For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெளன விரதம் இருக்கப் போகிறேன்.. டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு #drramadoss

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் முழு மது விலக்கு கோரி காந்தி ஜெயந்தியன்று மெளன விரதம் இருக்கப் போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே அக்டோபர் 2ம் தேதி மெளன விரதம் இருக்கப்படும் என்றும் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து மது அரக்கனை விரட்டியடிக்க வேண்டும் என்று விரும்பும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அனைவரும் கட்சி எல்லைகளை கடந்து இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும்

இந்த போராட்டத்தில் குமரி அனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுவின் கொடுமைகள்

மதுவின் கொடுமைகள்

தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் தீமைகளையும், பாதிப்புகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் மதுவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அனைத்துக் குற்றங்களுக்கும் மது தான் அடிப்படைக் காரணமாக உள்ளது. ஆனாலும், மதுவை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

சீரழியும் குடும்பங்கள்

சீரழியும் குடும்பங்கள்

குடி குடியை கெடுக்கும் என்பதை உண்மையாக்கும் வகையில் குடியால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்ததை நேரடியாக பார்த்திருக்கிறேன். குடிக்கு கணவன், தந்தை, மகன் என பறிகொடுத்து விட்டு கதறிய பெண்களின் துயரங்களை உணர்ந்திருக்கிறேன். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 35 ஆண்டுகளாக, தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அறவழியில் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வருகிறேன். அப்போராட்டங்களின் பயனாக, கடந்த ஆண்டு மதுவுக்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால், அடக்குமுறையாலும், ஆசை வார்த்தைகளாலும் மக்கள் போராட்டத்தை ஆட்சியாளர்கள் மழுங்கடித்தனர்.

மழுங்கடித்து விட்டனர்

மழுங்கடித்து விட்டனர்

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த அதிமுக, பதவிக்கு வந்த பின்னர் செய்ததெல்லாம் ஏமாற்று வேலைகள் தான். தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதாகவும், மது விற்பனையை 2 மணி நேரம் குறைப்பதாகவும் ஜெயலலிதா அரசு அறிவித்தது. ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. மது விற்பனை குறைவாக உள்ள 500 மதுக்கடைகள் மட்டுமே மூடப்பட்டன. மது விற்பனை நேரத்தை மாலையில் குறைப்பதற்கு பதிலாக காலையில் குறைத்ததால் மது விற்பனை சற்றும் குறையவில்லை. அதுமட்டுமின்றி, காலை 06.00 மணியிலிருந்தே குடிப்பகங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதால் ஒருபுறம் மது விற்பனையும், மற்றொரு புறம் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவும் அதிகரித்திருக்கிறது.

வகுப்பறையில் மது அருந்துகிறார்கள்

வகுப்பறையில் மது அருந்துகிறார்கள்

கட்டுப்பாடற்ற மது விற்பனையின் காரணமாக தமிழகத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக மாணவர்கள் இனிப்பு வழங்கும் நிலை மாறி, வகுப்பறைகளிலேயே மதுவிருந்து நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

மதுதான் அனைத்துக்கும் காரணம்

மதுதான் அனைத்துக்கும் காரணம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நடக்கின்றன. நாட்டில் அதிக எண்ணிக்கையில் இளம் விதவைகளை கொண்ட மாநிலம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இச்சீரழிவுகள் அனைத்திற்கும் காரணம் மது..... மது தானே தவிர வேறொன்றுமில்லை. மது குடிப்பதால் புற்று நோய், காசநோய், இதயநோய் என 200 வகையான நோய்கள் ஏற்படுவதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் மது குடிப்பதால் உயிரிழக்கின்றனர். மதுவால் ஏற்படும் பொருளாதாரச் சீரழிவுகள் கணக்கிலடங்காதவை.

ஒரே தீர்வு

ஒரே தீர்வு

இளைய தலைமுறையினரும், உழைக்கும் வர்க்கத்தினரும் மதுவுக்கு அடிமையாகி, முடங்கிக் கிடப்பதால் ஏற்படும் உற்பத்தி இழப்பு மட்டும் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 20% ஆகும். நடப்பாண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.12 லட்சம் கோடி என்று வைத்துக் கொண்டால், இந்த ஓராண்டில் மட்டும் குடியால் தமிழகத்தில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பு ரூ. 2.40 லட்சம் கோடியாகும். இதை உணராத அரசு மதுவால் கிடைக்கும் ரூ.30,000 கோடி வருவாய்க்கு ஆசைப்பட்டு தமிழ்நாட்டு மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகிறது. மதுவின் தீமை புற்றுநோயை விட வேகமாக பரவிவரும் நிலையில், அதன் கொடுமையிலிருந்து தமிழகத்தை காக்க ஒரே தீர்வு முழு மதுவிலக்கு மட்டும் தான்.

மெளன விரதம்

மெளன விரதம்

எனவே, மதுவிலக்கை வலியுறுத்தி, மதுவுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி, சென்னை கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறமுள்ள உட்புறசாலையில் (Service Road), காந்தியடிகளின் போராட்ட வடிவமான மெளன விரதத்தை கடைபிடிக்க பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.

குமரி அனந்தன்

குமரி அனந்தன்

02.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை எனது தலைமையில் நடைபெறவிருக்கும் மவுன விரத நிகழ்வில் காந்தி பேரவையின் தலைவரும், தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து மது அரக்கனை விரட்டியடிக்க வேண்டும் என்று விரும்பும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த அனைவரும் கட்சி எல்லைகளை கடந்து இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

English summary
PM Founder Dr Ramadoss will observe Mouna Viratham on Oct 2 seeking the implementation of total prohibition in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X