• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேராசிரியர் முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி இயற்கை எய்தினார்

Google Oneindia Tamil News
professor m.s.arivudai namnbi
புதுச்சேரி: புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள் துறையின் மேனாள் தலைவருமான பேராசிரியர் முதுமுனைவர் ம.சா.அறிவுடை நம்பி அவர்கள் இன்று (03.01.2014) காலை 7 மணியளவில் கோவையில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள சென்ற இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

ம.சா.அறிவுடைநம்பியின் வாழ்க்கைக்குறிப்பு

06.03.1954 இல் பிறந்த ம.சா.அறிவுடைநம்பி அவர்களின் பெற்றோர் முனைவர் ச.சாம்பசிவனார், சா.மனோன்மணிஆவர். இளம் அறிவியல் பயின்ற இவர் பின்னர்த் தமிழ் முதுகலை,முனைவர்,முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றவர்."திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படும் இலக்கியக்கொள்கைகள்" என்னும் தலைப்பில் முனைவர் பட்டமும், தஞ்சை மராட்டிய மன்னர்கள் வளர்த்த நுண்கலைகள் என்னும் தலைப்பில் முதுமுனைவர் பட்டமும் ஆய்வுசெய்து பெற்றவர்.ஆய்வுப்பணிகளில் முப்பதாண்டுகள் பட்டறிவுடைய இவர் பதினெட்டு ஆண்டுகள் கல்விப்பணியில் பட்டறிவு உடையவர். இவர் மேற்பார்வையில் இதுவரை பதினான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 65 பேர் இளம் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர்.

முதுமுனைவர் பட்ட ஆய்வேட்டைத் தமிழில் எழுதி முதன்முதல் பட்டம் பெற்ற பெருமைக்கு உரியவர்.

கல்விப்பணியாகக் கொழும்புவில் நடைபெற்ற இசுலாமியக் கருத்தரங்கம், தொல்காப்பியக் கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்றதுடன் மலேசியாவில் நடந்த கருதரங்கிலும் கலந்துகொண்டு கட்டுரை வழங்கிய பெருமைக்கு உரியவர்.இவ்வகையில் இவர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கை 170 மேல் இருக்கும்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பல பணிநிலைகளில் இருந்த ம.சா.அறிவுடைநம்பி அவர்கள் இப்பொழுது புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

இவர்தம் தந்தையார் அறிஞர் ச.சாம்பசிவனார் அவர்கள் தமிழ்மாருதம் என்னும் இலக்கிய ஏட்டைத் தொடர்ந்து நடத்தித் தமிழ்ப்பணி செய்து வருபவர்.

மாணவர்களிடம் அன்புடன் பழகும் அவர் பண்பும்,ஆர்வத்துடன் நெறிப்படுத்தும் பாங்கும் இன்றைய நெறியாளர்கள் பின்பற்றத் தகுந்தனவாம். மிகச்சிறந்த ஆளுமைத் திறனும், வினைவல்ல தன்மைகளும் அப்பொழுதே அறிந்து மகிழ்ந்தவன் யான்.பல நிறுவனங்களில் படித்த வகையிலும்,பல துணைவேந்தர்கள்,மூத்த பேராசிரியர்களிடம் பணிபுரிந்த வகையிலும் அவருக்கு மிகுதியான பட்டறிவுகள் உண்டு. முனைவர் வ.ஐ.சுப்பிரமணியனார், கா.ம. வேங்கடராமையா, புலவர் செ.இராசு உள்ளிட்ட அறிஞர் பெருமக்களுடன் இணைந்து பணிசெய்த பெருமைக்கு உரியவர்.

பேராசிரியரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், மாணவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

இவர் எழுதி வெளிவந்துள்ள நூல்கள்:

1.போதமும் சுபக்கமும், 1978
2.மூவர் தேவாரம் முதல் 5 பதிகங்கள்(மூலமும் உரையும்), 1981
3.திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படும் இலக்கியக்கொள்கைகள், 1986
4.சைவத்தமிழ் 1992
5.தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் பகுதி 1, 1994
6.புத்துலகச் சிந்தனைகள்,2003
7.உள்ளங்கவர் ஓவியம்,2003
8.தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் -பகுதி 2, 2003
9.தஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ் இலக்கியம் -பகுதி 3, 2004
10.நிகழ்வுக் கலைகள்,2004
11.திருக்கோயில் வளர்க்கும் ஓவியக்கலை,2004
12.தஞ்சை மராட்டிய மன்னர்கள் வளர்த்த நுண்கலைகள்,2006
13.இலக்கியச்செல்வம்,2006
14.பதிப்புச் சிந்தனைகள்,2006
15.குமரகுருபரர்,2007
16.சைவமும் வாழ்வியலும்,2007
17.ஏட்டிலக்கியம்,2008

பதிப்பித்தவை

18.தமிழக வரலாற்றறிஞர்கள் தொகுதி 1,(இணைப் பதிப்பாசிரியர்), 1993
19.ஆறாம் உலகச் சைவ மாநாட்டு மலர்(இணைப் பதிப்பாசிரியர்),1997
20.காகிதச்சுவடி ஆய்வுகள்(பதிப்பாசிரியர்),2000
21.பதிப்பு நிறுவனங்கள், (ப.ஆ),2002
22.தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் ஆய்வுப்பனுவல்,(இ.பதி.)2003
23.சுவடிப் பதிப்பாசிரியர்கள்(ப.ஆ), 2004
24.பதிப்பியல் நெறிமுறைகள்,(ப.ஆ),2004
25.ஆராய்ச்சி நெறிமுறைகளும் சுவடிகளைப் பதிப்பித்தலில் எழும் சிக்கல்களும்,2004
26.தமிழக அறிஞர்கள் கடிதங்கள்,(ப.ஆ),2006
27.அமைதித்தமிழ்(ப.ஆ),(2006)
28.தமிழும் உலக ஒற்றுமையும்,2006
29சுவடியியல் கலைச்சொல் விளக்க அகராதி,2006
29 ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கியம்(ப.ஆ),2007+

செய்தி - முனைவர் மு. இளங்கோவன்

English summary
Dr Arivudai Nambi, a senior Tamil scholar has passed away in Coimbatore. He has written many books in Tamil on literature and grammar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X