சூடு பிடிக்கும் குட்கா விவகாரம்.. பரபரப்பாகும் தமிழக அரசியல்.. விசாரணையில் குதித்தது அமலாக்கத்துறை

சென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் ரூ 60 கோடி மோசடி நடந்ததாக அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டன. இதையடுத்து சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு குடோனில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த குட்கா பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து குட்கா உரிமையாளர் மாதவராவ் வைத்திருந்த ஒரு டைரி சிக்கியது. அதன் அடிப்படையில் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோர் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இதுவரை 7 பேரை கைது செய்தது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் ரூ 60 கோடி மோசடி நடந்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்களை பெற்ற அமலாக்கத் துறை தனது விசாரணையை தொடங்கியது. இதனால் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.