For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரு திராவிடக் கட்சிகளின் பேராசையும், சிதையும் தமிழக மக்களின் வாழ்க்கையும்!

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர். மணி

இன்று வட தமிழ் நாட்டில் குறிப்பாக கடலூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது. கடந்த பத்து நாட்களாக கனமழை வட தமிழ்நாட்டை உலுக்கி எடுத்து விட்டது.

வழக்கம் போல இந்தாண்டும் கடலூர் மாவட்டம் புயல் மற்றும் பெரு வெள்ளத்தால் கடுமையான சேதத்தை சந்தித்துக் கொண்டுள்ளது. ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் வருவது போலத்தான் புயலும், பெரு மழையும் இந்தாண்டும் கடலூரைப் புரட்டிப் போட்டு விட்டது.

Dravidian parties greedy behind all the miseries of Tamils

2011 ம் ஆண்டு டிசம்பர் 30 ம் தேதி தானே புயல் புரட்டிப் போட்ட பிறகு பெரிய அளவில் இந்தாண்டு பாதிப்புக்குள்ளானது கடலூர். நடுவில் வந்த இரண்டாண்டுகளிலும் ஓரளவு சேதாரம் இருந்தது.

ஆனால் தானே புயலுக்குப் பிறகு மிகப் பெரிய பெரு மழை வெள்ளம் தற்போதுதான் வந்திருக்கிறது. கடலூர் பெருமழை ஓய்ந்த இரண்டு நாட்களிலேயே சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் கொட்டித் தீர்த்த பெருமழை இன்று நிவாரணப் பணிகளுக்கு ராணுவத்தை அழைக்கும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது. இந்த நிலைமையை தவிர்த்திருக்க முடியுமா என்பதுதான் இன்று எழுந்து நிற்கும் பெருங்கேள்வி.

இதில் முதலில் கடலூர் விவகாரத்தைப் பார்க்கலாம். பல நூற்றாண்டுகளாய் கடலூர் புயல், வெள்ளத்தைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. சுனாமியிலும் கடலூர் புரட்டியெடுக்கப்பட்டது. கடலூரின் வாசற் படியில் உள்ள புதுச்சேரியில் ஏற்படாத பாதிப்பு சுனாமியில் கடலூருக்கு ஏற்பட்டது. இது மனித அறிவுக்கு இதுவரையில் புலப்படாத புதிர்களில் ஒன்றுதான். சுனாமிக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்பு தானே புயல் பாதிப்பு. அப்போது எதிர் காலத்தில் இதுபோன்ற பேரிடர் காலங்களில் எடுக்கப் பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி செவிப்பறை கிழிய ஆட்சியாளர்கள் பேசினர். திட்டங்களையும் உருவாக்கினர். ஆனால் அந்தோ பரிதாபம்... அவற்றில் ஒன்று கூட நிறைவேற்றப் படவில்லை!

Dravidian parties greedy behind all the miseries of Tamils

301 கோடி ரூபாய் செலவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களை, ஏரிகள், கண்மாய்கள் மற்றும் இதர நீர் ஆதாரங்களை தூர் வாருவது குறித்து திட்டங்கள தீட்டப்பட்டன. இதே போல வீராணம் ஏரியின் கொள்ளளவை மேம்படுத்த அதனை சீரான கால இடைவெளியில் தூர் வாரவும் 44 கோடியில் திட்டம் தீட்டப்பட்டது. இன்றுவரை நிறைவேற்றப் படவில்லை. கடலூரை பேரிடர் அதிகம் பாதிக்கும் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட விவசாயிகள் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு அறிவிப்பதால் ஏற்படும் பலன் என்னவென்றால், இதன் காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதியங்கள் நிதியுதவிகளையும், பல சலுகைகளையும் இத்தகைய மாவட்டங்களுக்கு அளிக்கும். அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் சில மாவட்டங்கள் இதுபோன்று அறிவிக்கப் பட்டு அவற்றுக்கு தற்போது உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியங்களில் இருந்து நிதியுதவிகள் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது இதற்கான முன் முயற்சியை, அதாவது ஒரு மாவட்டத்தை பேரிடர் பாதிக்கக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டமாக அறிவிப்பது மத்திய அரசுதான் என்றாலும் அதற்கு மாநில அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும்.

Dravidian parties greedy behind all the miseries of Tamils

ஆனால் அதற்கான முயற்சிகள் தமிழக அரசால் எடுக்கப்படாதுதான் கடலூரில் உள்ள விவரமறிந்த விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதிகப்படியான நீரை கொள்ளிடத்தில் தேக்கி வைப்பதற்கான தடுப்பணைகள் கட்டுவதில் அரசு அக்கரை காட்டாததும் கடலூரின் தீராத வேதனைகளுக்கு அடிப்படை காரணமாக உள்ளது.

இது கடலூரின் பிரச்சனையென்றால், சென்னையைப் பொறுத்தவரையில் நிலைமை சீர்கேடானதற்குக் காரணம், மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய்களை கட்டமைப்பது மற்றும் பராமரிப்பதில் கிஞ்சித்தும் திட்டமிடல் இல்லாததுதான். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 90 சதவிகித நீர் ஆதாரங்களும் தற்போது ஆக்கிரமிக்கப் பட்டிருக்கின்றன. ஏரிகள் எல்லாமே ரியல் எஸ்டேட் கொள்ளையர்களின் பிடியில். கடந்த 15 ஆண்டுகளாக நடந்தேறிவரும் இந்தக் கொள்ளையின் விளைவை இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதி வாசிகள் அனுபவித்து வருகின்றனர். எந்த வித திட்டமிடலும் மழை நீர் வடிகால் மற்றும் கழிவு நீர் வடிகாலில் இல்லாதது இன்று சென்னை மாநகரம் அனுபவிக்கும துயரின் ஊற்றுக் கண்ணாய் இருக்கிறது.

"திட்டமிடல் இங்கு அறவே இல்லை. சென்னையின் புறநகர் பகுதிகள் நாளும் விரிவடைந்துக் கொண்டிருக்கின்றன. இந்த விரிவடைந்த பகுதிகளின் கழிவு நீர் கால்வாய்கள் பற்றிய வரைபடம் யாரிடமாவது இருக்கிறதா என்றால், பதில் இல்லை! எந்தவோர் வளர்ந்த நாகரிக நாட்டிலும் இதுபோன்ற அவலம் காணக் கிடைக்காது," என்று வேதனையுடன் கூறுகிறார் சென்னை வளர்ச்சிக் கல்வி மையத்தின் (எம்ஐடிஎஸ்) ஓய்வு பெற்ற பேராசிரியரும், தேசிய அளவில் புகழ் பெற்ற நீரியல் துறை நிபுனருமான ஜனகராஜன்.

"நீர் நிலைகளை முற்றிலுமாக அழித்துக் கொண்டிருக்கிறோம். மழை நீர் சேமிப்பென்பது வீட்டில் மழை நீரை பூமிக்கடியிலும், சம்ப்பிலும் விடுவதல்ல. பெரிய, பெரிய ஏரிகளை, குளங்களை தூர் வாரி அவற்றின் மொத்த கொள்ளளவை கொண்டு மழை நீரைச் சேமிப்பதுதான்," என்று மேலும் கூறுகிறார் ஜனகராஜன்.

சென்னையைச் சுற்றிலும் இருந்த நூற்றுக்கணக்கான ஏரிகள் இன்று கல்லூரிகளாகவும், பள்ளிகளாகவும், உறைவிடப் பள்ளிகளாகவும், அபார்ட்டுமெண்ட்களாகவும் மாறிப் போயிருக்கின்றன. இது கடந்த 15 ஆண்டுகளாக தொய்வின்றி நடந்தேறி வரும் கொடுமை. தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு கொண்டிருக்கும் திமுக வும், அஇஅதிமுக வும் தங்களை ஆள வைத்த தமிழகத்துக்குக் கொடுத்த பதிலுபகாரம் இது.

Dravidian parties greedy behind all the miseries of Tamils

பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள் இன்று ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நில ஆக்கிரமிப்பு செய்து தான் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலம் ஏரிகளாகவும், குட்டைகளாகவும் இருந்தன என்பதுதான் உண்மை. இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளை ஏதோவோர் அரசியல் பின்புலம் கொண்டவர்கள்தான் நடத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால்தான் நிலைமையின் முழு வீச்சு புரியும். கொள்ளையடிக்கும் ஊழல் பணம் இன்று ரியல் எஸ்டேட் மற்றும் பொறியியல் கல்லூரி, உறைவிடப் பள்ளிகள் என்று கல்வி வியாபாரத்தில்தான் செலவிடப்படுகிறது என்பது ஊரறிந்த உண்மை. அந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இந்த நிலைமைக்கு இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுமே முழுக் காரணமென்பது புரியும். ஆகவே இவை எல்லாமே விஷச் சுழலாக - லஞ்சப் பணம், அதை முதலீடு செய்ய நிலத்தை வளைப்பது, வளைத்த நிலத்தில் கட்டிடங்கள் கட்ட விதிகளை காற்றில் பறக்க விடுவது அல்லது காலத்துக்கேற்ற புதிய விதிகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுவது, வானாளாவிய கட்டிடங்கள் எழும்பி நிற்பதற்காக நீராதாரங்களை அழித்தொழிப்பது - இவை எல்லாமே கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளாக கனஜோராக தமிழகத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அதன் பலனைத்தான் இன்று அனைவரும் அனுபவிக்கிறோம்.

‘எல்லோருடைய தேவைக்கும் இந்தப் பூமியில் எல்லாம் இருக்கிறது. ஆனால் எல்லோருடைய பேராசைக்கும் இல்லை' என்று கூறுவார் மஹாத்மா காந்தி. இன்று கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக நிலத்தை வளைத்து, நீராதாரங்களை சிதைத்த அரசியல்வாதிகளின் ஊழலுக்கும், பணத்தாசைக்கும் தமிழகம் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. மழையை இயற்கை பேரிடர் என்பதே அயோக்கியத்தனமானதுதான். இயற்கையின் அருட் கொடை மழை. அதனை உரிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் திறனை இழந்து விட்ட மனிதன் பெருமழையை பேரிடர் என்பது அபத்தத்தின் உச்சம். மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என்று மழையை வியந்து பாடிய தமிழகம் இது.

செம்பரம்பாக்கத்தில் திறந்துவிடப் பட்ட தண்ணீரின் அளவு கிட்டத்தட்ட அரை டிஎம்சிக்கும் மேல். இந்த நீரைக் கொண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களில் பயிர் செய்திருக்கலாம். இன்று அது தெருக்களில், சாக்கடையில் ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களை மாறி மாறி கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளின் பேராசைக்கான விலையை தமிழகம் இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது. நிலம் எனும் நல்லாள் இன்று நம்மை பார்த்து கெக்கொலிக் கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறாள்!

English summary
What are the reasons for the present pathetic condition of Tamil Nadu that battered by heavy rain? According to the article, the mismanagement of two Dravidian parties which ruled the state for the past 40 years spoiled the state's water management.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X