For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசுக்கு ஒரு வாரம் டைம் தர்றேன்.. டாக்டர் ராமதாஸ் அதிரடி!

நிறைவேற்றப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அரசுத் திட்டங்களை ஒரு வாரத்திற்குள் அரசு திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் திறக்கப்படாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் நலத் திட்டங்களை அரசே தொடங்கி வைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் பாமகவினரை அதை செய்வார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிறைவேற்றி முடிக்கப்பட்டு விட்ட இந்தத் திட்டங்களை அரசு தொடங்கி வைக்காமல் இருப்பதற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையை ஒரு வாரத்தில் சரி செய்யாவிட்டால் பாமகவினர் களம் இறங்குவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். டாக்டர் ராமதாஸின் அறிக்கை:

உபத்திரவம் செய்யாதீர்கள்

உபத்திரவம் செய்யாதீர்கள்

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்று கிராமப்புறங்களில் கூறுவது உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ... தமிழ்நாட்டை ஆள்பவருக்கும், அவரை ஆட்டிப்படைப்பவருக்கும் கச்சிதமாக பொருந்தும். இவர்களுக்கிடையே நடக்கும் பதவிப் போர் காரணமாக அப்பாவி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

முதல்வராகி 2 மாதமாச்சு

முதல்வராகி 2 மாதமாச்சு

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்று இன்றுடன் இரு மாதங்கள் நிறைவடைகின்றன. இந்த இரு மாதங்களில் தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கான அரசு நலத்திட்ட தொடக்க விழா ஒன்று கூட நடத்தப்படவில்லை. அதற்கு முன் நான்கு மாதங்களாக புதியத் திட்டத் தொடக்கவிழாக்கள் நடத்தப்படவில்லை. இதனால் மக்களின் பயன்பாட்டுக்காக நிறைவேற்றி முடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் திறக்கப்படாமல், யாருக்கும் பயனின்றி முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

பல மாதங்களாக திறக்கப்படவில்லை

பல மாதங்களாக திறக்கப்படவில்லை

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று போற்றப்படும் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், 3 வட்டாட்சியர் அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. தமிழகத்தின் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சொந்த தொகுதியான திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகம், விளையாட்டு அரங்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 200 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டிடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை திறக்கப்படவில்லை.

ஆட்சியர்கள் கோரிக்கை அனுப்பியும்

ஆட்சியர்கள் கோரிக்கை அனுப்பியும்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட ஆதனூரில் ரூ.50 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தின் பல இடங்களில் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்கள், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சத்துணவுக் கூடங்கள், அரசு மருத்துவமனைகள் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்றுவரை திறக்கப்படவில்லை. நிறைவேற்றி முடிக்கப்பட்ட பணிகளை திறப்பதற்கான கோரிக்கைகளை முதலமைச்சர் அலுவலகத்துக்கு மாவட்ட ஆட்சியர்கள் பலமுறை அனுப்பியும் அவை கண்டுகொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முதல்வரைத் தடுக்கும் சசிகலா

முதல்வரைத் தடுக்கும் சசிகலா

புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தயாராக இருப்பதாகவும், ஆனால், அவற்றைத் திறக்கக் கூடாது என்று அவருக்கு அதிமுக பொதுச்செயலர் சசிகலா தரப்பில் தடை போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க இருப்பதாகவும், அதுவரை புதியத் திட்டங்களை தொடங்கி வைக்கக்கூடாது என்றும் தற்போதைய முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் புதிய திட்டங்கள் திறக்கப்படவில்லை என்பதை அரசு அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர்.

சசிகலா ஆணையிட்டுள்ளாரா?

சசிகலா ஆணையிட்டுள்ளாரா?

காஞ்சிபுரம் சோலார் செல் தொழிற்சாலை, இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பேட்டை டிரக் முனையம், மறைமலை நகரில் மகேந்திரா ஆய்வு மையம் ஆகியவை உள்ளிட்ட 25 திட்டங்களை திறந்து வைத்து, திருப்பெரும்புதூர் ஏற்றுமதி பூங்கா, பொன்னேரி தொழிற்பூங்கா, காஞ்சிபுரம் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் விழா கடந்த 12&ஆம் தேதி சென்னையில் நடப்பதாக இருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்திருந்த நிலையில், அவ்விழாவை ரத்து செய்யும்படி சசிகலா தரப்பிலிருந்து ஆணையிடப்பட்டதாகவும், இதையடுத்து அந்த விழா அப்படியே கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சசிகலாவுக்காக கட்டாயக் காத்திருப்பா?

சசிகலாவுக்காக கட்டாயக் காத்திருப்பா?

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு பதவி விலகி இருந்தபோது, எந்த ஒரு திட்டத்தையும் திறந்து வைக்க முதல்வர் பன்னீர்செல்வம் அனுமதிக்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான பேருந்துகள் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு சேதமடைந்தன. சென்னை பெருநகரத் தொடர்வண்டித் திட்டம் கூட 7 மாதங்கள் முடக்கி வைக்கப்பட்டு ஜெயலலிதா பதவியேற்ற பிறகு தான் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதாவுக்காக காத்திருந்த அரசு விழாக்கள் இப்போது சசிகலாவுக்காக கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதுதான் நிர்வாகமா?

இதுதான் நிர்வாகமா?

ஒரே கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; சசிகலா இன்னும் இரு நாட்களில் முதல்வராகக் கூட ஆகலாம். அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை. அதற்காக மக்கள் நலனுக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள், மருத்துவமனைகள்,பாலங்கள் உள்ளிட்ட திட்டங்களை இதுவரை எப்பதவியிலும் இல்லாத ஒருவர் வந்து தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறி முடக்கி வைத்திருப்பது முறையற்றது. மக்கள் நலனுக்கான இத்திட்டங்கள் திறக்கப்படாததால் பல கட்டிடங்களுக்கு வாடகையாக பல கோடி ரூபாய் வீணாக வழங்கப்படுகிறது. இதுதான் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகமா? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

ஒரு வாரம் டைம் தர்றோம்

ஒரு வாரம் டைம் தர்றோம்

இதற்கு முன் சென்னையில் வடபழனி, அமைந்தகரை, ரெட்டை ஏரி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணி முடிவடைந்தும் பல மாதங்களாக திறக்கபடாமல் இருந்தது. அந்த பாலங்களை உடனடியாக திறக்காவிட்டால், அவற்றை பா.ம.க நிர்வாகிகளே திறந்து வைப்பார்கள் என்று கடந்த நவம்பர் 27&ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும், 30ம் தேதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் எச்சரித்திருந்தேன். அடுத்த சில மணி நேரங்களில் மேம்பாலங்களை அதிகாரிகளே திறந்து விட்டனர். அதேபோல், தமிழகம் முழுவதும் நிறைவேற்றி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமலிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரே அவற்றை திறந்து வைப்பார்கள் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has condemned the TN Govt for not unveiling finished schemes all over the state and asked the govt to unveil the same within a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X