கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்..? திருவாரூர் அருகே இரு தரப்பு மோதல்.. டி.என்.ஏ சோதனை நடத்த முடிவு
திருவாரூர் : திருவாரூர் அருகே கன்றுக்குட்டிக்கு உரிமை கொண்டாடி இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது மாடுகள் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் மேய்ந்து வரும். பிறகு மாடுகளை மாலையில் வீட்டில் சேர்ப்பார்.

கடந்த 27ம் தேதி மதியழகன் வீட்டிற்கு சென்ற ஜாம்புவான்னோடை தெற்கு தெருவை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் மதியழகன் வீட்டில் இருந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கற்றுக்குட்டி ஒன்றை பார்த்து இது தன்னுடைய கன்றுக்குட்டி என்று உரிமை கொண்டாடினர்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். இதனை விசாரித்த போலீசார் கன்றுக்குட்டியையும் இருவரது தாய் பசுவையும் கொண்டு வருமாறும் கூறினர். எந்த பசு பின் கன்றுக்குட்டி செல்கிறதோ அவருக்குத்தான் அந்த கன்றுக்குட்டி என்றும் கூறினர்.
அப்போது மதியழகன் பசுவுடன் கன்றுக்குட்டி சென்றது. இதனையடுத்து கன்றுக்குட்டி மதியழகனிடம் ஒப்படைக்கபட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராஜரத்தினம் தரப்பினர் மதியழகன் வீட்டிற்கு சென்று கன்றுக்குட்டியை தூக்கி சென்றுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மதியழகன் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கன்றுக்குட்டியையும் பசுவையும் பறிமுதல் செய்து இருதரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.
மேலும் கன்றுக்குட்டிக்கு கால்நடை மருத்துவக்குழுவினரால் டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். கன்றுக்குட்டி யாருடையது என்று உரிமையாளர்கள் போட்டிப்போடும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.