For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் கூட வாங்க.. எம்.ஜி.ஆர். விடுத்த அழைப்பு.. மனம் திறந்த ஹண்டே.. ஒன்இந்தியா தமிழ் எக்ஸ்ளூசிவ்

புரட்சித்தலைவர் என்னை தொடர்பு கொண்டு, நீங்க படிச்சவங்க எல்லாம் என்கூட வாங்க என்று கூப்பிட்டார். முதன் முதலாக தலைமை நிலைய செயலாளராக நியமித்தார் என்று டாக்டர் ஹண்டே கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கு இன்றைக்கு நல்ல சக்தி உண்டு. தமிழக சினிமா, தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தி எம்.ஜி.ஆர். அவருடன் பணியாற்றி பயணித்த சிலர்தான் இன்றைக்கு தமிழக அரசியலில் இருக்கின்றனர்.

அதிமுகவில் தலைமை நிலைய செயலாளராக பணியைத் தொடங்கி அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக 10 ஆண்டுகாலம் பணியாற்றிய டாக்டர் ஹெச்.வி. ஹண்டே, எம்.ஜி.ஆர் உடனான நினைவுகளை நமது ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் இணையத்திற்கு அன்றைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலம் வரை பகிர்ந்து கொண்டார்.

Dr Hande opens his mind on late MGR

1972 அக்டோபர் 10 தமிழக அரசியல் வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத ஒரு நாள். அன்றுதான் திராவிடமுன்னேற்றக்கழகத்தில் இருந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட நாள். அடுத்த 7 நாளில் அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உதயமானது. அதிமுகவிற்கு 44 ஆண்டுகள் முடிந்து 45 ஆண்டுகள் பிறந்துள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது அகில இந்திய அளவில் அவருக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சித்தலைவர்களும் இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த காமராஜர் அவர்கள், அதிமுகவைப் பற்றி பெரிய அபிப்பிராயம் இல்லாமல் இருந்தார். திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியிருக்கிறார். இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றார்

அப்போது நான் ராஜாஜி உடன் அவரது சுதந்திரா கட்சியில் இருந்து சட்டசபைக்கு எம்.எல்.ஏவாக தேர்வாகியிருந்தேன். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியதை கேள்விப்பட்ட மூதறிஞர் ராஜாஜி, திமுகவில் இருந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றியது, அண்ணாவை வெளியேற்றியதற்கு சமம் என்றார் ராஜாஜி. சில மாதங்களிலேயே ராஜாஜி அவர்கள் மரணமடைந்தார்.

புரட்சித்தலைவர் என்னை தொடர்பு கொண்டு, நீங்க படிச்சவங்க எல்லாம் என்கூட வாங்க என்று கூப்பிட்டார். முதன் முதலாக தலைமை நிலைய செயலாளராக நியமித்தார். அப்போது தொடங்கி அவர் மரணமடையும் வரை அவருடனேயே இருந்தேன்.

Dr Hande opens his mind on late MGR

புரட்சித்தலைவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது. அவருடைய அமைச்சரவையில் எந்த துறையில் யார் வல்லுனர்களோ அவருக்கு அந்த துறையை வழங்கினார். எந்த பைல் என்றாலும் எங்களுடைய கருத்தை எழுதச் சொல்வார். எங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார். கட்சியில் எனக்கு தலைமை நிலைய செயலாளர் தொடங்கி, அமைப்புச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவி வரை கொடுத்து அழகு பார்த்தார்.

மருத்துவராக நான் அவருக்கு எப்படி நெருக்கமானேன் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். புரட்சித்தலைவர் நல்ல உடல் அமைப்புப் கொண்டவர். அவருக்கு நோய் வரும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். அவர் இரண்டாம் முறையாக முதல்வராக பதவி வகித்த போது 1984ம் ஆண்டு தஞ்சாவூர் பெரியகோவிலில் ராஜராஜன் சிலை நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்டார்.

செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தஞ்சாவூரில் விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு முதல்வர் புரட்சித்தலைவரும், பாரதப் பிரதமர் இந்திராகாந்தியும் கலந்து கொண்டனர். அன்று திடீரென எம்.ஜி.ஆர் மயக்கமடைந்தார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் ரத்தத்தில் யூரியா அளவும், ரத்தக்கிரியேட்டினின் அளவும் அதிகமாகவே காணப்பட்டது.

நான் அமைச்சராக இருந்தாலும், அவரது குடும்ப டாக்டரிடம் இதைப் பற்றி பேசினேன். உடனே, இதை வெளியே தெரிவித்தால் பெரிய விசயமாக பரவிவிடும் என்று கூறினார். இந்த சம்பவம் நடந்து 20 நாட்களில் அதாவது அக்டோபர் 5ம் தேதி புரட்சித்தலைவருக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது.

சில நாட்களிலேயே அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டது கை கால் செயலிழந்தது. அக்டோபர் 14ம் தேதி சிக்கல் அதிகரித்தது. இனி புரட்சித்தலைவர் அவ்வளவுதான் என்று பேசினார்கள். ஆளுநர் குரானா அப்பல்லோவிற்கு வந்தார். முதல்வரிடம் இருந்த பொறுப்புகள் நாவலர் நெடுஞ்செழியன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். உடல் நிலையைப் பரிசோதிக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளினில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் பிரீட்மேன், டயாலிசிஸ் பிரிவு டாக்டர், மும்பை நரம்பியல் நிபுணர் ஆகியோரை தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தோம். அப்போது அதெல்லாம் ரொம்ப சிரமமான காரியம். புரட்சி தலைவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. இதனால் தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது.

புரட்சித்தலைவரை இங்கே வைத்து சிகிச்சை அளிப்பதை விட அமெரிக்கா அழைத்து செல்வதுதான் ஒரே வழி என்று கூறவே, நவம்பர் 5ம் தேதி அதிகம் ரிஸ்க் எடுத்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றோம். அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சிறந்த தொழில் நுட்பம் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. தென்கொரியாவில் இருந்து பிசியோதெரபி மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். அவரது அண்ணன் மகள் லீலாவதி ஒரு சிறுநீறுநீரகத்தை அளித்தார். நல்ல முறையில் ஆபரேசன் முடிந்தது.

இங்கே நாவலர் நெடுஞ்செழியன் சட்டசபையை கலைக்கும் அளவிற்கு அதிகாரம் பெற்றவாரக இருந்தார். லோக்சபா தேர்தலுடன் இணைந்து சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்திய தூதர் அருண்பட்வர்தன் முன்னிலையில் புரூக்ளின் மருத்துவமனையிலேயே எம்ஜிஆர் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

Dr Hande opens his mind on late MGR

அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து கொண்டே ஜெயித்தார் புரட்சித்தலைவர். அப்போதய தேர்தலில் அதிமுகவுக்கு 132 இடங்கள் கிடைத்தன. எம்ஜிஆரை சட்டசபைக்குழு தலைவராக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர். பூரண குணம் அடைந்த எம்.ஜி.ஆர் 1985ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி சென்னை திரும்பினார். இனி எம்ஜிஆர் அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள், அவர் விமானத்தில் இருந்து வீரநடை போட்டு இறங்கி வந்ததை பார்த்து வாயடைந்து போனார்கள். புரட்சித்தலைவர் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

காவிரி பிரச்சினையில் கர்நாடக மாநில முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவிடம் பேசுவதற்கு என்னைத்தான் அனுப்புவார் புரட்சித்தலைவர். அதேபோல கிருஷ்ணா நதிநீர் பிரச்சினை தொடர்பாக என்.டி.ராமாராவிடம் பேச ஹைதராபாத் சென்றேன். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும், இந்திராகாந்தி அவர்களிடம் பேசவும் டெல்லிக்கு என்னைத்தான் அனுப்பினார்.

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்த போது அதில் கலந்து கொள்ள வந்த இந்திராகாந்தி அம்மையாரை சென்னையில் இருந்து நான் தான் அழைத்துக் கொண்டு சென்றேன். மத்திய, மாநில தலைவர்களிடம் பேசுவதற்கு என்னைத்தான் அனுப்புவார் புரட்சித்தலைவர். அந்த அளவிற்கு அவருடன் நான் நெருக்கமானவனாக, நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தேன் என்று, எம்.ஜி.ஆர் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் டாக்டர் ஹெச். வி. ஹண்டே.

English summary
Former health minister in the MGR ministery Dr Hande has opened his mind on the late legendary leader in an interiview with Oneindi Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X