை தற்கொலை செய்யத் தூண்டுமளவுக்குக் கடுமையாக நடந்து கொண்டிருக்க மாட்டார்கள். தாங்கள் செய்கின்ற ஊழல்களுக்கு, பலவீனமான சில அதிகாரி களையும் பங்குதாரர்களாக ஆக்கிக் கொண்டு, கூட்டுக் கொள்ளை நடத்திட முடிவு செய்து விட்டால், ஆட்சி என்ற ஒன்று தேடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதொரு பொருளாகி விடும்.

இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப் படுகின்ற, ஏன் சிறிதாவது எண்ணிப் பார்க்கின்ற அளவுக்கு இப்போதுஇருக்கின்ற ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லை. அவர்களுடைய கவலை எல்லாம் என்ன தெரியாதா என்ன?'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK president M Karunanidhi has listed a few other suicides of government employees and alleged that such deaths are becoming common in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X