For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள 18 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் நாளை நள்ளிரவு (ஏப்ரல் 1) முதல் உயர்த்தப்படவிருக்கின்றன. பொதுமக்கள் மற்றும் வணிகர்களை பாதிக்கும் வகையிலான இந்த கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.

Government must not be allowed to raise of Toll Gate rates: ramadoss

தமிழ்நாட்டில் மொத்தம் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 26 சுங்கச்சாவடிகளின் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஒன்றாம் தேதியும், 18 சுங்கச்சாடிகளின் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதியும் உயர்த்தப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தூத்துக்குடி, வேலூர், நெல்லை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 18 சுங்கச்சாவடிகளில் சாலைக் கட்டணம் ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படவுள்ளது. இந்த கட்டண உயர்வு முறையற்றது மட்டுமின்றி சட்டவிரோதமானதும் ஆகும்.

தனியார் சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்ட பிறகு பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போது சாலைக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள 18 சுங்கச்சாவடிகளிலும் செய்யப்பட்ட முதலீடு பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. முதலீடு எடுக்கப்பட்ட பிறகும் 100% கட்டணம் வசூலிக்கப்படுவது சட்டவிரோதம் ஆகும்.

இதுவே சட்டவிரோதம் எனும் போது ஆண்டுக்கு ஒருமுறை 10 முதல் 15% வரை கட்டணம் உயர்த்தப்படுவது கருணையற்ற செயல் ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி என்று கூற முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதேநிலை தான் காணப்படுகிறது.

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து நெடுஞ்சாலைகளிலும் முதலீடு எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், வருவாயைக் குறைத்துக் காட்டி, தொடர்ந்து முழுமையான சுங்கக் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இந்த மோசடிக்கு மத்திய அரசும் உடந்தையாக உள்ளது. இந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும், அவை வாங்கப்படும் போதே வாழ்நாள் முழுமைக்குமான சாலைவரி வசூலிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மீது சாலைப் பராமரிப்புக்காக ரூ.2 கூடுதல் வரியாக வசூலிக்கப்படுகிறது. இதற்குப் பிறகும் நெடுஞ்சாலைகளில் பயணிக்க தனியாக சுங்கக்கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம் ஆகும். அந்த சட்ட விரோத செயலையே பகல் கொள்ளையாக மாற்றியிருப்பதை மன்னிக்க முடியாது.

சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதையடுத்து, தனியார் பேரூந்துகளில் கட்டணங்கள் உயர்த் தப்படும். சரக்குந்துகளின் வாடகையும் உயர்த்தப்படுவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப் படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன வாடகை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்படுதால் காய்கறிகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமை சுமத்தப்படும்.

ஒருபுறம் வறுமையை ஒழிக்கப்போவதாகக் கூறிக் கொண்டு மறுபுறம் வறுமையை அதிகரிக்கும் வகையிலான இத்தகைய செயல்களில் ஈடுபடுவது முறையா? என்பதை மத்திய ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் தணிக்கையாளர்கள், மக்கள் அடங்கிய குழுவை அமைத்து சுங்கச்சாவடியின் வருவாயை பொதுத்தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். முதலீடு திரும்ப எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புக்காக 20% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். ஏதேனும் நெடுஞ் சாலையில் முதலீட்டை திரும்ப எடுத்த பிறகும் முழுமையான கட்டணம் வசூலிக்கப்படுவது தணிக்கையில் கண்டறியப்பட்டால், அந்த சாலைகளில் சுங்கக்கட்டணத்தை அரசு அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Pmk founder ramadoss issues the statement about raise of Toll Gate rates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X