For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்ரீத் பண்டிகை: தமிழக ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றி பெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பக்ரீத் தின வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை ஒட்டி தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

இஸ்லாமிய மக்களின் மிக முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக கவர்னர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்,

புனிதமான பக்ரீத் பண்டிகையையொட்டி அனைத்து முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Governor, CM greet people on Bakrid

ஆளுநர் வாழ்த்து

இந்த தியாக திருநாள் மத நம்பிக்கை, ஒற்றுமை, நட்பு, சமாதானம் மற்றும் இணக்கத்தை மேம்படுத்தட்டும் என்றும் ஆளுநர் ரோசய்யா கூறியுள்ளார்.

முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''இறைக் கட்டளையை ஏற்று தன் தனையனையே இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தியாக திருநாள்

பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றி பெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும்.

மனித நேயம் மத நல்லிணக்கம்

இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் உறுதி ஏற்போம். விட்டுக் கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

ராமதாஸ் வாழ்த்து

இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறைத் தூதரான இப்ராகிம், இறைவனின் கட்டளையை ஏற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன்வந்த போது, வான் தூதரை அனுப்பி அதை தடுத்த இறைவன், மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிகொடுக்கும்படி கூறினார். இப்ராகிமின் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார். இதை குறிக்கும் வகையிலேயே தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

தியாகச் செயல்

உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப் படுத்தும்.

இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

வைகோ வாழ்த்து

வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''ஈதுல் அல்கா எனப்படும் ஈகைத் திருநாள் பெருநாள் என்று இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தள்ளாத வயதில், பெற்றப் பிள்ளையைவிட கொண்ட கொள்கையாம் ஈமான் மிக உன்னதமானது எனக்கொண்டு அப்பிள்ளையை பலியிடத் துணிந்த நபி இப்ராகிம் அலையின் ஈகம்-தியாகம் என்றும் போற்றத்தக்கது அன்றோ!

அனைவரும் சமம்

அந்த ஈகத்தை நினைவுகூர்ந்து அரஃபா பெருவழியிலும், முஸ்தலிபாவிலும் இன, நிற, தேச மொழி எல்லைகளைக் கடந்து, ஒன்றே குலம், ஒருவனே தேவன் எனக்கூடி வானமே கூரையாக மண்ணில் அனைவரும் சமம் என புனித இறுதிக் கடமையை நிறைவேற்றுவோர்க்கும், அந்த நினைவில் திளைத்தவண்ணம் அகிலமெங்கும் ஏக இறைவனை வணங்கியும், ஏழைகளுக்கு வழங்கியும், ஏழை மக்களுடன் இணங்கியும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இதய வாழ்த்துக்கள்.

சமூக ஒற்றுமை

வாழையடி வாழை என உறவு முறையுடன் வாழும் மரபைப் பேணி, சமய நல்லிணத்தையும், சமூக ஒற்றுமையையும் கட்டிக் காக்க சூளுரைப்போம் என இந்நன்னாளில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்'' எனக் கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu Governor Dr K Rosaiah, Chief Minister and AIADMK Supremo J Jayalalithaa and leaders of various political parties today greeted the Muslim brethren on the eve of Bakrid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X