For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேகதாது அணை திட்ட அறிக்கையை கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்ப ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கான அறிக்கையை கர்நாடகாவுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழகத்திற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியையும் ஏமாற்றி வாங்க கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது.

தமிழகத்திற்கு நன்மை செய்யும் போர்வையில் துரோகம் இழைக்க கர்நாடகம் முயல்வது கண்டிக்கத்தக்கது. தமிழக எல்லைக்கு சற்று முன்பாக மேகேதாட்டுப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்காக முயற்சியில் ஈடுபட்டிருந்த கர்நாடக அரசு, இப்போது அந்த அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளரிடம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி சமர்ப்பித்துள்ளது.

ஏமாற்றும் கர்நாடகா அரசு

ஏமாற்றும் கர்நாடகா அரசு

இந்த அணைக்கு மத்திய அரசின் அனுமதியை எப்படியாவது பெற்று விடத் துடிக்கும் கர்நாடக அரசு, அதற்காக அத்திட்டம் பற்றி தவறான தகவல்களை அளித்திருக்கிறது. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் வழங்க முடியும் என்று மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடகம் கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, மேகேதாட்டு அணையில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் வழங்குவதற்காக 16.1 டி.எம்.சி தண்ணீர் எடுக்கப்பட இருப்பதாகவும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே இந்த தண்ணீர் எடுக்கப்படும் என்றும் கர்நாடகம் கூறியிருக்கிறது. இவை அனைத்தும் மத்திய நீர்வள ஆணையத்தையும், தமிழக அரசையும் ஏமாற்றும் நோக்குடன் அளிக்கப்பட்ட வாக்குறுதி ஆகும்.

67.14 டிஎம்சி கொள்ளளவு

67.14 டிஎம்சி கொள்ளளவு

இதை நம்ப முடியாது. மேகேதாட்டுவில் கர்நாடகம் புதிதாக கட்டவுள்ள அணையின் கொள்ளளவு 67.14 டி.எம்.சி ஆகும். இது கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு அணைகளையும் விட அதிக கொள்ளளவு கொண்டதாகும்.

மேட்டூரைவிட 2 மடங்கு

மேட்டூரைவிட 2 மடங்கு

இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் காவிரியில் 171.73 டி.எம்.சி நீரை கர்நாடகத்தால் சேமித்து வைக்க முடியும். இது மேட்டூர் அணையின் கொள்ளளவான 93.74 டி.எம்.சியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும்.

இப்படித்தான் வஞ்சகம்

இப்படித்தான் வஞ்சகம்

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீரை தேக்கி வைத்து சொந்தத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வது தான் கர்நாடகத்தின் நோக்கமாக இருக்குமே தவிர, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருக்காது. இதற்கு முன் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைவாக இருந்தபோதெல்லாம், அதைக்காரணம் காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

போலியான வாக்குறுதி

போலியான வாக்குறுதி

மேகேதாட்டு அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அதில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை அதன் சொந்த பாசனத் தேவைக்காகவும், குடிநீருக்காகவும் தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளுமே தவிர, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஒருபோதும் தண்ணீர் வழங்காது. எனவே, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காகத் தான் புதிய அணை கட்டப்போவதாக மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு அளித்துள்ள வாக்குறுதி போலியானது; அதை கர்நாடகம் ஒருபோதும் செயல்படுத்தாது.

காவிரி நீரே இல்லாமல் போகும்

காவிரி நீரே இல்லாமல் போகும்

தமிழ்நாட்டில் 1970களில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு பல்வேறு வகையான நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலையில், அதைப் பயன்படுத்தி மத்திய அரசின் ஆதரவுடன் காவிரி துணை நதிகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளை கர்நாடக அரசு கட்டிக் கொண்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் குறுவை, சம்பா சாகுபடிக்கு கர்நாடகத்தின் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 35 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது. அத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் சூழலில், கர்நாடகத்தின் போலி வாக்குறுதியை நம்பி மேகேதாட்டு அணைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு விட்டால், அதன்பின் காவிரியிலிருந்து தண்ணீர் பெறுவதை தமிழகம் மறந்து விட வேண்டியது தான்.

மத்திய அரசு வாக்குறுதி

மத்திய அரசு வாக்குறுதி

மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியை 3 முறையும், நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை 2 முறையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக 18.03.2015, 29.04.2015 ஆகிய தேதிகளில் எழுதிய கடிதங்களுக்கும், 03.03.2015 அன்று மக்களவையில் ஆற்றிய உரைக்கும் பதிலளித்து 09.06.2015 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி அவர்கள் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ‘‘மேகேதாட்டு அணைக்காக விரிவான திட்ட அறிக்கை கர்நாடக அரசிடமிருந்து மத்திய நீர்வள ஆணையத்திற்கு கிடைக்கும் பட்சத்தில், அதை காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் எட்டாவது பிரிவின்படி மத்திய அரசு ஆராயும். காவிரி ஆறு மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறு என்பதால், மேகேதாட்டு அணை குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் ஒப்புதலைப் பெற்று விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்திருந்தால் மட்டுமே அதை பரிசீலிப்போம். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவோம்'' என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

ஏமாந்துவிட கூடாது

ஏமாந்துவிட கூடாது

இப்போது கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக்கையுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசின் ஒப்புதல் கடிதம் எதுவும் இணைக்கப்படாத நிலையில், அதை மத்திய அரசு கர்நாடகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். கர்நாடகத்தின் இனிப்பு வார்த்தைகளை நம்பி மத்திய அரசு ஏமாந்து விடக்கூடாது. தமிழக அரசும் இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல்பட்டு கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has condemened that Karnataka's new dam across cauvery river and Centre should not accept this project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X