For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகாரிகள் மட்டுமல்ல அரசும் கைவிட்டது.. கலக்கத்தில் ஜார்ஜ்.. குட்கா விவகாரத்தில் ட்விஸ்ட்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: குட்கா ஊழல் விவகாரத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தனித்து விடப்பட்டுள்ளார். அவரை காவல் துறை மட்டுமின்றி அரசும் கூட கைவிட்டு விட்டதாகவே, நடைபெறும் சம்பவங்களை வைத்து பார்க்கும்போது தெரிகிறது.

2016 ஆம் ஆண்டு வடசென்னையில் குட்கா குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட டைரியில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சப் பணம் பெற்று வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டு

ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டு

இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போது ஓய்வுபெற்றுள்ள ஜார்ஜ், பணியில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது வீடுகளில் சில தினங்களுக்கு முன்பாக சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது. குட்கா ஊழல் விவகாரத்தில் ஜார்ஜ்ஜுக்கு பெரும் பங்கு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்பாக தனது வீட்டில் நிருபர்களை சந்தித்தார் ஜார்ஜ். அப்போது கமிஷனரால் மட்டுமே குட்கா விற்பனையை அனுமதிக்க முடியுமா என்று திடுக்கிடும் கேள்வி ஒன்றை எழுப்பினார் ஜார்ஜ். குட்கா ஊழல் நடைபெற்றது உண்மைதான் என்றும், ஆனால் அப்போது சென்னை துணை கமிஷனர் பொறுப்பில் இருந்த ஜெயக்குமாரிடம் குட்கா வழக்கு பொறுப்பை தான் ஒப்படைத்ததாகவும், அவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

 கடிதம் எழுதியவர் ஜார்ஜ்

கடிதம் எழுதியவர் ஜார்ஜ்

குட்கா ஊழல் தொடர்பான தகவல்களை ஜெயக்குமார் தனக்கு தரவில்லை என்றும், அவருக்கு அனைத்து விவரங்களும் தெரிந்திருந்தும் கூட அதை தன்னிடம் மறைத்துவிட்டதாகவும், ஜெயகுமார் தனது பணிகளை திறமையாக செய்யவில்லை என்றும் ஜார்ஜ் குற்றம்சாட்டினார். ஜார்ஜுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில் தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரி மீது கையை காட்டி தப்பித்துக்கொள்ள முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கெனவே அவர் கமிஷனராக பதவி வகித்தபோது குட்கா பிரச்சினை பெரிதான போதுதான் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதினார்.

ஜெயக்குமார் விளக்கம்

ஜெயக்குமார் விளக்கம்

தனக்கு நெருக்கடி வந்தால் பிறரையும் சொல்லிக் கொடுக்க தயங்க மாட்டேன் என்ற எச்சரிக்கைதான் அந்த கடிதம், என்று அப்போது விமர்சனங்கள் எழுந்தன. இப்போது சிபிஐ ரெய்டு நடத்தி உள்ள நிலையில் கமிஷனரால் மட்டுமே குற்றங்களை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்ததும் இதே பாணியிலான மிரட்டல்தான் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே ஜார்ஜ் குற்றச்சாட்டு பற்றி, தற்போது விழுப்புரம் எஸ்பி பதவியில் உள்ள ஜெயக்குமார், ஊடகங்களுக்கு அளித்த விளக்கத்தில் "ஊழல் தொடர்பாக மேலே உள்ளவர்களிடம் பாய முடியாமல், கீழே உள்ள என்னிடம் பாய்ந்துள்ளார். நான் மிகவும் திறமையான அதிகாரி" என்று தெரிவித்தார்.

ஜெயக்குமாருக்கு அரசு ஆதரவு

ஜெயக்குமாருக்கு அரசு ஆதரவு

போலீஸ் அதிகாரிகள் நடுவேயான இந்த வார்த்தைப் போர் தமிழக ஆட்சி நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது. யார் மீது தவறு என்ற விவாதங்கள் எழுந்தன. ஜெயகுமார் தனது குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளும் அவரை தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சண்முகம், போலீஸ் அதிகாரி ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்தார். இதன் மூலம் அரசும் ஜெயக்குமாருக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது உறுதியாகியுள்ளது.

திசைதிருப்பும் ஜார்ஜ்

திசைதிருப்பும் ஜார்ஜ்

குட்கா ஊழல் பிரச்சினையில் ஜார்ஜ் கமிஷனராக பதவியில் இருந்தபோது பிற அதிகாரிகளை விசாரிக்க கோரி எழுதிய கடிதமும், இப்போது, பதவியில் இல்லாத போது, ஜெயக்குமார் மீது சுமத்திய குற்றச்சாட்டு ஆகியவை, அரசிடம் எடுபடாமல் போய் விட்டன. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அரசு மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் ஜார்ஜ் தனித்து விடப்பட்டுள்ளார். அவருக்கு எந்த மட்டத்திலும் ஆதரவு கிடைக்கவில்லை. எனவேதான் அவர் வழக்கில், கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட நான் ஒரு கிறிஸ்தவர் என்று அவர் சம்பந்தமே இல்லாமல் கருத்தைத் தெரிவித்திருந்தார். கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றபோதிலும், நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக அவர் மதத்தை தேவையில்லாமல் இழுக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி ஜார்ஜுக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

English summary
Chennai ex police commissioner George left alone in Gutka issue both by the officials and the Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X