For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

119 பணியிடங்களை நிரப்ப ரூ 20.80 கோடி லஞ்சம் வாங்க உத்தரவிட்ட "அக்ரி"... அதிகாரி திடுக் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நெல்லை: வோளாண்மைத்துறையில் காலியாக இருந்த 119 பணியிடங்களை நிரப்ப தலா ஒன்றேமுக்கால் லட்சம் வீதம் 20.80 கோடி லஞ்சப்பணம் பெற்றுத் தரும்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார் என்று வேளாண்மைத்துறை தலைமை பொறியாளர் செந்தில் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நானாக லஞ்சம் கேட்கவில்லை அமைச்சர் சொன்ன தகவலைத்தான் சொன்னேன், முத்துக்குமாரசாமியை நான் மிரட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த வேளாண்மை துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கு 7 டிரைவர்களை நியமிப்பது தொடர்பாக மேலிடம் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து வேளாண்மைத்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Ex-Minister demanded bribe, admits official

இந்த நிலையில் தலைமை பொறியாளர் செந்தில், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது வாக்குமூலத்தில், 119 தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறையில் தலைமை பொறியாளராக நான் பணியாற்றி வருகிறேன். எனது பணியில் எந்த வித குற்றச்சாட்டும் இல்லாமல் பணியாற்றி வந்து உள்ளேன்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் வேளாண் பொறியியல் துறையில் 119 டிரைவர் காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பதிவு மூப்பு அடிப்படையில் பதிவு மூப்பு பட்டியலை தயார் செய்தேன்.

ஆனால் அப்போது வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி 119 காலி பணியிடங்களுக்கும் ஒரு இடத்திற்கு ஒன்றேமுக்கால் லட்சம் தனக்கு வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். அமைச்சர் சொன்னதை எங்களால் மீற முடியவில்லை.

எனவே இது பற்றி நான் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து உதவி செயற்பொறியாளர்களிடமும் தொடர்பு கொண்டு ஒவ்வொரு காலி பணியிடத்திற்கும் ஒன்றேமுக்கால் லட்சம் தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டேன். நெல்லையில் பிரச்னை ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட வேளாண் பொறியியல் துறையில் காலியாக இருந்த 7 டிரைவர் பணியிடங்களுக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 7 பேர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர் என்றும், அந்த தேர்வுக்கு மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்றும் பொறியாளர் முத்துக்குமாரசாமி கூறினார்.

உடனே நான் முத்துக்குமாரசாமியிடம், அமைச்சர் பணம் கேட்கிறார், நீங்கள் செய்து உள்ளதை கேள்விப்பட்டால் அவரது கோபத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டி இருக்கும். பேசாமல் பணத்தை வசூல் செய்து கொடுத்துவிடுங்கள் என்று எச்சரித்தேன். சென்னையில் வேளாண்மைத்துறை பொறியாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு வரும்போது அமைச்சர் கேட்ட பணத்தை கொண்டு வாருங்கள் என்று கூறினேன். ஆனால் முத்துக்குமாரசாமி பணம் கொண்டு வரவில்லை.

அப்போது நான், அமைச்சர் கேட்ட பணத்தை ஏன் கொண்டு வரவில்லை? என்று முத்துக்குமாரசாமியிடம் கேட்டேன். அதற்கு அவர், ஆட்சியர் ஒப்புதல் கொடுத்து பணி நியமனமும் முடிந்து விட்டது என்றார். இதுபற்றி நாங்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கவனத்திற்கு கொண்டு சென்றோம். அதற்கு அவர், பரவாயில்லை. பணி நியமனம் உத்தரவு பெற்றுள்ள 7 பேரிடமும் தலா ஒன்றேமுக்கால் லட்சம் வசூல் செய்து தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த தகவலை நாங்கள் முத்துக்குமாரசாமியிடம் கூறினோம். ஆனால் அதன் பிறகும் அவர் பணம் வசூல் செய்து தரவில்லை. இதற்கிடையே அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டதால் நானே முத்துக்குமாரசாமியிடம் 3 தடவை செல்போனில் பேசினேன். எந்த வகையிலாவது பணத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறினேன். இந்த நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக நெல்லை மாவட்ட வேளாண் பொறியியல் துறை கூடுதல் உதவி பொறியாளர் வெள்ளையா எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதை கேட்ட நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

முத்துக்குமாரசாமியின் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதிகாரிகளை அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்.முத்துக்குமாரசாமியின் வாரிசுகளில் யாருக்காவது ஒருவருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கலாம் என்று மனு எழுதி வாங்கி வருமாறு கூறினேன். ஆனால் முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர், நாங்கள் வறுமையில் வாடவில்லை. எனவே வேலை வேண்டாம் என்று கூறி மனு எழுதித்தர மறுத்துவிட்டனர். முத்துக்குமாரசாமியை நான் ஒருபோதும் மிரட்டவில்லை. அமைச்சர் சொன்னதைதான் செய்தேன்" என்றும் செந்தில் கூறியுள்ளார்.

இதனிடையே முத்துக்குமாரசாமி வழக்கு விசாரணையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோருக்கு இணையாக உள்ளூர் அ.தி.மு.க-வினர் சிலருக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. நெல்லை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் உள்ள பெண் அலுவலர் ஒருவர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நன்கு அறிமுகம் ஆனவராம். அவர் மூலமாக அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு முத்துக்குமாரசாமியின் நடவடிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 7 டிரைவர்கள் நியமனத்தை ஒரு மாதமாக ஆர்டர் போட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட அந்த பெண் அலுவலரும் காரணம் என்கின்றனர். உள்ளூர் அ.தி.மு.க-வினர் சிலருடனும் அந்த அலுவலருக்கும் தொடர்பு இருந்ததாம். கட்சிக்காரர்கள் சிலர், அலுவலகத்துக்கே நேரில் சென்று மிரட்டிய சம்பவங்களும் நடந்திருக்கின்றனவாம். இதை எல்லாம் சி.பி.சி.ஐ.டி விசாரித்தால், மேலும் பல அதிர்ச்சித் தகவல் வெளிவரும் என்கின்றனர் எதிர்கட்சியினர்.

அமைச்சர் சொன்னதை செய்தேன்; ஆனால், பதற்றத்தில் முத்துக்குமாரசாமி உயிரை மாய்த்துக் கொண்டு விட்டார் என்று செந்தில் தனது வாக்குமூலம் அளித்திருந்தாலும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இதை முழுமையாக மறுத்துள்ளார்.

English summary
Former State Minister ‘Agri’ S.S. Krishnamoorthy, jailed on charges of corruption and abetting an engineer’s suicide, had demanded a bribe of Rs. 1.75 lakh for each of the posts of driver recruited in the department, Chief Engineer M. Senthil told Crime Branch-CID interrogators. He was arrested along with the ex-Minister on Saturday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X