For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏராளமான மேடைகள் திரைச்சீலைகளை விலக்கி விட்டு காத்திருக்கின்றன.. நீ வருவாய் என!

கருணாநிதியின் பிறந்த நாளை இன்று விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக வரலாற்றை புரட்டி பார்த்தால் ஒவ்வொரு துறையிலும் பல மேதைகள் தோன்றி அழியா புகழை அடைந்திருக்கிறார்கள். அப்படி தமது செயல்களால், தொண்டுகளால், தயாள சிந்தனையின் நடைமுறையால், சரித்திரத்தில் இடம்பிடித்தவர்களில் தமிழகம் தந்த தலைமகன் தான் கருணாநிதி. அரசியல், கலை, இலக்கியம், பாடல், சினிமா, பத்திரிகை, ஏன் கார்ட்டூன் வரை ஒன்றையும் விட்டுவைக்காத இந்திய தலைவனின் பாதை நீண்ட நெடியது. கருணாநிதி ஒரு மகாசமுத்திரம்.. அந்த சமுத்திரத்தின் ஒரு சில துளிகள் இதோ...

கருணாநிதி மூடநம்பிக்கைக்கு எதிரானவர்தான். ஆனால் அதே நேரத்தில் சமூக தொண்டையும், மனித நேயத்தையும் யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு நிறைந்த மரியாதையை செலுத்தக்கூடியவர். கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டத்திற்கான விழாவில் அவர் பேசுகிறபோது, "போலிகளுக்கும், உண்மைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்தவன் நான். அருள்மிகு சாய்பாபா அவர்கள் மக்கள் நலனுக்காக பாடுபடக் கூடியவர். மக்களின் துன்பங்களை துடைப்பதற்காக முயன்றவர். இத்தகைய நபர்கள் துறவிகளைவிட உயர்ந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் கடவுளுக்கே நிகரானவர்கள்" என்று அந்த விழாவில் அவர் புகழாரம் சூட்டினார். ஆனால் இதை வைத்து சிலர் அரசியலாக்கியதும் உண்டு. நாத்திகரான கருணாநிதி ஆன்மீகவாதியான சாய்பாபாவை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று அவதூறு பரப்பினர். ஆனால் நல்ல இதயமும், மக்களுக்கு தொண்டும், சமூகத்திற்கு சேவையும் ஆற்றக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மாமனிதர்களே, அவர்களை பாராட்டுவதிலும், புகழ்வதிலும் தவறில்லை என்று என்ற கொள்கை பிடிப்பு நிறைந்தவர் கருணாநிதி.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கருணாநிதியை ஆண்டவரே' என்றுதான் அழைப்பார். பிற்காலத்தில் மூக்கா' (மூனா கானா) என்றும் அழைத்திருக்கிறார். எம்ஜிஆர் மறைந்த அன்று, 40 ஆண்டுகால நண்பருக்காக கண்ணீர் அறிக்கைவிட்ட கருணாநிதியால் ராஜாஜி மண்டபத்தில் எம்ஜிஆர் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ, இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவோ முடியாமல் போய்விட்டது. என்றாலும் ஒரு விஷயத்தில் அவர் கொடுத்து வைத்தவர். வெளியூரிலிருந்து கருணாநிதி இரயிலில் வந்துகொண்டிருந்தபோது, எம்ஜிஆர் மரணமடைந்துவிட்டதாக அவருக்கு தகவல் கிடைக்க.. அந்த தகவல் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு முன்பே ரயில் நிலையத்திலிருந்து நேராக ராமாபுரம் தோட்டத்திற்கு சென்று அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்திவிட்டு தனது கடமையை நிறைவேற்றினார்.

தொண்டர்களின் பற்றற்ற பாசம்

தொண்டர்களின் பற்றற்ற பாசம்

கருணாநிதியை இன்றுவரை எண்ணற்றோர் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் அவர்மீது பைத்தியமாய் இருக்கிறார்கள். முதல்வர் ஆசனத்தை அலங்கரித்ததை பார்த்து பார்த்து பூரித்து போகிறார்கள். இனியும் அலங்கரிக்க மாட்டாரா என ஏங்கி தவித்து உள்ளனர். பலமுறை எத்தனையோ இளைஞர்கள் பல சந்தர்ப்பங்களில் தங்களை தாங்களே மாய்த்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட தலைவருக்காக தற்கொலை செய்து கொள்வது அங்கீகரிக்கப்பட முடியாத விஷயம் என்றாலும், அந்த தொண்டரின் தியாகம், தலைவன் மீது கொண்ட அளவுக்கு மீறிய அன்புதான் அதற்கு காரணம். தன்னிடம் பேசாத, பழகாத, தன்னை கருணாநிதிக்கு யார் என்றே தெரியாத நிலையிலும் தொண்டர்கள் தீக்குளித்தார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்மீதுள்ள பற்றற்ற பாசம்தான். அதேபோல, கருணாநிதியும் தமிழகத்தில் தன் கால் படாத இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடந்து நடந்து தொண்டர்களை தட்டிக் கொடுத்து நேரத்தை செலவிட்டார்.

உலக அரங்கில் தமிழுக்கு அங்கீகாரம்

உலக அரங்கில் தமிழுக்கு அங்கீகாரம்

தமிழை மிக அதிக பயன்பாட்டுக்கு வழிவகுக்கவும், உலகளாவிய முறையில் தமிழின் செல்வாக்கை உயர்த்தவும், பரவலாக தமிழின் பழமையையும் வரலாற்று பெருமையையும் இளைய தலைமுறைக்கு உணர்த்தவும், தற்போதைய விஞ்ஞான தொழில்-நுட்ப சூழலுக்கு ஏற்ப தமிழின் பன்முக பரிமாணத்தில் நெறிப்படுத்தவும், பாமரர்களுக்கும், கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு தமிழ்மீது ஆர்வம் ஏற்படவும் உலக தமிழ் சான்றோர்கள் ஒரே கூரையின்கீழ் கூடி விவாதிக்கவும் செம்மொழி மாநாட்டை நடத்தி காட்டினார் கருணாநிதி. இதில் தமிழகத்தில் உள்ள தமிழ்ச்சான்றோர்களை விட தமிழகத்திற்கு அப்பால் உள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு தமிழ் மொழியியல் சான்றோர்கள் தமிழின் மீது காட்டிவரும் பற்றையும் பாசத்தையும் நம்மால் நேரடியாக உணர முடிந்தது. கருணாநிதியின் இந்த பணி தமிழுக்கு அழியாத புகழையும் எதிர்காலத்தில் நல்ல பலனையும் உலகளாவிய முக்கியத்துவத்தையும் உருவாக்கி தந்ததை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

மரியாதை கொடுக்கும் பண்பு

மரியாதை கொடுக்கும் பண்பு

இவ்வளவு அரிய ஆற்றல்களுடன், பதவிகளில் பொறுப்பு வகித்தாலும் வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் மதித்துப் போற்றும் மாண்பு கருணைநிதிக்கு உண்டு. வயதில் எவ்வளவோ குறைந்த பத்திரிகையாளர்களைக் கண்டாலும் அவரது உடல்பலம் அனுமதித்தவரை எழுந்து நின்று வரவேற்கும் மாண்புடையவர். வயது குறைந்த இளைஞர்களாக இருந்தாலும் ஒருமையில் அழைக்காத உயர்ந்த பண்பாளர் அவர். இதைதவிர, கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, எழுத்து, ஆட்சிநிர்வாகம், ஸ்தாபன முதிர்ச்சி, கடும் உழைப்பு, தொலைதூர பார்வை, எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் எளிதில் கையாளும் திறமை, மாற்றாரின் கடும் விமர்சனங்களையும் சகித்து கொள்ளும் பக்குவம் போன்றவையும் அவரது உரிய நற்பண்புகளாகும்.

சட்டசபையில் நள்ளிரவில்...

சட்டசபையில் நள்ளிரவில்...

அவரது அரசியலும் இலக்கியம் இருக்கும், இலக்கியத்திலும் அரசியல் இருக்கும். இரண்டும் கலந்த கலவையாக அவர் ஒருவரால்தான் ஜொலிக்க முடியும். 80 ஆண்டுகால அரசியல் வெற்றிக்கு அவரது சாதுர்யமும், அறிவுத்திறனுமே காரணம். குறிப்பாக சட்டசபையில் அவருக்கு நிகராக வாதாடியவர் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் மட்டுமே. அவருக்கு பிறகு இன்றுவரை விவாதத்திலா, விவரத்திலோ - புள்ளிவிவரத் தகவலிலோ - பதிலளிக்கும் பேச்சுத்திறனிலோ - திடீர் திடீரென்று கடந்த கால சம்பவங்களையும், சரித்திர சான்றுகளையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளை திணறடிப்பதிலோ அவரை இன்றுவரை யாருமே மிஞ்சியதில்லை. எதிர்க்கட்சி தலைவராக அங்கம் வகித்தாலும் விமர்சன முத்தெடுத்துதான் வெளியே வருவார். ஒருமுறை புழல் ஏரி உடைவது மாதிரி இருக்கிறது என்ற தகவல் கிடைத்தும், அதை சரிப்படுத்துவதற்கான பொதுப்பணித்துறையினரிடம் ஆலோசனைகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்லாமல், நள்ளிரவு 2.30 மணிக்கு தலைமை செயலகத்தில் கவலையுடன் உட்கார்ந்திருந்த சம்பவத்தினை இன்றைய இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்வது அவசியம்.

அடிப்படையே போர்க்குணம்தான்

அடிப்படையே போர்க்குணம்தான்

பதில் அளிக்க முடியாத கேள்வியை யாரேனும் கேட்டால் அதற்கு எதிர்கேள்வி போடும் பாணியே தனிதான். `ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?' என்று அவரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. அதற்கு அவர், `அது பிரச்சனை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா என்றுதான் பார்க்க வேண்டும்' என்று திருப்பி போட்டு தாக்கினார். 5 முறை முதலமைச்சராக பதவி வகித்த பெருமை இவருக்கு கிடைத்ததற்கு அவரது ஆற்றலாலோ சிந்தனையாலோ மட்டுமல்ல. அயராத உழைப்பால் - கடும் போராட்டத்தால் - தளராத முயற்சியால் - அடக்குமுறைகளை எதிர்த்து நிற்கும் போர்க்குணத்தால்தான்! தட்சிணாமூர்த்தி என்ற சாதாரண இளைஞன் - கலைஞர் கருணாநிதியாக - முதலமைச்சர் கருணாநிதியாக - தமிழின தலைவராக உயர்ந்ததற்கு முக்கிய காரணம் அவரது போர்க்குணமே. இந்த போர்க்குணம்தான் 95 ஆண்டுகளாக அவரை பக்குவப்படுத்தி வந்திருக்கிறது. தமிழக மக்களின் கேடயமாக - ஈட்டி முனையாக - கூர்மைப்படுத்தி வந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான ஆத்திகர்களை 5 முறை ஆண்ட இந்த ஆத்திகர், மேலும் பல ஆண்டுகள் அவர் ஜீவித்து சிறப்புடன் வாழ்வார். அதற்கும் இந்த போர்க்குணம்தான் காரணமாக அமையும் என்பது ஐயமில்லை.

நீ வருவாய் என...

நீ வருவாய் என...

கருணாநிதி - வாழும் திராவிட சித்தாந்தம். கருணாநிதி - நினைவாற்றலின் அடையாளம். கருணாநிதி - சொல்லின் அஞ்சாமை. இன்று அவருக்கு முதுமை உருவாக்கிய தளர்வு, தமிழகத்தை அனாதையாக்கி விட்டிருக்கிறது. இந்தியாவிலேயே வயதிலும், அரசியல் அனுபவத்திலும் தலைசிறந்த தலைமகனின் முடக்கம் தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது கசப்பான உண்மை. அவரது இருப்பு இல்லாத அரசியல் உப்பில்லாத உணவு போல உள்ளது. அவர் மீண்டு(ம்) என்று வருவாரோ என்று கோடானுகோடி தொண்டர்களின் பார்வை அறிவாலயத்தை நோக்கியே அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன. எழுச்சி மிக்க எழுத்தின்மூலம் புதுதெம்பு பாய்ச்சிய "உடன்பிறப்பே" தலைப்பில் எழுத வருவாரோ என்று மை ஊற்றி வைக்கப்பட்ட பேனா தன் கூர்மையுடன் நோக்கி கொண்டிருக்கிறது. கோபாலபுரம், சி.ஐ.டி.நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம், முரசொலி ஆகிய ஐந்து இடங்களிலும் தினசரி செய்திதாள்கள் காற்றில் படபடத்துக் காத்துக் கிடக்கின்றன. "என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்ற கரகரத்த குரலில் ஓங்கி ஒலிக்க ஏராளமான மேடைகள் திரைச்சீலைகளை விலக்கி விட்டு காத்திருக்கின்றன.. நீ வருவாய் என..!!!

English summary
DMK President Karunanidhi's 95th birthday today. DMK Cadres celebrated party President Karunanidhi Birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X