• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அய்யே.. டிவி சீரியல்களை சீரியஸா பார்க்காதீங்க.. மன நோயில் மாட்டிக்குவீங்க!

|

சென்னை: ஒரு ஜோக் படித்தேன்.

மறுநாள் காலையில் தூக்கிலிடப்பட வேண்டிய கைதியை நீதிபதி கேட்கிறார், உங்கள் கடைசி ஆசை என்ன?
தூக்கிலிடப்படும் வரை டி.வி.சீரியல் பார்க்க வேண்டும் என்கிறார் அந்த கைதி. அதன்படி அவனிடத்திற்கு தொலைக்காட்சி பெட்டி வருகிறது. பெருத்த மகிழ்ச்சியுடன் சீரியலை பார்க்க துவங்குகிறான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அலறல் சத்தம்.

டிவியிலிருந்து அல்ல... அவனிடமிருந்து...
ஏன்? என்ன ஆயிற்று, ஏன் இப்படி கதறுகிறீர்கள்?
என்னால் காலை வரை பொறுக்க முடியாது. என்னை இப்போதே தூக்கில் போடுங்கள்

- நமது தொலைக்காட்சி தொடர் பற்றி இதைவிட சரியாக வேறு யாராலும் விமர்சிக்க முடியாது. அந்த அளவிற்கு நரகமாகவும் சித்திரவதையாகவும் மாறிவிட்டன.

 ஒலியும் ஒளியும்

ஒலியும் ஒளியும்

தொலைக்காட்சி வந்த புதிதில் மக்கள் எவ்வளவு குதூகலமடைந்தார்கள் என்பது இப்போதுள்ள தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. தொலைக்காட்சியை வரவேற்று கொண்டாடினார்கள். வெள்ளி கிழமைகளில் அரை மணி நேரம் 'ஒலியும் ஒளியும்' பார்த்தால் போதும், அதுவே மனசுக்கு இதமாக இருக்கும். ஞாயிற்றுக்கழமை மாலை ஒரு தமிழ் திரைப்படம் போடுவார்கள். ஊரே காலியாகிவிட்ட மாதிரி வீதியெல்லாம் வெறிச்சோடியிருக்கும். குழந்தை குட்டிகளோடு உட்கார்ந்து ஒரு திரைப்படத்தை பார்த்தால் போதும், ஒரு வாரத்திற்கு தாங்கும், மனசுக்கும் ஆறுதலாக இருந்தது. பிறகு மெல்ல மெல்ல சீரியல்கள் தலைகாட்ட தொடங்கின. அவையெல்லாம் வாரத்திற்கு ஒருமுறைவந்து கொண்டிருந்ததால் மக்களிடம் ஆர்வம் அதிகரித்தது. ராமாயணம், மகாபாரதம் போன்ற தொடர்கள் எல்லாம் இந்த ரகத்தை சார்ந்தவையே.

 உச்சக்கட்ட தந்திரம்

உச்சக்கட்ட தந்திரம்

ஆனால் தற்போது வெளிவரும் டி.வி.சீரியல்கள் எல்லாமே விளம்பரங்களை அடிப்படையாக கொண்டவை. விளம்பரங்களோ டி.வி.பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டவை. வியாபாரிகளின் உச்சக்கட்ட தந்திரம்தான் இப்படி மெகா சீரியல்களாக வடிவெடுத்துள்ளன. பெண்களுக்கென்று சமுதாயத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. உயர்ந்த மதிப்பீடுகள் இருக்கின்றன. பெண் என்றால் எதையும் தாங்குவாள், பக்குவம் நிறைந்தவள், தன்னடக்கம் உடையவள், சோதனை-வேதனைகளை சீர்தூக்கி பார்ப்பவள் என்றெல்லாம் சீரிய கருத்துக்கள் உள்ளன.

 அடாவடி பெண்களும்

அடாவடி பெண்களும்

அத்துடன் பெண்களுக்கு அன்பும் பாசமும் இரக்கமும், தயாள குணமும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் டி.வி. பெட்டியில் வருகிற பெரும்பாலான பெண்களுக்கோ ஈவிரக்கமே இருக்காது. ஒரு பாத்திரமாகிலும் கண்ணியமாக, தன்னடக்கமாக பொறுமையின் சின்னமாக, தியாக தீபமாக இருக்கிறதா? பெரும்பாலும் அடங்காபிடாரிகள், அவசரகாரிகள், ஆர்ப்பாட்டக்காரிகள், அடிதடி ரகளையில் ஈடுபடும் சண்டைக் கோழிகள். சவால் விடுவது, சவடால் அடிப்பது, சக பெண்களையே கட்டி வைத்து சித்ரவதை செய்வது, கூலிப்படை மூலம் கொன்று புதைப்பது, நம்ப வைத்து கழுத்தை அறுப்பது, போட்டி, பொறாமை என்று எல்லாவிதமான துர்குணங்களுக்கும் இவர்கள் சொந்தக்காரிகளாய் இருப்பார்கள்.

 பகுத்தறிவுக்கு வேட்டு?

பகுத்தறிவுக்கு வேட்டு?

வெளிநாட்டுக்காரர்கள் இந்த சீரியல்களை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? தமிழ்நாட்டு பெண்கள் எல்லாம் இப்படித்தானோ என்று நினைக்க மாட்டார்களா? சில சீரியல்கள் மனிதனின் மிருக உணர்ச்சியை மட்டுமல்ல, மூடநம்பிக்கைகளையும் கிளறிவிடுகின்றன. பேய்., பிசாசுகள், பில்லி சூனியங்கள், பூதங்கள், மந்திர தந்திரங்கள், மாந்திரீகங்கள், பாம்பு பழிதீர்த்தல், போன்ற பகுத்தறிவுக்கு வேட்டு வைக்கும் சீரியல்கள் மலிந்துவிட்டன. இத்தொடர்களை பார்க்க வேண்டிய, தவிர்க்க முடியாத நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுவிட்டார்கள். வேலைமுடிந்து அக்கம்பக்கம் உள்ள பெண்களிடம் கூட இவர்களால் கலந்துரையாட முடியாது. இதன் காரணமாக பொன்னான நேரமெல்லாம் பயனற்றதாகி கொண்டு வருகிறது.

 அதிகரிக்கும் வன்முறை

அதிகரிக்கும் வன்முறை

குடும்பங்களில் உள்ள உறவுகளுக்குள் சண்டைகள், கள்ள உறவுகள், விவாகரத்துகள் போன்றவை உருவாக காரணமாவதில் பெரும் புண்ணியம் சீரியல்களுக்குதான் போய் சேரும். தொலைக்காட்சி தொடர்களுக்கும் தணிக்கை சான்றிதழ் ஏதும் இல்லையென்பதால், நவநாகரீக பெண்களின் உடைகளில் கவர்ச்சிகள் தலைதூக்க தொடங்கியுள்ளன. வன்முறைகளோ அநாயாசமாக வந்து போகின்றன.

 உணர்வு தூண்டலே...

உணர்வு தூண்டலே...

எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான மக்கள் பார்க்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு விளம்பரம் கிடைக்கும். எனவே, அதிகமான மக்கள் பார்ப்பதற்கு என்ன செய்வது? அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட வேண்டும். அதிலும் குறிப்பாக மலிவான உணர்ச்சிகளை உசுப்பிவிட வேண்டும். இதற்காகத்தான் மட்டமான கதாபாத்திரங்களையும் மோசமான கதையையும் சீரியல் இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள். இல்லத்தரசிகளை குறிவைக்கும் வியாபாரிகள், அவர்களை மனம் உருகி ஒன்றிப்போக வைப்பதற்காக புதிது புதிதாக கதைகளை யோசித்து உருவாக்க வேண்டியதாகிவிட்டது.

 உளவியல் எச்சரிக்கை

உளவியல் எச்சரிக்கை

அதன்விளைவே... பிழிய பிழிய அழவைக்கும் தொடர்கள். இதில் கதாநாயகி உச்சக்கட்ட தியாகத்தின் திருவுருவாளாக விளங்குவாள். ஒரு கதாபாத்திரம் நம்மால் நினைத்து பார்க்க முடியாத தியாகியாக இருந்தால் அதற்கு எதிர்மாறான கதாபாத்திரம் கற்பனைக்கு எட்டாத கெட்ட குணங்கள் நிறைந்தவளாக இருப்பாள். யதார்த்தம் என்பது துளியும் இல்லாத இந்த தொடர்களில் வரும் கேரக்டர்களின் குணங்கள், நம்மையறியாமலேயே நமக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்துவிடும் என்பது உளவியல் நிபுணர்களின் எச்சரிக்கை.

 ஆக்கமும்-அழிவும்

ஆக்கமும்-அழிவும்

இந்த நிலை நீடித்தால் காந்தி போதித்த அகிம்சை, சகிப்புத்தன்மை போன்றவைகளை பூதக்கண்ணாடிக் கொண்டுதான் தேட வேண்டியிருக்கும். ஊடகம் என்பது விஞ்ஞானத்தின் வளர்ச்சி. எப்படி அணுவை ஆக்க சக்தியாகவும், அழிவு சக்தியாகவும் பயன்படுத்த முடியுமோ அதுபோல்தான் அனைத்து விஞ்ஞான வளர்ச்சிகளும். அதை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சியும் மேன்மையும் அமையும். இல்லத்தரசிகளின் சீரியல் அடிமைத்தனத்தினால் பாதிக்கப்படுவது கணவன்மார்கள் மட்டுமல்ல, அந்த வீட்டிலுள்ள பள்ளி படிக்கும் மாணவர்கள், முதியோர்கள் உட்பட எல்லோருமே ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நேயர்களில் கணிசமானோர் ஒருவகையான மன நோய்க்கும் ஆளாவதாக ஆய்வு சொல்கிறது.

 புறந்தள்ளி பழகு

புறந்தள்ளி பழகு

அவர்களது பார்வை, பேச்சு, செயல், எல்லாமே நம்பிக்கையின்மையின் காரணத்தால் முற்றிலும் மாறிப்போய்விடுகின்றன. ஏற்கனவே சுற்றியிருப்பதையெல்லாம் பணத்திற்காக வாழ்வதை பார்க்கிற இவர்களை, இதுபோன்ற தொடர்கள் ஒரு புதிய கருத்தோட்டத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் இட்டுச் செல்கின்றன. மனித உறவுகள் பாழ்படுத்திவிட்டால் குடும்பம் ஏது? சமூகம் ஏது? அதில் அமைதியும் சாந்தமும் ஏது? மனித இதயங்களை காயப்படுத்தும் இதுபோன்ற தொடர்களுக்கு முற்றுப்புள்ளி தேவை. எனவே இதில் முதல் விழிப்புணர்ச்சி பெண்களிடத்தில்தான் ஏற்பட வேண்டும். நச்சுகளை புறம்தள்ளப் பழகினோமானால் விளம்பரங்கள் மூலம் பணம் கொழிக்கும் வியாபாரிகளும் தங்களை மாற்றிக் கொண்டேதான் ஆக வேண்டும்-வேறு வழியில்லை. அப்போதுதான் சிறந்த தொடர்கள் தலைதூக்க ஆரம்பிக்கும்.

English summary
The study found that Tamil television series has a mental illness. Not only women, but also women in the house are afflicted by stress, because of the cheerful feelings and feelings for business tricks. So it is better if the television series is released with healthy thinking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X