For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல.. கொளத்தூர் மணி

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள் தேச துரோகிகள் என்று பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம், அரசியல் சட்டம் எரிப்புப் போராட்டம் என்று பெரியாரால் அறிவிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. தேசியக் கொடி எரிப்பு போராட்டத்திற்கான அடிப்படை இங்கே இருக்கிறது. தேசியக் கொடியை எரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா.. மோடியை பற்றி விமர்சித்தாலே தேச விரோதமா என்பது குறித்து ஒன்இந்தியா கேட்ட கேள்விகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பதில்கள் இதோ...

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண் இது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

DVK leader Kolathur Mani on burning of National flag

மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றுவதற்கான முன்முயற்சிகளில் உதவுவது என்பதின் மூலம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களது போராட்டமாக காண்பிக்க முயற்சி மேற்கொண்டதன் அடையாளமாகத்தான் விவேகானந்தர் இல்லம் அருகில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால்தான் விவேகானந்தர் படத்தை வைத்துக் கொண்டு போராட்டம் தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு என்ன வேலை என்று கேட்கிறார்கள். அப்படி என்றால் விவேகானந்தருக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன சம்பந்தம்? அதுபற்றி ஏன் இதுவரை யாரும் பேசவில்லை?

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடங்கிவிட்ட நிலையில், நாளாக நாளாக தமிழ்நாட்டின் இயல்பான நிலை போராட்டத்தில் வெளிப்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பன போன்ற முழக்கங்கள் மட்டுமே தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்டன. அதற்கு மேல் எந்த முழக்கங்களும் வராமல் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், போராட்டத்தின் தன்மை தமிழ்நாட்டு தன்மைகேற்ப பின்னர் மாறிவிட்டது. இந்தப் போராட்டத்தில் தேசியக் கொடி எங்கும் எரிக்கப்பட்டதாக நான் கேள்விப் படவில்லை. அவமதிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். எரித்திருந்தால் கூட தமிழ்நாட்டிற்கு அது புதிய விஷயமல்ல.

மோடி யோகாசனம் செய்யும் போது தேசியக் கொடியை கழுத்தில் போட்டுக் கொண்டும் முகத்தை துடைப்பதையும் விட மோசமாக ஜல்லிக்கட்டுபோராட்டத்தின் போது அவமதிக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன். அப்படியே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டில் இது இயல்பானதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியார் காலத்தில் தமிழ்நாட்டில் தேசியக் கொடி எரிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட தமிழ் தேசிய விடுதலை இயக்கமும், தமிழ்தேசிய பேரியக்கமும் தேசியக் கொடியை எரித்து சிறைக்கு சென்றுள்ளனர். ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இதுபோன்று எதுவும் நிகழவில்லை.

ஏதோ சாதாரணமாக போராட்டம் நடந்து முடிந்துவிடும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் மாறியதை பாஜகவினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் பின்லேடன் படத்தை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று ஒரு பொறுப்புமிக்க முதல்வர் சொல்கிறார். இதே செய்தி பத்திரிகையொன்றில், உளவுத் துறை அறிக்கை என்று வெளியிடப்பட்டிருந்தது. அதை அப்படியே சட்டமன்றத்தில் முதல்வர் படிக்கிறார். ஒரு முதல்வர் என்றால் அதனை ஒப்பிட்டு ஆய்வு செய்து பின்னர் சொல்லி இருக்க வேண்டாமா?.

போராட்டத்தில் பின்லேடன் படம் வைத்திருப்பதாக சொல்வது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கான விஷயமாக பார்க்க வேண்டி இருக்கிறது. போராட்டம் அவர்கள் கையில் இருந்து போன பிறகு அதற்கு இஸ்லாம் சாயத்தை பூச பாஜக முயற்சி மேற்கொள்கிறது.

போராட்டத்தில் இஸ்லாமியர்கள் வந்தார்கள் உணவு கொடுத்தார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. முஸ்லிம்கள் உணவு கொடுப்பதெல்லாம் ஒன்றும் புதிய செய்தியல்ல. சென்னை வெள்ளத்தில் மூழ்கி இருந்த போதும், வர்தா புயல் தாக்கிய போதும் முஸ்லிம்கள் உணவு வழங்கினார்கள். அவர்கள் தொடர்ந்து மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இயல்பாக தமிழர்களாக இருக்கிறார்கள். அவர்களை முஸ்லிம்களாக பிரித்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அவர்களுக்கு என்ன வேலை என்று பாஜகவினர் கேட்கிறார்கள். பொங்கல் என்பது தமிழர் திருவிழாவே தவிர, அது இந்துக்கள் திருவிழா அல்ல.

வட இந்தியாவில் செய்யும் தந்திரங்களை இங்கும் செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது. தமிழ் நாட்டில் பிறந்தாலும் வட இந்தியாவிலேயே வசிக்கும் நிர்மலா சீதாராமனுக்கு இது எல்லாம் தேச விரோத செயலாகத்தான் தெரியும்.

தேசியக் கொடியை அவமதிப்பது என்பதே தேச துரோக குற்றமா?

எந்த நோக்கத்தில் செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம். போராட்டக்காரர்கள் உண்மையில் தேசியக் கொடியை அவமதிக்கவில்லை. பாஜகவினர் இட்டுக்கட்டி அப்படி சொல்கிறார்கள். அப்படியே எரித்திருந்தால் கூட தேசத்தை அவமதிப்பது அல்ல. எங்களுடைய பாரம்பரிய விளையாட்டை அனுமதிக்காத இந்தியா எங்களுக்கு வேண்டுமா என்பதின் குறியீடாக நாம் எடுத்துக் கொள்ளலாம். போராட்டக்காரர்களுக்கு எழுந்த கோபம் நீண்ட காலமாக தேக்கி வைக்கப்பட்ட கோபம். நதிநீர் உரிமைகள், இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதக் கூடிய பொது நுழைவுத் தேர்வு உள்ளிட்டவைகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் மீது இளைஞர்களுக்கு இயல்பாகவே கோபம் இருக்கிறது. இது எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக வெளிப்பட்டிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்.

பிரதமர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? அவரை விமர்சித்தாலே தேச விரோத குற்றமா?

முன்னாள் பிரதமர் நேருவை விமர்சித்த போது, நகைசுவையோடு அதனை அவர் ஏற்றுக் கொண்டதை எல்லாம் இந்திய வரலாறு நமக்கு சொல்கிறது. மோடி என்றால் எதிர்த்தே பேசக் கூடாது என்று ஒரு பிம்பத்தை பாஜகவினர் கட்டி எழுப்பி வைத்துள்ளார்கள். அவரை ஒரு புனிதர் போன்று காட்ட முயற்சி செய்கிறார்கள். இவர்களின் புனிதத்தை எல்லாம் மேகாலயாவில் சண்முகநாதன் காண்பித்துவிட்டார்.

மேலும், 5 வட மாநிலங்களில் தேர்தல் வர உள்ள நிலையில், மோடிக்கு எதிராக போராட்டம் நடப்பதை பாஜகவினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வட இந்திய மீடியாக்கள் எல்லாம் மோடியை பாடையில் வைத்து எடுத்து செல்வது போன்ற காட்சிகளை அடிக்கடி ஒளிப்பரப்பியுள்ளன. இதன் மூலம் மோடியின் மீது செயற்கையாக கட்டி எழுப்பப்பட்ட பிம்பம் குலைந்துவிடும் என்ற அச்சம் பாஜகவினருக்கு ஏற்பட்டது. அதுதான் இதுபோன்ற கலவரத்திற்கு காரணமாகவும் இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் நிலை கொள்வதற்கு தமிழக அரசை பாஜக பயன்படுத்திக் கொள்கிறதா?

ஆமாம். தேர்தலின் நின்று ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட பாஜகவினர், இப்போது தமிழகத்தில் உள்ள நெருக்கடியான சூழலை தங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருவதாக நான் பார்க்கிறேன். அதற்கு இணங்கிப் போனவராகத்தான் முதல்வரையும் நான் பார்க்கிறேன்.

இதுகுறித்து, நீங்கள் என்ன செய்ய திட்டம் வைத்திருக்கின்றீர்கள்?

எல்லாக் கட்சியினரும் சேர்ந்து கட்சி அடையாளம் இல்லாமல் ஒன்று திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழக காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தவும், முதல்வரை சந்தித்து மனு கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.

மோடியை அம்பலப்படுத்துபவர்கள் எல்லோரும் சமூக விரோதிகள் என்று முத்திரை குத்த பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர்களை எதிர்த்தால் தேச விரோதிகள், ஆதரித்தால் தேச பக்தர்கள். மாட்டுக்கறி சாப்பிட்டால் தேச விரோதி என்று சொல்வார்களே அப்படித்தான் இதுவும். அவர்களின் செயல் திட்டத்திற்கு எதிராக எது இருந்தாலும், அது தேச விரோதம். பாஜகவின் செயல்கள், திட்டங்கள் குறித்து தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசுவோம். எடுத்துரைப்போம்.

English summary
Burning of National flag is not anti-national activity said DVK leader Kolathur Mani to One India today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X