For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டு வருவார் பச்சமுத்து.. அபார நம்பிக்கையில் இந்திய ஜனநாயகக் கட்சி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை... 30 வருடம் வீழ்ந்தவரும் இல்லை என்பார்கள். அது உண்மை என்பது இன்றைக்கு பல நிறுவனங்களுக்கு பொருந்தி வருகிறது. இன்றைக்கு ஊடகங்களில் அதிகம் அடிபடும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து, சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கணித ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கி இன்றைக்கு கல்வித்தந்தையாக உயர்ந்து நிற்கிறார்.

1985ல் தொடங்கப்பட்ட அவரது எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி இன்றைக்கு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் என்று மட்டும் இல்லாமல், இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள மாணவ மாணவியரை கேட்டுப் பார்த்தாலும், இளைய தலைமுறையினரின் முதல் ''சாய்ஸ்'' எஸ்.ஆர்.எம் கல்லூரி தான் என்று கூறும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

From maths teacher to SRM University: TR Pachamuthu's real story

உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழக வளாகம்! நவீன கட்டமைப்பு வசதிகள்! இயற்கை சூழல்! அனைத்து வசதிகள்! பரந்து விரிந்த கல்வி வளாகம்!! தேர்தெடுக்கப்பட்ட பேராசிரியர்கள்! இது மட்டும் தானா!! எஸ்.ஆர்.எம் வளர்ந்த அதே நேரத்தில், சம காலத்தில் வளர்ந்த பல கல்லூரிகள், பல்கலைகழகங்கள் அங்கீகரிக்கப்பட்டு, இன்று நெடித்துயர்ந்து தான் நிற்கின்றன.

எஸ்.ஆர்.எம் கல்வி சாலைகள், மாணவர்களின் வருங்கால கனவையும் கருத்தில் எடுத்துக் கொண்டு, கல்லூரியில் படிக்கும் போதே வெளிநாட்டு படிப்பின் நுணுக்கங்களை அறிந்துக் கொள்ளும் வாய்ப்புகளை கொடுத்து உதவியது. இது போல மாணவர்களின் விஞ்ஞான, அறிவை வளர்க்கவும், கலை, விளையாட்டு, சமூகம் என அவர்களின் நாட்டம் விரியவும் வாய்ப்புகளை அள்ளி கொடுத்தது. இதனால் தான் இன்று குக்கிராமம் முதல் அதி நவீன நகரிலும் எஸ்.ஆர். எம் இன் குரல் ஒலிக்கிறது.

பச்சமுத்துவின் வளர்ச்சி

எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்து என்னும் பாரிவேந்தர். சேலம் ஆத்தூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் பச்சமுத்து. ஏழ்மையிலும் அவரது அறிவுதிறன் சுடர்விட்டது. தந்தையை இழந்தும், வறுமையால் வாடினாலும் கடுமையாக உழைத்து படித்தார். 7 ரூபாய் பணத்துடன், மனம் நிறைய உறுதியோடும் சென்னை வந்தார் பச்சைமுத்து. ஆசிரியர் வேலையிலும் சேர்ந்தார்.

கடின உழைப்பு

காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை டியுஷன் எடுத்துவிட்டு, கல்லூரி சென்று பணி செய்வார்! அதே போல மாலையிலும் டியுஷன் எடுத்து, ஒவ்வொரு மணி நேரத்தையும், கடுமையாக உழைத்தார். அவரது மாணவர்கள் அனைவரும் அவரை தங்களது ஆலோசகராகவே மதித்தனர்.அப்படித்தான் தொடங்கியது அவரது கல்வி கனவு.

பள்ளி தொடக்கம்

முறையான ஆங்கில பள்ளி இல்லை என்று பெற்றோர் குறைப்பட, அவர்களின் குறை தீர்க்கப் பிறந்தது எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் பள்ளி. அப்படித்தான் இன்று மாம்பலத்தில் இருக்கும் எஸ்.ஆர்.எம் நைட்டிங்கேல் பள்ளி திறக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் உடன் பேச்சு

கேரளா போல, தமிழ்நாட்டிலும் தனியார் கல்லூரிகள், பாலி டெக்னிக்குகள் தொடங்கப்பட்டு, மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆரின் கனவு. அன்று இருந்த கல்வியாளர்களை, கூட்டி வைத்து ஆலோசனை நடத்திய அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், பச்சமுத்து மற்றும் பலருக்கு உடனடியாக பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கினார்.

எஸ்.ஆர்.எம். தொடக்கம்

1985இல் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1990இல் நர்ஸிங் மற்றும் மருந்தியல் கல்லூரியும் தொடங்கப்பட்டது. 1993-94ல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கலைக்கல்லூரியும் தொடங்கப்பட்டது. 2002இல் எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டது.

உச்சக்கட்ட வளர்ச்சி

30 ஆண்டுகளில் இன்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசம், சிக்கிம் மற்றும் நொய்டாவில் தன் கல்லூரிகளை தொடங்கும் அளவுக்குச் சக்தி படைத்ததாக உயர்ந்துவிட்டது. எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வளர்ச்சி பலருக்கு பொறாமையை கொடுத்துள்ளது என்பதே உண்மை.

மாணவர்கள் வருகை

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சேர்ந்து படிக்க, ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சம் மாணவர்கள், சிறப்பு தேர்வு எழுதி, விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்து படித்து வருகிறார்கள். எஸ்.ஆர்.எம் பல்கலையில் எண்ணற்ற பாடங்கள் இருப்பதால், மாணவர்களின் சேர்க்கை குறைவதற்கான வாய்ப்புகளும் இல்லை. மாணவர்களுக்கேற்ற, கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர், ஆசிரியர் விகிதம் என அனைத்தும் இருப்பதால், அரசின் அனைத்து அங்கீகாரங்களும், ஆக்கபூர்வமான ஆதரவும் உண்டு.

எஸ்.ஆர்.எம். நிறுவனத்தில் மதன்

இன்று இந்த வழக்கின் மையத்தில் இருக்கும் மதன் யார்? அவருக்கும் எஸ்.ஆர்.எம் நிறுவனத்திற்க்கும் என்ன சம்பந்தம் என்று அனைவரும் குழம்பி உள்ளனர்!! கடந்த 15 ஆண்டுகளாக எஸ்.ஆர்.எம் வளர்ந்து வரும் சூழலில், நவீன ஆன்லைன் விண்ணப்பங்கள் இல்லாத கால கட்டத்தில், ஆந்திரா ராஜஸ்தான், நேபாளம், அருணாச்சல பிரதேசம் போன்ற இடங்களிலிருந்தும் மாணவர்கள் பல ஏஜெண்டுகள் மூலம் வந்து சேர்வார்கள். கல்வி ஏஜெண்டுகள் என்பது சட்டப்படி குற்றம் இல்லை என்பதால் வேந்தரும் மேலும் அனைத்து கல்லூரிகளும், இந்த ஏஜெண்டுகளை தடுக்கவில்லை.

முகவர் மதன்

கல்லூரிகளுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை வாங்கி, தகுந்த ஆலோசனை பெற்று தங்கள் பிள்ளைகளை விரும்பிய பாடத்தில் சேர்த்து விடுவது தான் சிறந்தது. இருந்தாலும், சிலர், தமக்கு தெரிந்த விளம்பரம் செய்யும் ஏஜெண்டுகளின் மூலம், கல்லூரிகளில் சீட்டு வாங்குவார்கள். இப்படி பல ஊர்களிலும், விளம்பரம் செய்து பல நூறு மாணவர்களை தொடர்ந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் சேர்த்து விடும் கல்வி முகவராகவே மதன் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

அரசியல் வளர்ச்சியோடு தலைவர்களால் நெருக்கடிகள் தொடர்வது வாடிக்கையானது. அரசியல் ஒரு சாக்கடை! நமக்கு எதற்கு!! கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு, நாம் நிம்மதியாக உட்கார வேண்டிய வயசு என்று பெரும்பாலானவர்கள் கூறினாலும், அரசியல் சாக்கடை அல்ல!! அது சந்தனம்!! இளைஞர்களே வாருங்கள்!! வந்து நமது தாய் நாட்டை தூய்மைப்படுத்துங்கள்!! என்று இந்திய ஜனநாயக கட்சியை தொடங்கி அழைப்பு விடுத்தார் பச்சமுத்து.

கட்சியில் மதன்

இந்திய ஜனநாயக கட்சி தொடங்கிய போதுதான் மதன், வேந்தரின் கொள்கைகளை ஏற்று, அந்த சேவையில் தானும் இணைவதாக கூறி, கட்சியில் சேர்ந்து வளர்ந்தார். பலவகை விளம்பர உத்திகளை கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காகவும் மதன் பாடுபட்டார் என்பதும் உண்மை. இப்படி, பணம், பொருள், கடும் உழைப்பு, நேரம் என செலவழித்து, தனது கட்சிக்காக பாடுபடும் ஒரு தொண்டனை அரவணைப்பது போலவே பச்சமுத்துவும் மதனை அரவணைத்தார்.

வேந்தர் மூவிஸ்

பெரும்பாலான மாணவர்கள் எஸ்.ஆர்.எம்இல் படிக்க விரும்புவதால், வெளிமாநிலங்களில், மாணவர்கள் சேர்க்கையால், நல்ல பணம், அரசியலில் அறிமுகம் விளம்பர தொடர்புகள், என ருசி கண்டு விட்ட மதன், படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆசை கொண்டார்! தனது தலைவரின் பெயரையே வைக்க வேண்டுவதாய் கூறி, தனது பட கம்பெனிக்கு வேந்தர் மூவிஸ் என்றே பெயர் வைத்தார்.

குடும்பத்தினரின் ஆலோசனை

கல்விக்கு பெயர் பெற்ற பாரி வேந்தர், சினிமா எடுப்பதா என்ற பெயர் சர்ச்சையில் முடியும் என குடும்பத்தினர் நினைத்தனர். எஸ்.ஆர்.எம். இன் கட்டமைப்பு வசதிகளுக்கு, வரும் பணத்தில் சேர்த்து வைக்காமல் பெரும் பகுதியை செலவழித்து வரும் பச்சமுத்துவுக்கு எதற்காக அநாவசியமான அவப்பெயர் என்று குடும்பத்தினர் வாதிட்டனர்.

நீட் தேர்வு

மருத்துவக்கல்லூரியில் சேர 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்துதான் எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரிக்கு பிரச்னை தொடங்கியது. கடந்த ஜுன் இரண்டாம் தேதி மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ரூபாய் 72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் மீதும் மதன் மீதும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பே மதன் மே 27ஆம் தேதி மதன் மாயமாகிவிட்டார்.

மாணவர்களின் பணம்

மதன் எழுதியதாக வெளியான கடிதத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பெற்ற பணத்தை பச்சமுத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும், பணம் கொடுத்த மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோர்கள் அளித்த புகார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பச்சமுத்துவிடம் ஏன் போலீஸ் விசாரணை செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பினர். இதையடுத்துதான் வழக்கில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

புதிய தலைமுறை

புதிய தலைமுறை செய்தி சேனல், தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தேசிய, பன்னாட்டு தரத்தில், பலரின் நேர்காணல்கள் ஒரே நேரத்தில், தெளிவான படங்கள், நேரடி சம்பவ காட்சிகள் என தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்து, ஒரே வருடத்தில் மற்ற செய்தி சேனல்களை பின்னுக்கு தள்ளியது. இதனால் பாதிப்படைந்தது சன் டி.வி செய்தி சேனல் தான்!!

தடைகளை தாண்டி வெற்றி

புதிய தலைமுறை சேனலை துவங்கிய போதிலிருந்தே, சுமங்கலி கேபிள்விஷன் மூலமாக அதிகப்படியான தலைவலி சன்டிவியினால் ஏற்பட்டது. சுமங்கலி கேபிள்விஷனால், தமிழ்நாடே 15 வருடம், ஊடக சுதந்திரம் இன்றி தவித்தது என்பது அனைவரும் அறிந்தது. தடைகளை தாண்டி புதிய தலைமுறை ஜெயித்தது.

ஊடகப் போர்

கடந்த இரண்டு மாத காலமாக சன் செய்திகள், 'மதன் வழக்கில் பச்சமுத்துவை ஏன் அதிகாரிகள் கைது செய்யவில்லை?' என்று பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தது. அதற்குமுன், மாறன் சகோதரர்களுக்கு எதிரான வழக்கை பற்றிய செய்திகளை ஒளிபரப்புவதில் புதிய தலைமுறை பெருத்த ஆர்வம் காட்டியது. மேலும் சுமங்கலி கேபிள் விஷன் திட்டமிட்டு புதிய தலைமுறையை இருட்டடிப்பு செய்ததாக குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது.

தர்மம் வெல்லும்

லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு, உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக கொடுப்பவர் பாரிவேந்தர் பச்சமுத்து! ஏழை நோயாளிகளின் நோய் தீர்க்கும் புகலிடம் எஸ்ஆர்எம் மருத்துவமனை. ' தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்தர்மம் நிச்சயம் வெல்லும்' என்கின்றனர் இந்திய ஜனநாயகக் கட்சியின் தொண்டர்கள்.

மீண்டு வருவார் பச்சமுத்து

ஆகஸ்ட் 25ம் தேதி பச்சமுத்து கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று இந்திய ஜனநாயக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பச்சமுத்துவின் எதிரிகள் திட்டமிட்டு சதி செய்து அவர் மேல் இப்படியொரு அபாண்ட குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்கள். பச்சமுத்து ஏதுமறியதா அப்பாவி. அவர், தான் நிரபராதி என்பதை நிரூபித்து இந்த வழக்கிலிருந்து வெளியே வருவார் என்று கூறியிருக்கிறார்கள்.

English summary
The founder-chairman of the multi-crore SRM group had humble beginnings in a Tamil Nadu village.a group with interests in businesses as diverse as education, transport, media, energy and technology. The doyen of the educational industry in Tamil Nadu was arrested on August 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X