For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூத்த தியாகி ஐ.மாயாண்டி பாரதி மரணம்.. கிரானைட் ஊழலை வெளிக் கொணர்ந்தவர்!

By Shankar
Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தின் மூத்த தியாகியான ஐ மாயாண்டிபாரதி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 98.

பொதுவுடைமைவாதியாகத் திகழ்ந்த மாயாண்டி பாரதி, நாட்டின் விடுதலைக்காக பலமுறை சிறை சென்றவர். பல ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் உழைத்தவர்.

மதுரை கிரானைட் முறைகேடுகளை வெளிக் கொணர உதவியவர்.

மதுரையில் 1917-ம் ஆண்டு பிறந்த மாயாண்டி பாரதி, பத்தாம் வகுப்பு வரை படித்தவர். அந்தக் காலத்தில் அது உயர்ந்த படிப்பாகும்.

Freedom Fighter Maayandi Bharathi passed away

மாயாண்டி பாரதி 1939-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். பின்னர் 1940 ஆம் ஆண்டு இந்து மகாசபையில் இணைந்து ராமநாதபுரம் மாவட்ட அமைப்புச் செயலாளராக இருந்தார். அப்பொழுது சாவர்க்கரை மதுரைக்கு அழைத்து வந்தார்.

இரண்டாம் உலகப் போருக்கு ஆள் சேர்ப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக 1940ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு திருவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1942ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற அவர், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்பொழுது பாதுகாப்புக் கைதியாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1943ஆம் ஆண்டில் வெளியே வந்த அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

மாயாண்டி பாரதி சிறையில் இருந்தபொழுது, இந்து மகா சபையினர் அவரிடம் இரண்டாம் உலகப் போர் எதிர்ப்பு நடவடிக்கையில் இனி ஈடுபடுவது இல்லையென மன்னிப்பு கடிதம் எழுதி அரசுக்குக் கொடுத்துவிட்டு விடுதலை ஆகும்படி கூறினர். மாயாண்டி பாரதி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இந்து மகா சபையிலிருந்து விலகினார்.

போர் எதிர்ப்புக் கைதியாக 1941 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் சிறையில் இருந்தபொழுது பொதுவுடைமைத் தலைவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

1942 -ல் மதுரையில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் ஆனார்.

1942 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சியில் கலந்துகொண்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

திரு.வி. க. ஆசிரியராக இருந்த நவசக்தி இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1944ஆம் ஆண்டு சென்னைக்குச் சென்று 1964 ஆகஸ்ட் 15 ஆம் நாள் வரை ஜனசக்தியில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1966 ஆம் ஆண்டு முதல் தீக்கதிர் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டில் அவ்விதழிலிருந்து ஓய்வு பெற்றார்.

1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாயாண்டி பாரதி தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு சமூகப் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்திய மாயாண்டி பாரதி, தள்ளாத வயதிலும் முதுமையைப் பொருட்படுத்தாமல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வருவதற்காகப் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயாண்டி பாரதி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

English summary
Maayandi Bharathi, one of the senior freedom fighters of Tamil Nadu was passed away on Tuesday night in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X