For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேல் முறையீடு இல்லை.. முடிவுக்கு வந்த சங்கர ராமன் கொலை வழக்கு… யார்தான் கொலையாளி?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு தேவையில்லை என்று மத்திய அட்டர்னி ஜெனரலின் கருத்தை ஏற்று இம்முடிவை கைவிட புதுவை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்றது. பத்தாண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த நவம்பரில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரிகள் ஜெயந்திரர், விஜயேந்திரர் உள்பட 21 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. இருப்பினும் இந்த வழக்கு புதுவை மாநிலத்தில் நடைபெற்றதால் சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசுதான் மேல்முறையீடு செய்ய முடியும்.

மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

இதையடுத்து புதுவை அரசை மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வலியுறுத்தியது. இதன் காரணமாக சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தீர்ப்பு முடிவை எதிர்த்து புதுவை அரசு மேல்முறையீடு செய்ய முடிவெடுத்தது.

ஆளுநர் ஒப்புதல்

ஆளுநர் ஒப்புதல்

இதுதொடர்பாக கோப்பு தயாரிக்கப்பட்டு முதல்வர் ஒப்புதலுடன் ஆளுநர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னாள் ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவும் மேல்முறையீடு செய்ய உடனடியாக அனுமதி வழங்கினார்.

ஆளுநர் பதவி நீக்கம்

ஆளுநர் பதவி நீக்கம்

அவர் அனுமதி வழங்கிய ஓரிரு நாளில் வீரேந்திர கட்டாரியாவை மத்திய அரசு அதிரடியாக பதவி நீக்கம் செய்தது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சக அழைப்பை ஏற்று சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் ஆகஸ்ட் முதல்வாரத்தில் தலைமை செயலர் சேட்டன் பி சாங்கி டெல்லி சென்றார்.

அட்டர்னி ஜெனரல்

அட்டர்னி ஜெனரல்

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய காலக்கெடு முடியும் தருவாயில் தலைமை செயலர் அதற்கான கோப்புகளுடன் டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் தன்மை, உயர்நீதிமன்ற தீர்ப்பு விவகாரங்களை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகட்கி ஆராய்ந்து தனது கருத்தை தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளார்.

போதிய ஆதரமில்லை

போதிய ஆதரமில்லை

அதில், 21 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை. மேலும் அவர்களை விடுதலை செய்ய 30 முக்கிய காரணங்களையும் நீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக் காட்டிய அட்டர்னி ஜெனரல் அதையும் மீறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று கூறி மேல்முறையீடு தேவையற்றது என பரிந்துரைத்துள்ளார்.

கைவிட்ட புதுவை அரசு

கைவிட்ட புதுவை அரசு

இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை அரசுக்கு தெரிவித்துள்ளது. இதனால் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு முடிவை புதுவை அரசு கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே தமிழக அரசுக்கு சாதகமாக மேல்முறையீடு முடிவை எடுத்தால் மத்திய பாஜக அரசுடன் மோதல் ஏற்பட்டு மாநில வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் ரங்கசாமி இம்முடிவை எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.இதனால் தமிழக அரசு இவ்வழக்கில் தன்னிச்சையாக மேல்முறையீடு முடிவை எடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் சங்கரராமன்

காஞ்சிபுரம் சங்கரராமன்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி கோயில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் சகோதரர் ரகு, அப்பு ஆகியோர் உட்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜெயேந்திரர் மனு

ஜெயேந்திரர் மனு

முதலில், செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தமிழகத்தில் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்றும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுச்சேரி நீதிமன்றத்தில்

புதுச்சேரி நீதிமன்றத்தில்

அதன்பேரில் கடந்த 2005-ம் ஆண்டு புதுவை நீதிமன்றத்துக்கு சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக தேவதாஸ் நியமிக்கப்பட்டார். 189 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்ட கதிரவன் இறந்தார்.

பரபரப்பு தீர்ப்பு

பரபரப்பு தீர்ப்பு

இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். அப்போது, சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

நிம்மதி பெருமூச்சு

நிம்மதி பெருமூச்சு

இவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவினை புதுச்சேரி அரசு கைவிட்டுள்ளதால் பத்தாண்டுகாலமாக நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கு, குற்றவாளி யார் என்றே தெரியாமல் முடிவுக்கு வருகிறது. இதன்மூலம் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் நிம்மதி அடைந்துள்ளனர்.

யார்தான் கொலையாளி?

யார்தான் கொலையாளி?

அப்படியெனில் சங்கரராமனைக் கொன்றவர் அல்லது கொன்றவர்கள் யார்? அவர் தன்னைத் தானே வெட்டிக் கொண்டு செத்துவிட்டாரா? தமிழக காவல் துறையின் புலனாய்வு, அதில் கிடைத்த ஆதாரங்கள் அத்தனையும் தவறானதா? இனி என்ன முடிவு எடுக்கப் போகிறது தமிழக அரசு? இந்தக் கேள்விகளுக்கு குறைந்தபட்சம் விடையாவது கிடைக்குமா?

English summary
It is almost the end of the road for the decade-old Sankararaman murder case, in which the two sankaracharyas of Kanchi mutt - Sri Jayendra Saraswathi and Sri Vijayendra Saraswathi — had been cited as accused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X