இணை செயலாளர்கள் அறிவிப்பில் பாஜகவின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்

சென்னை: அரசுத் துறைகளில், இணைச் செயலாளர் பதவிகளில் நேரடியாக வெளியாட்களை நியமிக்கும் பாஜகவின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தனியார் துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிரத்யேக விளம்பரமும் நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை ஆர் எஸ் எஸ் மற்றும் சங் பரிவாருக்கு ஆதரவானது என்று ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பாஜகவின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை மிகவும் தவறானது. அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவிற்கு வேண்டியவர்களாகவே இருப்பார்கள்.
அப்படி பதவிக்கு வருபவர்கள் மக்களுக்காகப் பணியாற்றமாட்டார்கள். இது நாட்டின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. இந்த முறை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.