இந்த பாப்பா மாதிரி எல்லா குழந்தைகளும் இருந்துட்டா.. ‘அயனாவரம்’ கொடூரங்களுக்கு இடமே இல்லை!
பெண் குழந்தை அழகாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை : குட் டச் மற்றும் பேட் டச் பற்றி சிறிய பெண் குழந்தை ஒன்று அழகாகப் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகளில் பெண்களின் குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. இணைய சுதந்திரம் பல ஆண் மிருகங்களின் மனதில் வக்கிரங்களை விதைத்து விடுகிறது என்றால் மிகையில்லை. அந்தளவிற்கு நாள்தோறும் ஊடகங்களில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைச் சர்வசாதாரணமாகக் காண முடிகிறது.
இவ்வாறு குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல்களை நடத்துபவர்கள் வெளியில் இருந்து வருவதில்லை, பெரும்பாலும் அக்கம்பக்கத்தார் மற்றும் உறவினர்களாலேயே இந்த அக்கிரமம் அரங்கேறுவதாகக் கூறப்படுகிறது.

அயனாவரம் சிறுமி:
சமீபத்தில் சென்னை அயனாவரத்தில் நடந்த 11 வயது சிறுமிக்கு நடந்தது கொடூரத்திலும் கொடூரம். அயனாவரம், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் காது கேட்காத மாற்றுத்திறனாளி சிறுமியை அதே குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர், செக்யூரிட்டிகள் உள்பட 17 பேர் கடந்த 7 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்து, மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

அதிர்ச்சி:
முதல் முறை தான் பாதிக்கப்பட்ட போதே இது தவறு என புரிந்து கொள்ளக்கூடிய, உடனே இதனை தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற தெளிவு அச்சிறுமிக்கு இல்லாமல் போனது வேதனைக்குரியது. அச்சிறுமியை விளையாட்டு எனக் கூறியே பலமுறை அக்காமுகர்கள் சீரழித்தது தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விழிப்புணர்வு தேவை:
இதில் அக்குழந்தையின் அறியாமை மீது மட்டும் குற்றம் சொல்ல இயலாது. எது குட் டச், எது பேட் டச் என அச்சிறுமிக்கு அவரது குடும்பமோ, நலம் விரும்பிகளோ யாருமே சொல்லிக் கொடுக்காமல் போனதும் பெருங்குற்றம். அப்படிப்பட்ட விழிப்புணர்வு இருந்திருந்தால் முதல் சம்பவமே நடக்காமல் தடுத்திருக்கலாம், அல்லது இது தொடர்பாக வீட்டில் தெரிவித்து அடுத்தடுத்த கொடுமைகளை தவிர்த்திருக்கலாம்.

தெளிவான, தேவையான வீடியோ:
இந்நிலையில், சுமார் மூன்று வயதிற்கும் அழகிய பெண் குழந்தையொன்று, குட் டச் எது பேட் டச் எது என அழகாக விவரிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அச்சிறுமி தவறான தொடுதல்கள் எவை, சரியானது எது எனக் கூறுவதோடு, அப்படிப்பட்ட தாக்குதலை எப்படி எதிர்கொள்வது, யார் யாரிடம் உதவி கேட்க வேண்டும் என்பதை அழகிய மழலைத் தமிழில் கூறுகிறார்.

இந்தத் தெளிவு தேவை:
இது மனப்பாடம் செய்து கூறுவது போல் இல்லை. புரிந்து தெளிவாக கூறுகிறது அந்தக் குட்டிப் பாப்பா. இப்படி அக்குழந்தை குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்த அவரது தாய்க்கு ஒரு சபாஷ். இதேபோன்று ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், இனி ‘அயனாவரம்' போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, ஒரு நாளில் காணாமல் போகும் என நம்பலாம்.












Click it and Unblock the Notifications