For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்களின் போராட்டத்தை அடக்க முயல்வதா.. மு.க. ஸ்டாலின் கண்டனம்

அரசு ஊழியர்களின் போராட்டத்தை அரசு அடக்க முயல்வதை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் தொடர் போராட்டத்தை 'குதிரை பேர' அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், அந்தப் போராட்டத்தைக் காவல்துறை மூலம் அடக்கி விடலாம் என்று நினைப்பதற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்", "ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்", "இடைக்கால நிவாரணமாக 20 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும்", "தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிவோருக்கும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்", என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் திடீரென்று போராட்டம் நடத்தி விடவில்லை.

அராஜக நடவடிக்கை

அராஜக நடவடிக்கை

முறைப்படி முன்கூட்டியே அரசுக்கு இந்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பி, அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாபெரும் பேரணியை அரசு ஊழியர்கள் சென்னை மாநகரத்தில் நடத்தினார்கள். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக அந்தப் பேரணிக்கு வரவிருந்த அரசு ஊழியர்களை ஆங்காங்கே செக்போஸ்டுகளில் மடக்கி கைது செய்து அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டது இந்த கேடுகெட்ட அதிமுக அரசு.

கிஞ்சிற்றும் நடவடிக்கை இல்லை

கிஞ்சிற்றும் நடவடிக்கை இல்லை

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தங்கள் கோரிக்கைகள் குறித்துப் பிரச்சார இயக்கத்தை நடத்தி, அரசின் கவனத்திற்குக் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஒரே அணியாக மாறி ‘கமிஷன் அடிக்க அணிகள் இணைப்பு' என்பதிலும் மட்டுமே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவனம் செலுத்துகிறாரே தவிர, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண கிஞ்சிற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தலைமைச் செயலாளர் மிரட்டல்

தலைமைச் செயலாளர் மிரட்டல்

அரசு உருவாக்கிய அசாதாரண சூழ்நிலையால் வருகின்ற 22 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது என்றும், தற்காலிக பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் தலைமைச் செயலாளர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் மிரட்டியிருப்பது வேதனைக்குரியது.

நிர்வாக முறைக்கு உகந்ததா?

நிர்வாக முறைக்கு உகந்ததா?

அரசு நிர்வாகத்தில் உள்ள அரசு ஊழியர்களின் தலைவராகவும், அவர்களின் நலன் குறித்து கனிவுடன் பரிசீலித்து அரசுக்குத் தெரிவித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவருமான ஒரு தலைமைச் செயலாளர், போராடும் அரசு ஊழியர்களுக்கு மிரட்டல் விடுப்பதும், எச்சரிக்கை செய்வதும் ஜனநாயக விரோத செயல் மட்டுமல்ல, சிறந்த நிர்வாக நடைமுறைக்குச் சற்றும் உகந்த செயல் அல்ல.

எஸ்மா சட்டம்

எஸ்மா சட்டம்

அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராடும் அவலநிலை உருவாகி வருகிறது. எஸ்மா - டெஸ்மா போன்ற ‘ஆள்தூக்கிச் சட்டங்களை' பயன்படுத்தி அரசு ஊழியர்கள் அதிமுக ஆட்சியில்தான் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெண்கள் என்றுகூடப் பாராமல் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து ‘நைட்டியுடன்' கைது செய்த கொடுஞ்செயல் அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. ஒரே உத்தரவில் ஒரு லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த சர்வாதிகார நடவடிக்கை அதிமுக ஆட்சியில்தான் எடுக்கப்பட்டது. இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு எல்லாம் அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குரிமை மூலம் அதிமுகவிற்கு தக்கப் பதிலடி கொடுத்தும், இன்னும் அந்தக் கட்சியின் தலைமையில் உள்ள ‘குதிரை பேர' அரசு சற்றும் திருந்தவில்லை.

திமுக செய்தது என்ன?

திமுக செய்தது என்ன?

ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு நேர்ந்த இன்னல்களையும், கொடுமைகளையும் நீக்கி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றியது. தலைவர் கலைஞர் அவர்கள் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவ்வப்போது அவர்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டார். எஸ்மா - டெஸ்மா சட்டங்களை நீக்கி, அரசு ஊழியர்களின் ஜனநாயகரீதியிலான போராட்டங்களுக்கு மதிப்பு கொடுத்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து, தற்போது நடைபெற விருக்கும் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அடக்குமுறை மூலம் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தை ‘குதிரை பேர' அரசு கைவிடுவது நல்லது.

அரசின் கடமை

அரசின் கடமை

இந்தப் போராட்டம் முடிந்ததும் செப்டம்பர் 7 ஆம் தேதி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளார்கள். அப்படியொரு போராட்டத்தை நடத்தும் நிலைக்கு அரசு ஊழியர்களைத் தள்ளாமல், ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கங்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை.

தமிழகத்திற்கு நல்லது

தமிழகத்திற்கு நல்லது

ஆனால் குதிரை பேரத்தால் தொடரும் இந்த அரசிடமிருந்து அந்த நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற போராட்டங்களை கையாளும் தகுதியோ, திறமையோ இல்லாத முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் வீட்டுக்குச் செல்வதே தமிழகத்திற்கு நல்லது என்பதால், அரசு ஊழியர்களுடன் இணைந்து இந்த அரசை ஜனநாயகரீதியில் வீழ்த்தி, அரசு ஊழியர்களையும் - தமிழக மக்களையும் காப்பாற்றும் பணியில் திராவிட முன்னேற்றக் கழகம் தீவிர கவனம் செலுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
Government against Jacto Gio protest, DMK working president MK Stalin condemned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X