For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே நாளில் ரூ.11 கோடி பறிமுதல்... கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கடும் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 11 கோடியே 32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், வாகனச் சோதனை நடத்தவும் பறக்கும் படைகள் செயல்பட்டு வருகின்றன.

Election Commission orders strict vigil across state to curb black money incidents

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பெருமளவு பணம், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. இதனால் தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடனும் கூட்டணி வைத்து தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்பலனாக, சென்னையில் அதிமுக பிரமுகர் உட்பட பலரது வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் சேர்ந்து நடத்திய சோதனையில் ஒரே நாளில் ரூ. 11 கோடி சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக சோதனையை மேலும் தீவிரப்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தல் கமிஷன் சார்பில் அதன் இயக்குனர் தீரேந்திர ஓஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. அதன் விபரமாவது:-

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இருந்து 22-ந் தேதி கிடைத்த தகவலின்படி, வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினர் சென்னையிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தினர். ரகசிய தகவல்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் ரூ.5 கோடியே 20 லட்சம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் வழக்கமான வியாபார செயல்பாடுகள் தொடர்பானது அல்ல, ஹவாலா தொடர்பு உடையதாகவும், தேர்தலில் பயன்படுத்துவதற்கானதாகவும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதே நாளில் (22-ந் தேதி) கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ.4 கோடியே 77 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

அதே வளாகத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள வேட்டிகள், சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், கோவை தெற்கு தொகுதியில் 22-ந் தேதி காலை மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற ஒரு பஸ்சில், 2 பயணிகளிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

இதற்கு முன்பாக, அதாவது மார்ச் 4-ந் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து பல்வேறு செலவு கண்காணிப்பு குழுவினரால் ரூ.35 கோடியே 66 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தேர்தலையொட்டி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கணக்கில் காட்டாத பணத்தை எடுத்து செல்வதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். பணம், மதுபானங்கள், பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்வது தீவிரமாக கண்காணிக்கப்படும்.

வாக்காளர்களிடம் இருந்து ஓட்டுகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க யாரேனும் முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து பாதுகாப்பு முகமைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் செலவின கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் தவறு செய்தால், அதை மிக தீவிரமாக எடுத்து கொண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நேர்மையுடன் ஓட்டு போடுவதற்கான பிரசாரத்தை அதிகரிக்கவும், தேர்தல் நேர்மையுடன் நடைபெற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களையும், வேட்பாளர்களையும் ஊக்கப்படுத்தவும், வாக்காளர்கள் நேர்மையான முறையில் வாக்களிக்கவும் உறுதி எடுத்துக்கொள்ள தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது" என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Election Commission (EC) has directed for a stepped up vigil across Tamil Nadu in order to curb use of black money and other illegal inducements during the forthcoming Assembly polls in the state on May 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X