For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுத்தம் செய்யுங்க... இல்லைன்னா செத்துப்போயிருவோம்: அரசுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டம்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வீட்டை சுற்றிலும் சகதியாக உள்ளது. நாய், பூனை, எலி, மாடுகள் செத்து கிடந்தன. அதை நாங்கள் தான் அப்புறப்படுத்தினோம். ஒரே துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளுக்கு திடீர், திடீரென காய்ச்சல் பரவுது. வாழவே பயமா இருக்கு. ஐயா சாமி எங்களுக்கு நீங்க எதுவுமே கொடுக்க வேண்டாம். வீட்டை சுற்றியுள்ள குப்பைகள், கழிவுநீரை மட்டும் அகற்றி கொடுங்கய்யா என்று கெஞ்சும் நிலைக்கு வந்து விட்டனர் சென்னைவாசிகள்.

சென்னையில் நாள் கணக்கில் கொட்டித் தீர்த்த கனமழை நகரத்தையே புரட்டி போட்டது. குடிசை பகுதிகளை மட்டுமல்ல அடுக்கு மாடி கட்டிடங்கள் உள்ள பகுதிகளிலும் நீச்சல் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டே வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Flood hit pedople agitate against govt in Chennai

நமக்கு என்ன ஆபத்து வரப்போகிறது என்று நினைத்த மக்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கி விட்டது மழை வெள்ளம். மழை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண பொருட்கள் கிடைக்காததாலும், நீண்ட நேர மின்தடையை கண்டித்தும், கழிவுநீருடன் கலந்து சாலை மற்றும் வீடுகளில் புகுந்த தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தண்டையார்பேட்டை அஜிஸ் நகர், குமரன் நகர், நேரு நகர், மணலி சாலை ஆகிய இடங்களில் அடுத்தடுத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொருக்குப் பேட்டை, தங்கச்சாலை பகுதியிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

வடசென்னையில் வெள்ளம்

கன மழையால் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ள வடசென்னை பகுதிகளை சேர்ந்த பலர், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கிய பல இடங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் மக்களை தாக்கி வருகிறது. இலவச மருத்துவ முகாமுக்கு சென்றால், அங்கு டாக்டர்கள் இல்லை. பெயரளவுக்கு மாத்திரை மட்டும் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முகாமில் மருந்து இல்லை

வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம், ஆர்.கே.நகர் போன்ற பகுதி மக்கள் காலில் ஏற்பட்டுள்ள சேற்றுப்புண்ணால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களால் நடக்க முடியவில்லை. இலவச மருத்துவ முகாமிலும் மருந்து இல்லை. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கேட்டால் அங்கும் மருந்து இல்லை என திருப்பி அனுப்புகின்றனர்.

மறியலில் மக்கள்

கொருக்குப்பேட்டை கார்னேஷன் நகரில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடியது. இதனை அகற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் எண்ணூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

காய்ச்சல், சேற்றுப்புண்

கொருக்குப்பேட்டை பகுதியில் மழைநீர் வீடுகளில் சூழ்ந்து, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களை, அதே பகுதியில் உள்ள பள்ளிகளில் முகாம் அமைத்து, தங்க வைத்தனர். ஆனால், அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கவில்லை. இதனால், முகாம்களில் தங்கியிருந்த மக்களும், சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்கே நகர் தொகுதியில் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துள்ளது. அதில் வசித்த மக்களுக்கு காலில் சேற்றுப்புண் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் தொகுதியில் குடிநீர் இல்லை

வடசென்னை முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்தாலும், குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு, தண்ணீர் கேன் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளையும், உடமைகளையும் இழந்துள்ள மக்கள், குடிக்க தண்ணீர் இல்லாமல் பரிதவிக்கின்றனர்.

நோய் தொற்று அபாயம்

இதேபோல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனியார் அமைப்பினர் பலர் உணவு, உடை ஆகியவை வழங்குகின்றனர். ஆனால், கடந்த 4 நாட்களாக குளிக்க முடியாமல், அனைவரும் முடங்கியுள்ளனர். இதனால், அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை சீக்கிரம் சுத்தம் செய்யுங்க எங்க வீடுகளுக்கு போகாவிட்டால் நாங்க சீக்கிரம் செய்து போயிருவோம் என்பது இவர்களின் அச்சமாக உள்ளது.

அதிகரித்து வரும் கொசு உற்பத்தி

கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த மழை இன்று மீண்டும் தலைகாட்டியது. இதனால், பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் சிறிது சிறிதாக வடிய தொடங்கிய நிலையில் மீண்டும் தேங்கத் தொடங்கியது. ஆனால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து, அதில் உள்ள குப்பைகளும், சகதிகளும் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்களை ஏற்படும் நிலை உள்ளது. இந்த குப்பை கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசி, பொதுமக்கள் முகாம்களிலும் தங்க முடியாத நிலை உள்ளது.

கன்டெய்னரில் மக்கள் தஞ்சம்

தண்டையார்பேட்டை ஐஓசி அருகே பரமேஸ்வரன் நகரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அப்போது, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிகளில் உள்ள கன்டெய்னரில் தஞ்சம் அடைந்தனர். கன்டெய்னர்களில் மக்கள் உள்ளனர் என தெரிந்தும், அதிகாரிகள் அங்கு சென்று பார்க்கவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

அரசுக்கு பெரும் சவால்

சென்னையை மீட்டெடுக்கவும், குப்பையை அகற்றுதல்,நிவாரண உதவிகள் செய்தல் என ஆளும் அரசுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்னவோ உண்மைதான். முதல்வர் வெற்றி பெற்ற தொகுதியே இந்த நிலை என்றால் சென்னையில் பிறபகுதிகளிலும், தென் சென்னை பகுதிகளிலும் மக்களின் நிலை கவலைக்குறியதாகவே இருக்கிறது.

English summary
In Chennai there are more protests against the govt seeking clean up their areas which are affected in the flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X