For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கந்து வட்டி தொழிலை குண்டர் சட்டத்தின்கீழ் கொண்டு வர பரிசீலியுங்கள்: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கந்து வட்டித் தொழிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கந்து வட்டி பிரச்னையால் மக்கள்படும் சிரமம் குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யக் கோரி நீதிபதி என்.கிருபாகரன் கடந்த ஆண்டு, ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

Goondas Act to be Slapped on Usurers?

அந்தக் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தானாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்தது. அதில், கந்து வட்டி தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அவற்றைத் தடுப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? கந்து வட்டித் தடுப்புச் சட்டம் 2003-ஐ கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமியை நியமித்தது.

இரு ஆலோசனைகள்

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, இல்லையா என்பதை கண்காணிக்க மாவட்டம், தாலுகா அளவில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். மேலும், கந்து வட்டி சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற இரண்டு ஆலோசனைகளைப் பரிந்துரை செய்தார்.

போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர்

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:இந்த வழக்கை பொறுத்தவரை தமிழ்நாடு கந்துவட்டி தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இந்த வழக்கிற்கு பதிலளித்த அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, கந்துவட்டி குறித்து புகார் வந்தால் போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால், கந்து வட்டி கும்பல் கடன் தொகையை வசூலிக்க குண்டர்களை பயன்படுத்துகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தியேட்டர்களில் விளம்பரம்

மேலும், ‘கந்து வட்டி தடுப்பு சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும், கந்துவட்டி குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டம் அல்லது தாலுகா அளவில் கமிட்டி அமைக்கவேண்டும் என்றும் நல்ல அறிவுரைகளை மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி வழங்கியுள்ளார். எனவே, கந்து வட்டி தடுப்பு சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அனைத்து வகையான ஊடகங்கள், சினிமா தியேட்டர்கள் மூலம் விளம்பரம் வெளியிட வேண்டும். இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அரசு பயன்படுத்திக்கொள்ளலாம்.

கண்காணிப்பு கமிட்டி

மேலும், கந்து வட்டி தடுப்பு சட்டத்தின்கீழ் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இதுபோன்ற புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கந்து வட்டி கும்பலுடன், போலீசார் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனரா? என்பதை கண்காணிக்காக மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் கண்காணிப்பு கமிட்டிகளை உருவாக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.

குண்டர் சட்டம்

மேலும், கந்து வட்டி தொழிலில் முக்கிய நபர்களாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி கொடுமை வழக்குகளின் விசாரணை மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்.

தண்டனை விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும்

கந்து வட்டி வழக்கில் கோர்ட்டு மூலம் தண்டனை பெறுபவர்களின் விவரங்களை அவ்வப்போது இந்த ஐகோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவுகளுடன், இந்த வழக்கை பைசல் செய்கிறோம். நாங்கள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுகளை அமல்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை ஒருவாரத்துக்குள் இந்த ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக, இந்த உத்தரவின் நகல் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு பதிவுத்துறை அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

English summary
The Madras High Court has directed the State government to explore the possibility of bringing the persons collecting exorbitant interest (kandhu vatti) within the provisions of the Goondas Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X