உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து.. 24 பயணிகள் படுகாயம்!
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பயணிகள் படுகாயமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பாலி என்ற இடத்தில், தென்காசிக்குச் சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து திடீரென எதிர்பாராத விதமாக கவிழந்தது.

இந்த விபத்தில் 24 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்து வந்தது. ஈரமான சாலையில் அதிக வேகத்துடன் பேருந்து சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இதுவரை பேருந்து கவிழ்ந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.