For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்கள் என்ன ரோபோக்களா?.. சனிக்கிழமையும் ஸ்கூல் வைத்தால் எப்படி??.. ராமதாஸ் கொந்தளிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: போர்ஷனை முடிக்க வேண்டும் என்பதற்காக சனிக்கிழமையும் பள்ளிகள் வைப்பதை நிறுத்த வேண்டும். மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் இல்லை. முதலில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி திறந்த முதல் நாளிலேயே மொத்த புத்தகங்களையும் கையில் கொடுத்து படித்து ஒப்புவிக்கச் செய்வதற்கும், விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கும் அவர்கள் ஓவர்டைம் வேலை செய்யும் ரோபோக்கள் அல்ல... குழந்தைகள் என்பதை கல்வியாளர்கள் உணர வேண்டும் என்றும் ராமதாஸ் சாடியுள்ளார்.

தனியார் பள்ளிகளாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

1 மாத இடைவெளிக்குப் பின்னர்

1 மாத இடைவெளிக்குப் பின்னர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், அந்த நாட்களை ஈடுகட்டும் வகையில் ஜனவரி மாதம் வரை சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. சில அரசு பள்ளிகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பள்ளி பணிநேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூளைக்குள் திணிக்க முடியுமா

மூளைக்குள் திணிக்க முடியுமா

பாடநூல்களிலுள்ள அனைத்துப் பாடங்களையும் மாணவனின் மூளைக்குள் எப்படியாவது திணிக்க வேண்டும்; மனப்பாடம் மூலம் திணிக்கப்பட்ட பாடங்களை, தேர்வு என்ற பெயரில் நடத்தப்படும் ஆய்வின் போது விடைத்தாளில் கொட்டவைக்க வேண்டும் என்பது தான் கல்வி என்ற எண்ணம் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் வலி வேதனை

மாணவர்களின் வலி வேதனை

அதன் விளைவு தான் மாணவர்களின் வலிகள், வேதனைகள், மன அழுத்தம் ஆகிய எதைப்பற்றியும் கவலைப்படாமல், சூதாட்டத்தில் விட்டதை பிடிக்க துடிப்பவர்களைப் போல, வெள்ள நாட்களில் நடத்தப்படாத பாடங்கள் அனைத்தையும் நடத்தி முடிப்பதற்காக விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கூடங்கள் நடைபெறும் என தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்திருக்கின்றன.

பாவம் மாணவர்கள்

பாவம் மாணவர்கள்

சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய மழை மனிதர்களுக்கு மறக்க முடியாத பல பாடங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் பள்ளிகள் தான் அந்த பாடங்களைப் படிக்கவில்லை. அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெள்ளத்தில் தங்களின் பாடநூல், சீருடைகள் ஆகியவை மட்டுமின்றி தங்களின் வீடு, உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். பல மாணவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை மழை - வெள்ளத்திற்கு பலி கொடுத்திருக்கின்றனர்.

இத்தனை துயரங்களை அனுபவித்ததில்லை

இத்தனை துயரங்களை அனுபவித்ததில்லை

சாவின் விளிம்பு வரை சென்று நல்வாய்ப்பாக மீண்டு வந்த மாணவர்களும் உண்டு. மேல்தட்டு மாணவர்கள் இவ்வளவு துயரங்களை அனுபவித்திருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் மூழ்கடித்த வெள்ளத்தில் சிக்கி பல நாட்கள் உணவின்றி பட்டினியில் வாடிய அனுபவத்தை பணக்கார மாணவர்களுக்கும் இம்மழை வழங்கியுள்ளது.

மீண்டு வர பல மாதமாகும்

மீண்டு வர பல மாதமாகும்

இவற்றையெல்லாம் தாண்டி, ஒரே ஒரு மாணவன் வெள்ளத்தில் சிக்கி துயரத்தை அனுபவித்திருந்தால் கூட, அவனது துயரம் மற்ற மாணவர்களையும் தொற்றிக்கொள்ளும் ஆபத்துள்ளது. இந்த மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் மீண்டு வருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம். மாணவர்கள் பற்றிய இந்த உளவியலை பள்ளி நிர்வாகங்கள் புரிந்து கொண்டு அவர்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்க வேண்டும்; கவலைகளை மறந்து, சக மாணவர்களுடன் கலந்து மகிழ்ச்சியாக விளையாடப் பழக்க வேண்டும்; அதன்பிறகு தான் பாடம் என்பதையே அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

ரோபோக்களா மாணவர்கள்

ரோபோக்களா மாணவர்கள்

இவற்றையெல்லாம் விடுத்து, பள்ளி திறந்த முதல் நாளிலேயே மொத்த புத்தகங்களையும் கையில் கொடுத்து படித்து ஒப்புவிக்கச் செய்வதற்கும், விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கும் அவர்கள் ஓவர்டைம் வேலை செய்யும் ரோபோக்கள் அல்ல... குழந்தைகள் என்பதை கல்வியாளர்கள் உணர வேண்டும். அதுமட்டுமின்றி, சில பள்ளிகளில் வெள்ளம் புகுந்ததால் மாணவர்களின் குறிப்பேடுகள் சேதமடைந்து விட்ட நிலையில், அவற்றில் எழுதப்பட்டிருந்த அனைத்து பாடங்களையும் புதிய நோட்டில் எழுத வேண்டும் என்றும் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

சுகமானதாக, சுமையற்றதாக இருக்க வேண்டும்

சுகமானதாக, சுமையற்றதாக இருக்க வேண்டும்

பள்ளிக் கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும் இருக்க வேண்டும். ஆனால், மழை- வெள்ளத்தின் போது மூடப்பட்ட கல்லூரிகளுக்கே சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படாத நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவிப்பது கொடுமையானது; கண்டிக்கத்தக்கது. இது மாணவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்துமே தவிர, பாடத்தை படிப்பதற்கு உதவாது. இனி வரும் வழக்கமான வேலை நாட்களில் எத்தனை பாடங்களை கற்றுத்தர முடியுமோ... அத்தனை பாடங்களைக் கற்பித்து, நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தினால் போதுமானது.

யாராக இருந்தாலும் சரி

யாராக இருந்தாலும் சரி

எனவே, அரசு பள்ளிகளாக இருந்தாலும், தனியார் பள்ளிகளாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

தேர்வை ரத்து செய்யுங்கள் முதலில்

தேர்வை ரத்து செய்யுங்கள் முதலில்

அதுமட்டுமின்றி, ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; அதேபோல் ஆண்டுத் தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அத்துடன் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு அடுத்து வரும் பருவங்களுக்கான கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்ய தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

English summary
PMK founder Dr Ramadoss has opposed to run schools on satruday to complete portions in all over the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X