For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றுக: அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. புதிதாக எந்த ஒரு ஆக்கிரமிப்புகளும் நடைபெறக் கூடாது. குப்பைகள், திடக்கழிவுகள் இனி இந்த நீர்நிலைகளில் கொட்டக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலித்து பதில் மனுவை பிப்ரவரி 9ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் முதல் டிசம்பர் 2ம் தேதி வரை பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரினாலும், மழையினாலும் கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

Ensure Water Bodies Are Not Encroached': Madras HC

இதற்கு, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆறுகளில் தெளிவான தண்ணீர் ஓடுவதால் மீன்களும் துள்ளி விளையாடுகின்றன. இந்த மீன்களை சாப்பிட கொக்குகளும் ஆற்றங்கரையோரம் வருவதால் சென்னையே ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், மனுநீதி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் முனிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த பொதுநல மனுவில், ''அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சென்னை மாநகரமே வெள்ளக்காடானது. இதுபோன்ற கனமழை இதற்கு முன்பு 1918, 1943, 1978, 1985, 2002, 2005 ஆகிய ஆண்டுகளில் பெய்துள்ளது. ஆனால், தற்போது பெய்த கனமழையினால் சென்னை மாநகரமே கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் சொல்லோணா துயரத்தை அடைந்துள்ளனர்.

சென்னை மாநகருக்கு சோழவரம், செம்பரம்பாக்கம், போரூர் ஆகிய இடங்களில் உள்ள ஏரிகள் நீர் ஆதாரமாக உள்ளது. இந்த நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும்போது, அங்கிருந்து வரும் மழை வெள்ளம் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது. எனவே, இந்த 3 நீர்நிலைகளில் தங்கு தடையின்றி மழைவெள்ளம் சென்றால், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வராது.

இதற்காக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவைகளை பராமரிப்பது குறித்து 1943 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் நிபுணர்கள் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்தனர். இந்த ஆய்வு அறிக்கைகளின் பரிந்துரைகளை இதுவரை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

மேலும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுதவிர ஓட்டேரி நல்லா, பாடி, கொரட்டூர், வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதிகளில் சிறு ஆறுகள் முன்பு இருந்தன. இந்த சிறு ஆறுகள் வழியாகவும் மழைவெள்ளம் கடலுக்கு செல்லும். ஆனால், இந்த சிறு ஆறுகளில் பெரும்பான்மையான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் மழைவெள்ளம் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக இந்த உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து கண்டனமும் தெரிவித்துள்ளது. ஆனால், நீர்நிலைகளை பாதுகாக்க இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும். கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவைகளில் இருபுறமும் நிரந்தர தடுப்பு வேலிகளை அமைத்து, நீர்நிலைகளில் குப்பைகள், திடகழிவுகளை கொட்டுவதை தடுக்கவேண்டும்.

சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் இந்த நீர்நிலைகளில் மண் மற்றும் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதை அகற்றி, தூர்வார அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த நீர்நிலைகளை பாதுகாக்க நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். இதுதவிர எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கில் சென்னை மாநகரம் பாதிக்கப்படாத வண்ணம், கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் அகலம் மற்றும் நீளத்தை வேலி போட்டு பாதுகாக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''இந்த மனுவுக்கு தமிழக அரசு விரிவான பதில் மனுவை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும். அதில், இந்த நீர்நிலைகளை பாதுகாக்க நிபுணர்கள் குழு அமைப்பது குறித்து மனுதாரர் செய்துள்ள பரிந்துரைகளை ஆய்வு செய்து, அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்பதை அரசு குறிப்பிடவேண்டும்.

மேலும், இந்த 3 நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ள, இந்த வழக்கு தடையாக இருக்காது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். கூவம் உள்ளிட்ட 3 நீர்நிலைகளையும் தூர்வாரி, அதில் உள்ள வண்டல் மண்ணை அகற்றவேண்டும். அந்த மண்ணை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் அரசு பரிசீலித்து பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.

கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாயை தடுப்பு வேலி போட்டு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம். இந்த ஆறுகளை ஏற்கனவே ஆக்கிரமித்தவர்கள் மீண்டும் ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. புதிதாக எந்த ஒரு ஆக்கிரமிப்புகளும் நடைபெறக் கூடாது. குப்பைகள், திடக்கழிவுகள் இனி இந்த நீர்நிலைகளில் கொட்டக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வருகின்ற பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

English summary
Holding that barricading river boundaries to curtail encroachments and prevent dumping of garbage and solid wastes in lakes and river-beds needed urgent attention, Madras High Court has directed the TN government to ensure that there was no further encroachment or re-encroachment of water bodies and dumping.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X