For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகளை தீர்மானித்தது யார்? கேட்கிறார் ராமதாஸ்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு அதிமுகவினரிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும், அதனைத்தொடர்ந்து நிகழ்ந்த அவரது மறைவிலும் அதிமுகவினரிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்து இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்.22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அன்றிரவு 11.45 மணி அளவில் வெளியிடப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவரது மறைவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்து 10 நாட்களாகிவிட்ட நிலையில், அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட சோகமும், வேதனையும் இன்னும் மறையவில்லை. அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த ஐயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

ஜெ.வுக்கான சிகிச்சையில் சந்தேகம்:

ஜெ.வுக்கான சிகிச்சையில் சந்தேகம்:

அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலரும் என்னை தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஐயம் தெரிவித்து வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்ததில் தொடங்கி இன்று வரை பொது இடங்களில் என்னை சந்திக்கும் அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணைக்கு ஆணையிடக் கோரும்படி என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அதிமுகவினர் தெரிவித்த ஐயங்களும், கோரிக்கைகளும் ஒதுக்கித் தள்ளிவிடக் கூடியதாக இல்லை.

கடமைக்கு அறிக்கை

கடமைக்கு அறிக்கை

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இரவில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் திசம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவில் அவர் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது வரையிலான 75 நாட்களிலும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வெளிப்படையானதாக இல்லை. அந்த தகவல்கள் அனைத்தும் கடமைக்கு வெளியிடப்பட்டவையாகவே அமைந்திருந்தன.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹாண்டே

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹாண்டே

1984-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. மாறாக, அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் எச்.வி.ஹாண்டே தான் முதலமைச்சரின் உடல்நிலை குறித்த சீரான இடைவெளியில் வெளியிட்டு வந்தார். அவை நம்பத்தகுந்தவையாக இருந்தன. ஆனால், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவரங்களை மருத்துவமனை நிர்வாகமே வெளியிட்டது.

சந்திக்க அனுமதியில்லை

சந்திக்க அனுமதியில்லை

அதுமட்டுமின்றி, முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று விட்டதாகவும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட அவரை சந்தித்து நலம் விசாரிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட காலத்தில் தமிழக ஆளுனர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுனர்கள் மற்றும் முதலமைச்சர்கள், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நலம் விசாரிக்க வந்த போதும் கூட அவர்கள் ஜெயலலிதாவை சந்திப்பது மிக கவனமாக தவிர்க்கப்பட்டது.

மரபு

மரபு

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், முதலமைச்சரின் பொறுப்புகளை கவனித்த மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனையில் தங்கியிருந்த போதிலும் கூட, அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட வில்லை. ஒரு மாநில முதலமைச்சர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை முதலமைச்சரின் பொறுப்புக்களை கவனித்துக் கொள்ளும் மூத்த அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கவனித்துக் கொள்வது தான் மரபாகும்.

அன்புமணி கவனித்தார்

அன்புமணி கவனித்தார்

2009-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது, பிரதமரின் பொறுப்புக்களை கவனித்துக் கொண்ட மூத்த அமைச்சர் பிரணாப்முகர்ஜி, சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசும் தான் உடனிருந்து சிகிச்சையை கவனித்தனர். பிரதமருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர் அன்புமணி தான் வெளியிட்டார்.

யாருக்கு அதிகாரம்

யாருக்கு அதிகாரம்

ஆனால், தமிழகத்தில் முதலமைச்சர் பொறுப்பை கவனித்துக் கொண்ட மூத்த அமைச்சரும், சுகாதார அமைச்சரும் பெயரளவுக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டனர். சிகிச்சை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் இருட்டிலேயே வைக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தாண்டி முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தீர்மானிக்கும் சக்தியாக வேறு சிலர் இருந்தனர். முதலமைச்சர் என்ற முறையில் அரசு சார்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளில் இருந்தவர்களை ஒதுக்கிவைத்து விட்டு, அனைத்து வகையான முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் எந்த அடிப்படையில் அந்த சிலருக்கு வழங்கப்பட்டது? என்பது தான் அதிமுகவினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ள வினாவாகும். இந்த வினாவை எழுப்ப அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு; அதற்கு பதிலளிக்கும் கடமை அரசுக்கு உள்ளது.

திட்டமிட்ட செய்திகள்

திட்டமிட்ட செய்திகள்

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு அடுத்த நாளே அவர் குணமடைந்து விட்டதாகவும், அடுத்த சில நாட்களில் இல்லம் திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் காவிரி பிரச்சினை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், எப்போதும் இல்லாத வகையில் தீப ஒளி திருநாளுக்கான போனசை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்ததாகவும் திட்டமிட்டு செய்திகள் பரப்பப்பட்டன. இந்த செய்திகள் வெளியான சில நாட்களில் முதலமைச்சருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதால் அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியானது. இடையில் நடந்தவை என்ன? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

பின்னணியில் பெரும் மர்மம்

பின்னணியில் பெரும் மர்மம்

75 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக உடல்நலம் தேறி விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அறிவித்ததன் பின்னணியில் பெரும் மர்மம் இருப்பதாக அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் கருதுகின்றனர். அவர்களின் இந்த ஐயம் தீர்க்கப்பட வேண்டும். ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த போது பதப்படுத்தப்பட்டிருந்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவற்றுக்கு பதிலளிக்கப்பட வேண்டும்.

துரோகம் செய்வது யார்?

துரோகம் செய்வது யார்?

ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட சோகத்திலிருந்து அதிமுகவின் தொண்டர்கள் இன்னும் மீளாத நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியும், இதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமும் தொண்டர்களின் வேதனையை அதிகப்படுத்தியுள்ளன. அதிமுகவின் அனைத்து வெற்றிக்கும் ஜெயலலிதா மட்டுமே காரணம் என்று கூறிவந்த மூத்த தலைவர்கள், இப்போது ‘‘அதிமுகவின் வெற்றிக்கு ஜெயலலிதா காரணமல்ல... இரட்டைஇலை சின்னம் தான் காரணம்'' என்று கூறத் தொடங்கியிருப்பதிலிருந்து அவர்கள் யார்? அவர்கள் யாருக்கு துரோகம் செய்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக இருப்பது போல நடிக்கிறார்கள் என்பதை தொண்டர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த விஷயத்தில் உண்மையை உலகுக்கு உணர்ந்த வேண்டிய ஊடகங்கள், யாருக்கோ அதிகாரத்தை பெற்றுத் தர நடத்தப்படும் நாடகத்தின் கதாபாத்திரங்களாக மாறியிருப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை உணர்ந்து உண்மையாக நடக்க வேண்டும்.

போற்றுதலுக்குரியவர்

போற்றுதலுக்குரியவர்

முதலமைச்சராக ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவரது கட்சியினருக்கு அவர் எப்போதும் போற்றுதலுக்குரியவராகவே இருந்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மரணம் குறித்தும் அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஆயிரமாயிரம் ஐயங்கள் நிலவும் வகையில், அவற்றை போக்கும் வகையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Chennai: Former CM Jayalalitha death creates Doubts among ADMK activists PMK founder Ramadoss says in a statement issue today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X