For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'யாரையோ திருப்திபடுத்த' சன் டி.வி. நிறுவன சொத்துகள் முடக்கம்: தயாநிதிமாறன் "நீண்ட" விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சன் டி.வி. நிறுவனத்தின் சொத்துகள் முடக்கத்தின் பின்னணியில் அரசியல் நிர்ப்பந்தம் உள்ளது. சட்டவிதிகளை மீறி யாரையோ திருப்திப்படுத்த அமலாக்கப்பிரிவு செயல்பட்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிரடியாக சன்.டி.வியின் இடம், சன் குழும அதிபர் கலாநிதி மாறனின் நிரந்தர டெபாசிட் தொகை ரூ100 கோடி உட்பட ரூ742.58 கோடி மதிப்பிலான 11 சொத்துகளை முடக்கியது.

ED trying to please someone: Dayanidhi Maran

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அமலாக்கத்துறை ஏடுகளுக்கு வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சொத்துக்கள் முடக்கம் குறித்து ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாருடைய தூண்டுதல் பெயரால், அவப்பெயர் உருவாக்க நடத்தப்பட்ட விவகாரமாகவே தோன்றுகிறது.

சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை இந்த சொத்து முடக்க விவகாரத்தில் சட்டவிதிகள் அனைத்தையும் மீறி அவசரஅவசரமாக செயல்பட்டுள்ளது என்பதே இதன் பின்னணியில் யாரோ இருப்பதைத் தெளிவாக்குகிறது.

தவறான முறையில் வந்த பணத்தில் வாங்கிய சொத்துக்களைத்தான் முடக்க வேண்டும் என சட்டவிதி தெளிவாக தெரிவிக்கிறது.

2007 மார்ச்சில் நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன். ஆனால், 2007 இறுதியில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீட்டைத் தொடங்கியதாக கூறப்படும்போது, அந்தக் காலக்கட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. எனவே, 2007க்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது சட்டத்தை மீறி அமலாக்கப் பிரிவு யாரையோ திருப்திப்படுத்த செயல்படுவதை தெளிவாகக் காட்டவில்லையா?

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் இரு நிறுவனங்களுக்கு இடையே முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி முறைப்படி நடைபெற்ற ஒப்பந்த விவகாரம். அதிலே எந்தவித குற்றவியலும் இருக்க முடியாது என இரு உச்சநீதிமன்ற நீதிபதிகளான காரே, கபாடியா ஆகியோர் கருத்து தெரிவித்து அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில், சிவசங்கரனுக்கும் மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற இது தொடர்பான வழக்கில், சிவசங்கரன் மேக்சிசுடன் செய்துகொண்ட ஒப்பந்தம், சட்டப்படி நடந்த ஒன்று என்றும், அதில் எந்த தவறும் நடைபெறவில்லை எனவும் தீர்ப்பு வழங்கியதும் சிவசங்கரனும், அதை ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் எதிலும் எனக்கு பங்கோ, பாத்யதையோ இல்லாதது மட்டுமல்ல, அவைகளிடமிருந்து எனக்கு எந்தவிதப் பணப் பறிமாற்றமோ நடைபெறவில்லை என்பதை நன்கு அறிந்தும், சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடெட் மற்றும் சவுத் ஏசியன் எப்.எம். லிமிடெட் கம்பெனிகளில் எனக்கு எந்தவித உரிமையும், தொடர்பும் இல்லாதபோது தொழில் ரீதியாக மேலே குறிப்பிட்ட நிறுவனங்களிடையே நடைபெற்றுள்ள பண முதலீட்டை திசை திருப்பியிருப்பது இதன் பின்னணியினைத் தெளிவாக்கும்.

இரு கம்பெனிகளுக்கிடையே வெளிநாட்டில் இருந்து பண முதலீடு என்றால் அதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதியைப் பெறாமல் செய்ய முடியாது என்பது சாதாரண அறிவு படைத்தவர்களுக்கும் தெரிந்த விவகாரம். அப்படி வியாபார ரீதியாக, மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்ற பணம் முதலீட்டுக்கு வண்ணம் பூசுவது அரசியல் இல்லாமல் வேறாக இருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டவிதிகளைப் புறந்தள்ளி நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் சட்டவிதிகளை அறிந்தவர்களால் நன்கு உணரமுடியும். அமலாக்கத்துறை சட்டவிதி என்ன சொல்கிறது; ஒரு சொத்தை முடக்க வேண்டுமானால் அந்த சொத்து குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டின் விளைவாக பெற்றதாக இருந்தால்தான் அதனை முடக்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், சம்பந்தமே இல்லாத சொத்துக்களை முடக்கி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது ஒன்றே யாருடைய நோக்கத்தையோ செயலாக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டவில்லையா? முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொத்துக்களை எல்லாம் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் முதலீட்டுக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவை என்பது தெரிந்தும், முடக்கும் இந்த முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தைத்தான் தருகிறது.

அமலாக்கத்துறை ஏடுகளுக்குத் தந்த செய்திக் குறிப்பில், தயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட சட்டவிரோத கைமாற்றுக்குப் பெறப்பட்ட தொகையைக் கொண்டு வாங்கிய சொத்துக்களை முடக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆஸ்ட்ரோ கம்பெனி, சன் டைரக்ட் டிவியிலும், சவுத் ஏசியா எப்எம்மிலும் முதலீடு செய்யத் தொடங்கியது 2007 இறுதியில் இருந்துதான் என்பதை அந்த நிறுவனங்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.

உண்மை அப்படியிருக்க, அதற்கு முன்பாக பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை இப்போது அமலாக்கத்துறை முடக்க முன்வந்துள்ளதாகக் கூறுவது விதிமுறைகளுக்கு எதிரானது அல்லவா. தவறான முறையில் வந்த பணத்தில் வாங்கிய சொத்துக்களைத்தான் முடக்க வேண்டும் என சட்டவிதி தெளிவாக தெரிவிக்கிறது.

2007 மார்ச்சில் நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன். ஆனால், 2007 இறுதியில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீட்டைத் தொடங்கியதாக கூறப்படும்போது, அந்தக் காலக்கட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை.

2007க்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது சட்டத்தை மீறி அமலாக்கப் பிரிவு யாரையோ திருப்திப்படுத்த செயல்படுவதை தெளிவாகக் காட்டவில்லையா? மேலும் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் இரு நிறுவனங்களுக்கு இடையே முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி முறைப்படி நடைபெற்ற ஒப்பந்த விவகாரம். அதிலே எந்தவித குற்றவியலும் இருக்க முடியாது என இரு உச்சநீதிமன்ற நீதிபதிகளான காரே, கபாடியா ஆகியோர் கருத்து தெரிவித்து அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில், சிவசங்கரனுக்கும் மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற இதன் தொடர்பான வழக்கில், சிவசங்கரன் மேக்சிசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், சட்டப்படி நடந்த ஒன்று என்றும், அதில் எந்த தவறும் நடைபெறவில்லை என தீர்ப்பு வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிவசங்கரனும், அதனை ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில், அமலாக்கத்துறையில் சொத்து முடக்கும் முயற்சி என்பது சட்டவிதிகளை மீறி யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதைத் தெளிவாக்குகிறது. இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு அதிலே வெற்றி பெறுவேன் என்பதையும் தெரிவித்துக் கூறிட விழைகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தயாநிதிமாறன் கூறியுள்ளார்.

English summary
Former Telecom Minister Dayanidhi Maran on Thursday said the Enforcement Directorate had attached assets worth Rs. 742.58 crore held by him and his brother's family under "political compulsions" to "please someone."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X