கல்குவாரி விபத்து.. 300 அடி ஆழத்தில் 15 மணி நேரமாக கண்முன்னே ஊசலாடும் உயிர்! ஊர் கூடி கலங்கும் சோகம்
நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து மீட்பு பணியில் 15 மணி நேரமாக கண்முன்னே ஊசலாடிக் கொண்டிருக்கும் இளைஞரின் உயிரை ஊரே கூடி நின்றும் மீட்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் என்ற கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது.
இங்கு சுமார் 300 அடி ஆழம் கொண்ட குவாரியில் நேற்று இரவு வழக்கம் போல் கற்களை அள்ளும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வெடிகளால் தகர்க்கப்பட்ட கற்களை ஜேசிபி எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றும் பணிகள் நடைபெற்றன.
நெல்லை கல்குவாரி விபத்து...காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்

லாரி டிரைவர்கள்
அதன்படி லாரி டிரைவர்கள் ராஜேந்திரன், செல்வகுமார் ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய 6 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென 300 அடி உயரத்திலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததால் அனைவரும் கற்களின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

தீயணைப்பு படை
உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். கடும் போராட்டத்திற்கு பிறகு ஆறு பேரில் விஜய் மற்றும் முருகன் ஆகிய இருவர் மட்டும் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும் சுற்றி உள்ள பாறைகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் கூடுதலாக வீரர்களை களமிறக்கி மீதமுள்ள நான்கு பேரை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மீட்பு கருவிகள்
போதிய மீட்பு கருவிகளும் இல்லாததால் தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இருவரும் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர் இந்த நிலையில் நான்கு பேரில் செல்வக்குமார் தவிர மீதமுள்ள 3 பேரும் நேற்று இரவே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

கற்களுக்கு இடையே சிக்கிய செல்வக்குமார்
செல்வக்குமார் (30) கற்களுக்கு இடையே ஹிட்டாச்சி இயந்திரத்திற்குள் மாட்டிக்கொண்டு கடந்த 15 மணி நேரமாக தனது உயிரை காப்பாற்ற போராடி வருகிறார். அவர் கையை மேலே உயர்த்தி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிடும் சத்தம் அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்துள்ளது.

இயந்திரம்
அவரை மீட்க வேண்டும் என்றால் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரத்தை கொண்டு அறுத்து எடுத்த பிறகே மீட்க முடியும். ஆனால் அவர் மாட்டிக் கொண்ட இடத்தின் அருகே செல்வதற்கான வழி, பாறைகள் சூழ்ந்து தடைபட்டுள்ளது. சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கயிறு கட்டி ஆட்களை இறக்கி தான் மீட்க வேண்டும். ஆனால் தொடர்ந்து பாறைகள் சரிவு ஏற்படுவதால் ஆட்களை கீழே இறக்கி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செல்வக்குமார் மீட்கப்படுவாரா
எனவே அரசு இயந்திரம் மற்றும் ஊரே கூடி நின்றாலும் கூட உரிய மீட்பு கருவிகள் இல்லாததாலும் தொடர் நிலச்சரிவு ஏற்படுவதாலும் அதிரடியாக இறங்கி செல்வகுமார் மீட்பதில் கடும் சிக்கல் நீடித்து வருகிறது இதனால் கண்முன்னே செல்வகுமாரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருப்பதைத் வேறு வழியில்லாமல் அனைவரும் வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அவரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழு அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளது. இருப்பினும் அவர்கள் சாலை மார்க்கமாக வருவதால் பேரிடர் குழுவினர் இங்கு வந்து சேர இன்னும் பல மணி நேரம் ஆகும் என தெரிகிறது. உயிருக்காக போராடி வரும் செல்வகுமாரை காப்பாற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.