For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செஷல்ஸ் நாட்டு சிறுவனுக்கு காது மாற்று அறுவை சிகிச்சை - சென்னை மருத்துவர் சாதனை

Google Oneindia Tamil News

சென்னை: செஷல்ஸ் நாட்டில் காதே இல்லாமல் பிறந்த சிறுவனுக்கு, நவீன அறுவை சிகிச்சை மூலம் புதிய காதை உருவாக்கி காது மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை டாக்டர் எஸ்.எம்.பாலாஜி சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர், "செஷல்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி சண்டர் பிரகாஷ். இவருடைய மனைவி நட்டாலி. இவர்களுடைய மகன் நேத்தன். நேத்தன் 4 ஆவது வகுப்பு படித்து வருகிறான். ஆனால் அவனுக்கு பிறவியிலேயே வலது பக்க காது இல்லை. ஆனால் நன்றாக கேட்கும் திறன் இருந்தது.

Ear transplant operation in Chennai

இருப்பினும் வகுப்பில் மற்ற மாணவர்கள் போல "கூலிங் கிளாஸ்" மற்றும் வாக் மேன் போன்றவற்றை பயன்படுத்த முடியாமல் இருந்தான். இதை அவன் பெரிய குறையாக கருதினான். எனவே நேத்தனுக்கு புதிய காதை உருவாக்க அவனது தாய் நட்டாலி விரும்பினார். இதற்காக அவர் பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளை நாடினார்.

இருப்பினும் அவருக்கு திருப்தி அளிக்காததால் சென்னையில் உள்ள என்னை அவரும், நேத்தனும் நாடினார்கள். எனவே அந்த சிறுவன் நேத்தனை பரிசோதனை செய்தேன். அப்போது காதின் வெளிப்புற அமைப்பு முற்றிலும் உருவாகவில்லை என்பதை தெரிந்துகொண்டேன். பிறவிக்குறைபாடான மைக்ரோடியா என்னும் காதின் அமைப்பின் பாதிப்பை இரு கட்ட அறுவை சிகிச்சையால் சரி செய்ய திட்டமிட்டேன்.

அதன்படி முதல் அறுவை சிகிச்சை நவீன முறையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. அப்போது அவனது விலா எலும்பை கொண்டு சரி செய்தேன். மிருதுவான எலும்பாகிய குருத்தெலும்பின் உதவியை கொண்டு காதின் அமைப்பை உருவாக்கினேன். அந்த காது பெரியவரின் காது அளவிற்கு வடிவமைக்கப்பட்டது. அதாவது 18 வயதில் காது முழு வளர்ச்சி அடையும் போது எந்த அளவுக்கு பெரிதாக இருக்கும் என்று நினைத்து பார்த்து செய்யப்பட்டது.

3 மாதம் கழித்து நேத்தனை பரிசோதித்ததில் ஏற்கனவே பொருத்தப்பட்ட காதின் வடிவம் நன்றாக பொருந்தி ரத்த ஓட்டம் இருந்தது. அதனால் அவன் 2 ஆவது அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யப்பட்டான். அந்த அறுவை சிகிச்சையின் போது அவனின் இடுப்பு பகுதியில் இருந்து தோல் எடுக்கப்பட்டு காதின் அமைப்பு சரிசெய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 9 வயது சிறுவனுக்கு நடந்திருப்பது ஒரு சாதனைதான். இப்போது அவனுக்கு நிரந்தர காது உருவாக்கப்பட்டுள்ளது. நேத்தன் இன்று தாய் நாட்டுக்கு செல்கிறான்" என்று தெரிவித்தார்.

சிறுவன் நேத்தன் கூறுகையில், "நான் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எல்லோரைப் போல எனக்கு வலது காது உள்ளது. அதனால் நன்றாக கூலிங் கிளாஸ் அணியமுடிகிறது. நவீன அறுவை சிகிச்சை செய்த வலது காதில் நன்றாக உணர்ச்சி உள்ளது. இதற்காக டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றான்.

English summary
Ear transplant done for a foreign boy in Chennai. doctors done this operation successfully.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X