For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமி பலாத்கார வழக்கு: அழிக்கப்பட்டதா ஆதாரங்கள்... அதிர்ச்சி தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை குறித்த இறுதி அறிக்கையை 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த வக்கீல் டி.வின்சென்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, போலீஸ் உயர் அதிகாரிகள் பலரால், தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து சிவகங்கை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்சாட்டில் போலீஸ் துறையின் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த மாதம் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆஜராகி, ‘சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி, வழக்கின் விசாரணை குறித்த விவர அறிக்கையை நீதிபதிகள் மட்டும் படித்து பார்க்கும் விதமாக தாக்கல் செய்வார்' என்றார்.

இதையடுத்து, வழக்கு நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆஜராகி, வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணை அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளோம். இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று என்றார்.இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு கொடுக்கப்பட்டதா என அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு நஷ்டஈடு அரசு சார்பில் கொடுக்கப்பட்டதாக அரசு வக்கீல் தெரிவித்தார்.

File Final Report in Sivaganga Rape Case, Ordered High Court

ரூ. 3 லட்சம் நிவாரணம்

இந்நிலையில், இந்த வழக்கில் பொதுநல வழக்கு தொடர்ந்த வக்கீல் வின்சென்ட் ஒரு கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார். அதில் சிறுமி மிக கொடுமையாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான விஷயம் குறித்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் டிஜிபி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக அரசு சார்பில், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் தரப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் யார்? யார்?

தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று சிவகங்கை எஸ்பி எம்.துரை, டிஐஜி ஆனந்த குமார் சோமானி, ஐஜி அபய் குமார் சிங் உள்ளிட்டோர் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சேகர் என்பவரின் மனைவி செல்வி என்பவரை ஒரு புகார் கொடுக்க வைத்துள்ளனர். அவர் போலீஸ் அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாக இருந்தவர். செல்வி கொடுத்த புகார் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையையும், அண்ணனையும் வழக்கில் சேர்த்து, அவர்கள் மட்டும்தான் குற்றவாளிகள் என்று வழக்கை முடித்துவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தாமதமாகும் விசாரணை

இதன் மூலம் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பலரைத் தப்பிக்க வைக்க உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள், சம்மந்தப்பட்ட மகளிர் போலீஸ் நிலைய அதிகாரிகளிடம் விசாரணையை தாமதப்படுத்த வேண்டும். மேலும் இந்த வழக்கில் ஒருவரையும் கைது செய்யக்கூடாது. காரணம் இந்தப் புகாரில் உண்மை இல்லை என்று வழக்கை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

சப் - இன்ஸ்பெக்டர் மிரட்டல்

உயர் அதிகாரிகளின் இந்த வற்புறுத்தல்களால் விசாரணை நடத்தி வந்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார் மீது ‘சிறுமி மீதான பாலியல் கொடுமை தடுப்பு சட்ட'த்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், போலீஸ் அதிகாரிகள் அந்த சிறுமி கொடுத்த புகாரையை மறைக்கப் பார்க்கிறார்கள். காரைக்குடி மாஜிஸ்திரேட் முன்பு பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பல அதிகாரிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள். அந்த சிறுமியை முதலில் பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், விசாரணை நடத்தும் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டி வந்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள்

உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவருக்கு இருக்கும் நெருக்கமே இந்த மிரட்டலுக்கு காரணம். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகுதான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட எந்த ஐபிஎஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த செயலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர், தென் மண்டல ஐஜியின் அலுவலகத்தில் சட்டத்திற்கு முரணாக எந்த உத்தரவும் இல்லாமல் பணியில் அமர்த்தப்பட்டு அங்கு பணியில் இருப்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உயர் அதிகாரிகள் அடையாளம்

இந்த இன்ஸ்பெக்டர்தான் உயர் அதிகாரிகளுக்கு அந்த சிறுமியை அறிமுகம் செய்தவர் என்று தெரியவந்துள்ளது. கடந்த அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி தங்கியிருந்த அரசு இல்லத்திற்கு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராதிகாவும், சிவகங்கை உதவி எஸ்பி வந்திதா பாண்டேயும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சிறுமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த அதிகாரிகளின் புகைப்படங்களை அடையாளம் காட்டினார். இன்ஸ்பெக்டர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி கூறியுள்ளார். மேலும், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் (ஏடிஜிபி, ஐஜி, எஸ்பி) தன்னை பலாத்காரம் செய்துள்ளதாக அந்த சிறுமி உயர் போலீஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைக் காட்டி கூறியதாக தெரிய வந்துள்ளது.

வாக்குமூலத்தை அழிக்க உத்தரவு

இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட மாவட்ட எஸ்பி துரை, விசாரணை அதிகாரி ராதிகாவைத் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி (161 (3) என்ற பிரிவின் கீழ் கொடுத்த வாக்குமூலத்தை கிழித்துவிடுமாறு தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு விசாரணை அதிகாரி மறுத்துள்ளார். இந்நிலையில் புகார் கொடுக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் இன்னும் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதற்கு உயர் அதிகாரிகளின் தலையீடே காரணம். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிசிஐடி ஐஜி மகேஷ் குமார் அகர்வால் விசாரணை அதிகாரியான இன்ஸ்பக்டர் ராதிகாவை அழைத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை அழித்துவிடுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இன்ஸ்பபெக்டர் இடமாற்றம்

அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் மறுக்கவே, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தையும், புகைப்பட ஆதாரங்களையும் வலுக்கட்டாயமாக வழக்கு பைலில் இருந்து அகற்றிவிட்டு அதற்கு பதிலாக போலீசாரை தப்பிக்க வைக்கும் வகையிலான ஆவணங்களை அந்த பைலில் வைத்துள்ளார். இத்தனை வேலைகளையும் மகேஷ் குமார் அகர்வால் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விஷயம் பெரிய அளவில் வெடித்ததால் உடனடியாக இன்ஸ்பெக்டர் தென் மண்டல ஐஜி அலுவலகத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் பதியவில்லை

வழக்கு தொடர்பான அனைத்து தகவல்கள், சாட்சிகள், ஆதாரங்களுடன் இருக்க வேண்டும். ஆனால், சிபிசிஐடி ஐஜி மகேஷ் குமார் அகர்வால், தென் மண்டல ஐஜி அபய் குமார் சிங், மதுரை டிஐஜி ஆனந்த் குமார் சோமானி ஆகியோரின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் அழிக்கப்பட்டுள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்க உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அவரிடம் எந்த வாக்குமூலத்தையும் போலீசார் வாங்கவில்லை.

சிறுமியின் எதிர்காலம்

சப். இன்ஸ்பெக்டரை சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, கைது செய்யப்பட்டவரின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை என்று நீதிபதி கேட்டபிறகுதான் சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் காவலில் எடுத்து வாக்குமூலம் பெற்றனர். சிறையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரும் மிரட்டப்பட்டு வருகிறார். பாலியல் குற்றச்சாட்டில் உயர் அதிகாரிகள் உள்ளனர் என்று எந்த சூழ்நிலையிலும் வாயைத் திறக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளார். மேலும், சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட பிறகே வழக்கு விசாரணை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 403 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த அந்த சிறுமியை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது மிகப்பெரிய குற்றமாகும்.

நடவடிக்கை என்ன?

பாலியல் பலாத்காரம் நடைபெற்ற பல ஹோட்டல்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன. எஸ்பி ஒருவர் பாலியல் பலாத்காரம் நடந்த ஹோட்டலுக்கு கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து சென்றுள்ளது அந்த ஓட்டலின் பதிவுகளில் உள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமி பல தடங்கலுக்கு இடையே காரைக்குடி மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலம் மட்டுமே உள்ளது. இருந்தபோதும், விசாரணை முறையாக நடந்தால்தான் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

விசாரணை தேவை

சிவகங்கை போலீசாரும், சிபிசிஐடி போலீசாரும் வழக்கை முடக்கவே முயற்சி செய்கிறார்கள். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாங்கிய வாக்குமூலத்தை அழித்த ஐபிஎஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மதுரையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு தொடர்ந்து வந்து தங்கிய ஐபிஎஸ் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சூடு பிடிக்கும் வழக்கு

சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சிறுமி பலாத்கார வழக்கை விசாரித்த பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் வழக்கு விசாரணையில் தொய்வை ஏற்படுத்துமா? தீவிரப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
The Madras High Court, on Tuesday, directed the State government to file the final report in the alleged gang-rape of a minor girl from Sivagangai, in which several senior police officers are believed to be involved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X