For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும்: தொல். திருமாவளவன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை முறையாக விசாரிப்பதற்கும் உண்மைப் பின்னணியை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.சி.ஐ.டியின் விசாரணையைத் தவிர்க்க வேண்டும். மாறாக சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

Engineer suicide case: VCK demands CBI probe

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக வேளாண்மைத் துறை பொறியாளர் முத்துக்குமாரசாமி அண்மையில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கு வேளாண்மைத் துறை அமைச்சரின் நெருக்கடியே காரணம் என்று தெரியவந்தது.

அதனால் அவருடைய சாவுக்குக் காரணமான முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்ய வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவ்வழக்கில் கைது செய்துள்ளனர்.

இந்நடவடிக்கை பொதுமக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தினாலும், இது ஒரு கண்துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்னும் கருத்து மேலோங்கியுள்ளது. தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கிற ஆளும் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவரை தமிழகக் காவல்துறை கைது செய்திருப்பதால் இவ்வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா? வழக்கின் உண்மைப் பின்னணிகள் வெளிப்படுமா? என்ற ஐயங்கள் எழுகின்றன.

அத்துடன், பணி நியமனங்களில் அமைச்சரின் விருப்பப்படியே அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று வெளிப்படையாக மிரட்டும் அளவுக்கு ஆட்சி நிர்வாகத்தின்போக்கு அமைந்துள்ளது. வேளாண்மைத் துறையில் மட்டுமின்றி, தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட இயலாத நிலை உள்ளது என்பதற்கு முத்துக்குமாரசாமியின் தற்கொலை ஒரு சாட்சியமாக உள்ளது.

எனவே, முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை முறையாக விசாரிப்பதற்கும் உண்மைப் பின்னணியை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கும் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சிபிசிஐடியின் விசாரணையைத் தவிர்க்க வேண்டும். மாறாக, மையப் புலனாய்வு விசாரணைக்கு (சிபிஐ) ஒப்படைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநில குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது, ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஊடகங்கள் இணைந்து எழுப்பிய குரல்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த நடவடிக்கையை 20 நாட்களுக்கு முன்பே எடுத்து இருந்தால், காவல் துறையை நம்பி இருக்கலாம். இவ்வளவு நாட்களுக்கு பிறகு இது ஒரு தேசிய செய்தி ஆகிவிட்டதே என்பதற்காக எடுத்த நடவடிக்கையாகவே தெரிகிறது.

முத்துக்குமாரசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட வேண்டும். அதுவரை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து போராடும். நாங்கள் இதுகுறித்து ஆளுநரை சந்திக்க நேரம் கோரியுள்ளோம். அதனைத் தொடர்ந்து இது சி.பி.ஐ.க்கு மாற்றும் வரை தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்.

இவ்வாறு ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது

English summary
VCK and AAP parties are still demanding a CBI probe for the suicide of senior engineer S. Muthukumarasamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X