For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழைகள் நலனில் அக்கறை இல்லாத மோடி அரசு.. ராமதாஸ் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது. ஆனால் தொடர்ந்து விலையை உயர்த்தி, ஏழைகள் நலனில் மத்திய அரசுக்கு சற்றும் அக்கறை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

Dr Ramadoss slams Centre for petrol price hike

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மீண்டும் ஒரு சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 பைசா உயர்த்தப்பட்டு, ரூ.62.47-க்கும், டீசல் விலை ரூ.1.31 உயர்த்தப்பட்டு ரூ.53.09-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல் விலை கடந்த 60 நாட்களில் லிட்டருக்கு ரூ. 6.30 உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், டீசல் விலை கடந்த 75 நாட்களில் லிட்டருக்கு ரூ. 7.47 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்குறுகிய காலத்தில் பெட்ரோல் விலை 4 முறையும், டீசல் விலை 5 முறையும் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிதாக உயராத நிலையில் பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு முறையும் கணிசமாக உயர்த்தப்படுகிறது. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக தோன்றுகிறது.

கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதில் வெளிப்படைத் தன்மையும் இல்லை; நேர்மையும் இல்லை என்பது தான் உண்மை. கச்சா எண்ணெய் விலை உயர்வு விழுக்காடும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு விழுக்காடும் சமமாக இருக்க வேண்டும் என்பது தான் நியதி. ஆனால், கடந்த 4 மாதங்களில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வுகள் இந்த நியதிக்கு உட்படவில்லை.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 16 ஆம் தேதி தான் பெட்ரோல், டீசல் விலை மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை 15 ஆம் தேதி இரவே விலை உயர்வை அறிவித்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதன் தாக்கம் தெரியும் என்பதால் தேர்தல் முடிந்த பின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இது நேர்மையான செயலோ, மெச்சத்தக்க அணுகுமுறையோ அல்ல. மக்கள் ஏமாளிகள்; அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்று எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் நினைப்பதையே இது காட்டுகிறது. மத்திய அரசு நினைத்தால் இந்த விலை உயர்வின் சுமையை தாமே ஏற்றுக்கொண்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். இதனால் அரசுக்கு எந்த சுமையும் ஏற்படாது.

ஏனெனில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளிக்காமல், கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது.

இப்போது கலால் வரியை ஓரளவு குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாய் 20 முதல் 25 விழுக்காடு வரை குறையுமே தவிர, ஒரு போதும் இழப்பு ஏற்படாது. ஆனால், ஏழை மக்கள் நலனில் அக்கறையில்லாத, வருவாய் ஈட்டுவதில் மட்டும் அக்கறை காட்டி வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு இதைச் செய்வதற்கு கூட மனம் வரவில்லை. ஏழைகள் நலனில் மத்திய அரசுக்கு சற்றும் அக்கறை இல்லை என்பதையே இந்த விலை உயர்வு காட்டுகிறது.

டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால் சரக்குந்துகளின் வாடகை கடுமையாக உயரும். இது சங்கித்தொடர் விளைவை ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கும். ஏற்கனவே விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இந்த விலை உயர்வால் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் திரும்பப்பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has slammed central govt for the price hike of Petrol and Diesel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X