For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயன்கள் தெரியும் முன்பே, பாதிப்புகள் கழுத்தை சுற்றுகிறது.. மத்திய அரசு மீது ராமதாஸ் சீற்றம்

வீழ்ச்சியுற்ற வணிகம் மேம்பட பணப் புழக்கத்தை சீரடைய செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: உலக அளவில் கருப்புப் பொருளாதாரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும், வீழ்ச்சியுற்ற வணிகம் மேம்பட பணப் புழக்கத்தை விரைவில் சீரடைய செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்குடன் மத்திய அரசு அறிவித்த நடவடிக்கைகளின் பயன்கள் கண்ணுக்கு தென்படுவதற்கு முன்பே, பாதிப்புகள் கழுத்தைச் சுற்றத் தொடங்கி விட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

Fall to revive business money circulation normalized: pmk ramadoss

குறிப்பாக, புழக்கத்தில் இருந்த பணம் முழுவதும் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில், அதற்கு மாற்றாக புதிய பணம் வழங்கப்படாததால் பணப்புழக்கம் பெருமளவில் குறைந்து வணிகம் முற்றிலும் முடங்கியுள்ளது.

அந்த வகையில் கருப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்குடன் ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததும் துணிச்சலான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.

ஆனால், 'எண்ணித் துணிக கருமம்' என்பதற்கிணங்க கருப்புப் பண ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தும் முன், அதற்கான முன்னேற்பாடுகளை செய்து முடிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச யோசனை கூட மத்திய அரசுக்கு வராமல் போனது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருப்புப் பண ஒழிப்பு என்பது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை வெளியில் கொண்டு வந்து வரி வசூலிப்பது அல்லது கருப்புபணத்தை பயன்படுத்த முடியாமல் தடுத்து, அதை செல்லாமல் போகச் செய்வது தான். இந்த நடவடிக்கையை ஒருபுறம் செய்து கொண்டு மறுபுறம் இயல்பான பணப்புழக்கத்தை உறுதி செய்வதால், கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

ஆனால், மத்திய அரசு இதை செய்யத் தவறியதால் தான் அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

பெட்டிக் கடையில் தொடங்கி பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலையிலும் வணிகம் முடங்கிக்கிடக்கிறது. மூலப் பொருட்கள் வாங்கவும், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் நிதி இல்லாததால் அனைத்து வகையான அமைப்பு சாரா தொழில்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்க முடியாததால் விவசாய பயிர்கள் பட்டுப்போயிருக்கிறது. இவை ஒருபுறமிருக்க மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள பணமில்லாமல் பெரிதும் தவிக்கின்றனர்.

இவற்றையெல்லாம் யாராவது சுட்டிக்காட்டினால், அவர்களை தேசப்பற்று இல்லாதவர்கள் என்று முத்திரைக் குத்தும் பரப்புரையும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு தெளிவாக திட்டமிட்டிருந்தால், இவற்றில் எந்த பாதிப்பும் இல்லாமல் கருப்புப் பண ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும். இந்தியாவில் ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ. 17.54 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விட்டுள்ளது.

அவற்றில் 86 விழுக்காடு, அதாவது ரூ.14 லட்சத்து 73,360 கோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாகும். இவை தவிர மீதமுள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 80,640 கோடி மட்டுமே. 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், சுமார் ரூ.15 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது.

இவற்றில் மூன்றில் ஒரு பங்கு கருப்புப்பணமாக இருக்கும் என்று வைத்துக் கொண்டாலும், டிசம்பர் மாத இறுதிக்குள் ரூ.10 லட்சம் கோடி பணம் வங்கிகளில் டெப்பாசிட் செய்யப்படலாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தவிர மீதமுள்ள அனைவரும் பணத்தை அன்றாடப் பயன்பாடுகளுக்காகத் தான் வைத்திருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது, அவர்கள் வங்கிகளில் செலுத்தும் பணத்திற்கு இணையான திருப்பித் தருவதற்குரிய ஏற்பாடுகளை மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் செய்திருக்க வேண்டும்.

அதைக்கூட செய்யாமல் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை அவசர அவசரமாகத் தொடங்கியது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். இப்போது கூட கடந்த 10-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை வரை மொத்தம் 5 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்கள் இந்திய வங்கிகளில் செலுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அவ்வாறு செலுத்தியவர்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இது சிறிதும் போதுமானது அல்ல.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான திட்டமிடல்கள் 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 1000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கு தேவையான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு இந்த 6 மாத கால அவகாசம் போதுமானதாகும்.

ஆனால், இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி போதிய அளவில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை. ரூ.2000, ரூ.500 ஆகிய இரு மதிப்புகளையும் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. இது நாட்டின் தேவையில் பாதி மட்டுமே. எனினும், இந்த நோட்டுகள் முழுமையாக புழக்கத்தில் விடப்பட்டிருந்தால் கூட நிலைமையை சமாளித்திருக்க முடியும்.

ஆனால், அதையும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் செய்யவில்லை. உதாரணமாக, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடங்கி 10 நாட்களாகி விட்ட நிலையில் புதிய ரூ.500 நோட்டுகள் இன்னும் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. இவ்வாறாக மத்திய அரசின் அரைகுறை செயல்பாடுகள் தான் வணிகத்தையும், மக்களையும் முடக்கியுள்ளன. இதேநிலை நீடித்தால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.

எனவே, புதிதாக அச்சிடப்பட்டதாக கூறப்படும் ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக புழக்கத்தில் விட வேண்டும். அதன் மூலம் மக்களின் துயரங்களை முடிவுக்கு கொண்டு வரவும், வணிகத்திற்கு உயிரூட்டவும் அரசு வகை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Fall to revive business the money circulation should be normalized soon pmk founder ramadoss demanded in a statement issued today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X