For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை: சி.பி.ஐ. விசாரணைக்கோரி வழக்கு தொடரப்படும் - ஈ.வி.கே.எஸ்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை விடுவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

EVKS Ilangovan statement about muthukumarasamy suicide case

தமிழக வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் எஸ். முத்துக்குமாரசாமி கடந்த 20.2.2015 அன்று தச்சநல்லூரில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேர்மைக்கும், கடமைக்கும் பெயர் பெற்றவரான முத்துக்குமாரசாமியின் தற்கொலை முடிவில் அன்றைய தமிழக வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக வெளியிட்டேன். அதுவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தியை பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட ஜெயலலிதா அரசு இனியும் பாதுகாக்க முடியாது என்கிற நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு விடப்பட்டது.

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் என்று அன்றே சந்தேகக் குரல் எழுப்பினேன். அது இன்று உண்மையாகிவிட்டது. இதனால்தான் அன்றே மத்திய புலனாய்வுத்துறை இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினேன்.

நீதிமன்ற ஆணையின் மூலமாக முதல் குற்றவாளி அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை என்பது கண்துடைப்பு நாடகம் என்பதை இந்த நாடே அறியும். ஜெயலலிதாவின் எடுபிடிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற கொலைக் குற்றவாளிகள் தப்பிப்பது நீதிமன்றத்திற்கே விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றங்களை மதுரை உயர்நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்காதததால் அவரை நீதிமன்றம் விடுவிக்க வேண்டிய அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம் நீதிமன்றத்தின் மாண்பு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் குற்றவாளியை விடுவிக்க வேண்டிய நெருக்கடியை ஜெயலலிதா அரசு சி.பி.சி.ஐ.டி. மூலமாக நீதிமன்றத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் சட்டத்தின் ஆட்சி குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

தமிழகத்தையே உலுக்கிய முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலமாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தால்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவின் அடிப்படையில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ஊழலுக்கு துணைபோக மறுத்த உண்மையான அரசு அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுகிறவரை தமிழக காங்கிரஸ் இறுதிவரை போராடும் என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

English summary
TNcC leader EVKS Ilangovan has issued a statement about muthukumarasamy suicide case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X