For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நீதிபதி குமாரசாமி தீர்ப்பும் விடைதெரியாத 12 கேள்விகளும்" .... அடுக்கும் 'அதிரடி' இளங்கோவன்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குமாரசாமி மிகப்பெரிய தவறு இழைத்திருப்பதாக கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இது தொடர்பாக 12 கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

18 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் அளித்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு 29.9.2014 அன்று மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மே மாதம் 5 ஆம் தேதி நீதிபதி கே.ஆர். குமாரசாமி முன்னிலையில் தொடங்கிய விசாரணை, மார்ச் 11-ந் தேதி முடிந்தது. மொத்தம் 41 நாட்கள் தான் விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கில் விசித்திரமானது என்னவென்றுச் சொன்னால், அரசு வழக்கறிஞராக யார் இருக்க வேண்டும் என்பதை குற்றவாளி ஜெயலலிதா முடிவு செய்ய முயன்றதுதான். இதை தடுத்து நிறுத்த நீதிபதி குமாரசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உச்சநீதிமன்றம் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தலையிட்டு அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை பணிநீக்கம் செய்தது. இதற்குப் பிறகு பி.வி. ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக வாதங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அவருக்கு நீதிமன்றத்தில் நேரில் எடுத்துரைக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் தான் கே.ஆர். குமாரசாமியின் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

 ரூ2 கோடி எப்படி?

ரூ2 கோடி எப்படி?

நீதிபதி குன்ஹா வழங்கிய 1136 பக்க தீர்ப்பில் 1.4.1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.55 கோடி என்று கூறியிருந்தார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி தனது 919 பக்க தீர்ப்பில் ரூ.2 கோடியே 82 லட்சம் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளார். இதை எந்த அடிப்படையில் செய்தார் என்பது எவருக்கும் விளங்கவில்லை.

 சுதாகரனின் ஆடம்பர திருமணம்

சுதாகரனின் ஆடம்பர திருமணம்

அதேபோல நிறுவனங்கள், சொத்துகள், கட்டுமான மதிப்பு ஆகியவற்றை சேர்த்து ஏறத்தாழ ரூ.27 கோடி என்றும், இதில் சுதாகரனின் திருமண செலவு ரூ.6 கோடியே 45 லட்சம் என்றும் நீதிபதி குன்ஹா குறிப்பிட்டார். ஆனால் சுதாகரனின் திருமணச் செலவை ரூ.28 லட்சம் தான் என்று நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டுள்ளார். சுதாகரனின் திருமணம் எந்தளவுக்கு ஆடம்பரமாக நடைபெற்றது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஆனால் ஆவணங்களின் அடிப்படையில் இதை புரிந்து கொள்ள வேண்டிய குமாரசாமி ஏன் இத்தகைய மதிப்பீட்டை செய்தார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

 நமது எம்.ஜி.ஆர். சந்தா

நமது எம்.ஜி.ஆர். சந்தா

நமது எம்.ஜி.ஆர். நாளேட்டிற்கு சந்தா சேர்த்த வகையில் ரூ.13 கோடியே 83 லட்சம் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலியானது என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இது சட்டப்பூர்வமான வருமானம் தான் என்று நீதிபதி குமாரசாமி கூறியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

 தண்டனைக்கு வாய்ப்பு உண்டே

தண்டனைக்கு வாய்ப்பு உண்டே

நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் 852-வது பக்கத்தில் ஜெயலலிதா வங்கிகளில் வாங்கிய கடனாக ரூ.23 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். அதில் உள்ள பல்வேறு தலைப்புகளில் உள்ள தொகையை கூட்டினால் ரூ.10 கோடி தான் வருகிறது. இதில் மட்டும் ரூ.13 கோடி கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் கணக்கிட்டதனால் தான் அது 8.3 சதவீதமாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் தவறுதலாக சேர்த்ததை கழித்தால் நீதிபதி குமாரசாமியின் கணக்கின்படி 76.75 சதவீதமாக உயர்ந்து விடுகிறது. இந்த கணக்கை சரி செய்தாலே ஜெயலலிதா 20 சதவீதத்திற்கு அதிமாக சொத்து சேர்த்ததாக கருதப்பட்டு, தண்டனை பெற வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததில் 10 சதவீதம் வரை அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமை உடையவர்கள் என்கிற அணுகுமுறையை கேட்டு எல்லோரும் வியக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அணுகுமுறை வருவதற்கு நீதிபதி குமாரசாமி கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

 மதிப்பிடவில்லையே..

மதிப்பிடவில்லையே..

தமிழக ஊழல் தடுப்பு பிரிவினர் ஜெயலலிதா வீட்டில் 28 கிலோ தங்க நகைகள், 800 கிலோ வெள்ளி, 750 ஜோடி காலனிகள், 10,500 புடவைகள், 91 கைகடிகாரங்கள் என 1996 இல் பறிமுதல் செய்யப்பட்டது. இத்தகைய பறிமுதலான பொருட்களின் சொத்து மதிப்பை மதிப்பிடுவதில் நீதிபதி குமாரசாமி முற்றிலும் தவறிவிட்டார்.

 மேல்முறையீடு அவசியம்

மேல்முறையீடு அவசியம்

ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள நீதிபதி கே.ஆர். குமாரசாமி, அதில் பெரும்பாலான வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறுகிற குமாரசாமி ஜெயலலிதா வழக்கில் அடிப்படை ஆதாரங்களுடன் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்புக்கு முற்றிலும் மாறாக தீர்ப்பு வழங்கியிருப்பதற்காக அவர் கூறுகிற காரணங்கள் மேல்முறையீட்டில் நிச்சயம் தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் அவரால் கூறப்படுகிற காரணங்கள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை.

 ஆச்சார்யா பக்கம் நியாயம்

ஆச்சார்யா பக்கம் நியாயம்

அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில் எனக்கு ஒருநாள் காலஅவகாசம் வழங்கி, எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இது எவ்வகையிலும் நியாயமாக கருத முடியாது. எனக்கு வாதம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறியிருப்பதில் உள்ள நியாயத்தை புறக்கணிக்க முடியாது.

 ஏன் 6 மாதம் விசாரிக்க கூடாது?

ஏன் 6 மாதம் விசாரிக்க கூடாது?

உச்சநீதிமன்ற நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த மேல்முறையீட்டை விசாரிக்க 3 மாதங்கள் காலஅவகாசம் அளித்தார். இதற்கு முன்பு எத்தனை வழக்குகளில் இத்தகைய காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதைவிட, இயற்கையான நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம்தான் சிறந்ததாக இருக்க முடியும்.

 அதெப்படி நியாயம்?

அதெப்படி நியாயம்?

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் 10 நாட்கள் வரை வாதிட்டுள்ளனர். அதை அப்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் பி.வி. ஆச்சார்யாவை அரசு வழக்கறிஞராக நியமித்த போது எழுத்துபூர்வமாக மட்டுமே வாதிட வேண்டும் என்று கூறி, அதையும் ஒருநாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது எந்த வகையிலும் நியாயமில்லை. இது ஒருதலைப்பட்சமானது.

பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கை 3 மாதங்களில் ஏனோதானோ என்று அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போல வழக்கு முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அவசரத்தின் காரணமாக நீதி மறுக்கப்பட்டதோ என்கிற ஐயம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இந்த வழக்கை கூடுதலாக 6 மாதங்கள் நடத்தியிருந்தால் அதனால் என்ன நடந்துவிடப் போகிறது ? ஏன் இந்த அவசரம் ? இந்த அவசரத்திற்கு என்ன காரணம் ?

 மலைக்கும் மடுவுக்கும்..

மலைக்கும் மடுவுக்கும்..

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை ஊழல் தடுப்பு பிரிவினர் மதிப்பிட்டது ஏறத்தாழ ரூ.66 கோடி. ஆனால் உயர்நீதிமன்றம் மதிப்பிட்டது. ரூ.37 கோடி. இதில் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது.

விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இதுகுறித்து கர்நாடக அரசு இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலமாக மட்டுமே ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா என்பது நாட்டு மக்கள் அறிந்து கொள்கிற வாய்ப்பு ஏற்படும். அப்போதுதான் ஊழல் தடுப்பு சட்டத்தின் செயல்பாட்டின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

 மேல்முறையீடு அவசியம்

மேல்முறையீடு அவசியம்

எனவே, கர்நாடக அரசு இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
TNCC president EVKS Elangovan said that while Justice Michael D'Cunha’s 1136-page verdict in September had valued Ms. Jayalalithaa’s assets as on April 1, 1996 at Rs. 55 crore, Mr. Justice Kumaraswamy has “underestimated” the value at Rs. 2.82 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X