For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரிசி ஆலை முதல்… கிரானைட் குவாரி வரை… மலைக்க வைக்கும் படிக்காசு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக பிப்ரவரி 1ஆம் தேதி ஐந்துபேரை கொத்தாக அள்ளியுள்ளது போலீஸ். இதில் காரைக்குடி தொழிலதிபர் படிக்காசுவின் கைதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரது பின்னணி அப்படிப்பட்டது என்கின்றனர்.

படிக்காசு பெயர் மட்டுமல்ல இவர் பணத்தையே படியில் அளந்தவர் என்று கூறி மலைக்கவைக்கின்றனர் அவரை சுற்றியுள்ளவர்கள். அந்த அளவிற்கு மணல் குவாரி தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர் என்கின்றனர்.

Granite Scam : PL Padikkasu arrest judicial custody till February 13.

மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 6 கட்ட விசாரணைகளை நடத்தி முடித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட சகாயம், 5வது கட்ட ஆய்வின் போது உசிலம்பட்டி, செக்காணூரணி விசாரணை மேற்கொண்டார்.

மாயமான மலைகள், மூடப்பட்ட கண்மாய்கள், சமாதிகட்டப்பட்ட நீர்வழித்தடங்கள் பற்றி சகாயம் ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.

சகாயம் குழுவினரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் கிரானைட் முறைகேடு குறித்து அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மேலூர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கனிமவளத்துறையில் இருந்து கடந்த வாரம் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி அழகுபாண்டி (கீழையூர்), ரவிச்சந்திர பிரபு (கீழவளவு), முகமது அலி (இ.மலம்பட்டி), பாண்டியராஜன் (திருச்சுனை) ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது குவாரிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்தது.

யார் யார் எவ்வளவு

மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே கீழையூரில் பாறை புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மதுரா கிரானைட்ஸ் உரிமையாளர் அன்வர் அலி, அவரது தம்பி நாகூர் ஹனிபா மற்றும் பங்குதாரர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

மணிகண்டன் எக்ஸ்போர்ட்ஸ்

அதேபோல், மேலப்பட்டி கிராமத்திலுள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக மணிகண்டன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் ராமநாதன் உள்ளிட்டோர் மீதும், கீழவளவு கிராமத்திலுள்ள திருமாணிக்கம் கண்மாய் மற்றும் அருகிலுள்ள நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் வெட்டி எடுத்ததன்மூலம் அரசுக்கு சுமார் ரூ.58 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேலூர் நகர திமுக முன்னாள் செயலர் முகமது இப்ராகிம் சேட், அவரது நண்பர் சேதுராமன் உள்ளிட்டோர் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

கண்மாய் நிலங்களில்

இ.மலம்பட்டி பகுதியிலுள்ள நவகுடி கண்மாய் மற்றும் அனுமதிக்கப்படாத நிலங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.58.50 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பி.எஸ். கிரானைட் உரிமையாளர் பெரியசாமி உள்ளிட்டோர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.

காரைக்குடி படிக்காசு

உசிலம்பட்டி அருகேயுள்ள எருவார்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பி.எல்.படிக்காசு உள்ளிட்ட 3 பேர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற தாசில்தார்

திருச்சுனை அருகேயுள்ள முல்லாமலை நொச்சிமலை கிராமத்தில் அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டியதன் மூலம் அரசுக்கு பல கோடி இழப்பை ஏற்படுத்தியதாக சோலைராஜன், ஓய்வுபெற்ற தாசில்தார் வெங்கடசுப்பு மற்றும் அவரது மகன்கள் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதிரடி சோதனை

இந்த புகார்கள் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைத்து மதுரை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவிடவே, சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் இக்குழுவினர் பிப்ரவரி 1ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து குவாரிகளின் உரிமையாளர்கள் வீட்டில் சோதனை நடத்தி, அங்கிருந்த முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

படிக்காசு கைது

அதன்தொடர்ச்சியாக தொழிலதிபர் படிக்காசு, சோலைராஜன், ஓய்வுபெற்ற தாசில்தார் மகன் மோகன், மதுரா கிரானைட்ஸ் பங்குதாரர் நாகூர் ஹனிபா, திமுக முன்னாள் நகரச் செயலர் முகமது இப்ராகிம் சேட்டுவின் நண்பர் சேதுராமன் ஆகிய 5 பேரை பிப்ரவரி 1ஆம் தேதி கைது செய்தனர். அவர்களை பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

தேடுதல் வேட்டை

58 கோடி கோடி ரூபாய் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க. பிரமுகர் இப்ராகிம்சேட் மீதும், அவரது மேலாளர் ஜெயராமன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜெயராமன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இப்ராகிம்சேட்டை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் குவாரிகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து தாசில்தார்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட வருவாய் துறையினர் தனியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. துல்லியமாக மதிப்பிடப்பட்டு வருகிறது.

பதறும் விஐபிக்கள்

கிரானைட் முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் படிக்காசுவின் கைதுதான் திமுகவினருக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரது பின்னணி அப்படிப்பட்டது. படியில் காசை அளக்கும் அளவிற்கு செல்வச் செழிப்பு கொண்டவராம். காசு விசயத்தில் சரியான கணக்குப் பிள்ளை என்கின்றனர். யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது என்று இவரது டைரியில் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கிறதாம். இதுதான் பல விஐபிக்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

ரைஸ்மில் அதிபர்

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த பி.எல்.படிக்காசுவின் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர். திருச்செந்தூர் முருகன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தவர். திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். காவிரி மற்றும் தென்மாவட்ட ஆறுகளில் மணல் அள்ளும் உரிமம் பெற்று குவாரி நடத்தியவர். இதுதவிர மாடர்ன் ரைஸ்மில், காகித ஆலை என பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார்.

படியில் அளந்த பணம்

கடந்த தி.மு.க ஆட்சியில் தாமிரபரணி முதல் காவிரி வரை மணல் அள்ளும் உரிமையை வளைத்தார் படிக்காசு. ஒரு கட்டத்தில் கேரளாவிற்கும் வெளிநாடுகளுக்கும் மணல் விற்பனை வெகு ஜோராக நடக்கவே இதன்மூலம் கோடிகளில் அவருக்கு பணம் கொட்டியுள்ளது. படிக்காசு தன் பேருக்கு தகுந்தாற்போல் காசுகளை படியில்தான் அளந்திருக்கிறார்.

கொள்ளை போன பணம்

கடந்த திமுக ஆட்சி காலத்தில் நெல்லை மாவட்டத்தில் இருந்து படிக்காசுவின் கணக்குப்பிள்ளை ஒருநாள் விட்டு ஒருநாள் பணத்தை மூட்டை கணக்கில் கட்டிக்கொண்டு காரைக்குடிக்கு காரில் வருவாராம். ஒருநாள் மர்மநபர்கள் சிலர் காரை வழிமறித்து கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிக்கொண்டு போய்விட்டனராம். இந்த விசயம் வெளியே தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்று அப்போதைய மேலிடம் சொன்ன அட்வைஸ் பேரில் அப்படியை அமுக்கி விட்டார்களாம்.

சரியான கணக்குப்பிள்ளை

திமுக தலைமையிடம் இவரை அறிமுகப்படுத்திய மாஜி அமைச்சர், இவர் ஒரு நல்ல கணக்குப்பிள்ளை என்றுதான் அறிமுகம் செய்தாராம். காரணம் எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது? யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது. பங்கு எவ்வளவு என்பது வரை துல்லியமாக கணக்கு எழுதி வைத்திருப்பாராம்.

விஐபிக்களுக்கு நெருக்கம்

தி.மு.க அதிகார மையத்துக்கும் மாதந்தோறும் பணத்தை கணக்குப்படி செட்டில் செய்ததால் இவர் மீது அவர்களுக்கு தனி நம்பிக்கை இருந்தது. தி.மு.க முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்கூட இவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நிலை இருந்தது. ப.சிதம்பரத்துக்கும் நெருக்கமானவர் என்கின்றனர்.

Granite Scam : PL Padikkasu arrest judicial custody till February 13.

கிரனைட் குவாரி

படிகாசு 10 ஆண்டுகளாக மணல் பிசினஸில் கோலோச்சி வந்தபோது மதுரை, சிவகங்கை எல்லைகளில் கிரானைட் குவாரியில் பி.ஆர்.பி கொடி கட்டி பறந்தார். கிரானைட் வருமானம் குறித்து படிகாசு காதுக்கு எட்ட, தானும் அந்த பிசினஸ் செய்ய நினைத்து மதுரை உசிலம்பட்டியில் கிரானைட் குவாரிக்கு இடம் வாங்கியதோடு, அதற்கு லைசன்ஸும் எடுத்துவிட்டார்.

பி.ஆர்.பிக்கு விற்பனை

அந்த இடத்தில் கிரானைட் எதிர்பார்த்த அளவில் இல்லாததால், அந்த இடத்தை பி.ஆர்.பியிடம் விற்றுவிட்டார். ஆனால், லைசன்ஸை பி.ஆர்.பி பேருக்கு மாற்றவில்லை. லைசன்ஸை மாற்றாமலேயே மாதந்தோறும் கணிசமான பணம் படிகாசுவுக்கு கைமாறியது. கிரானைட் குவாரியைத் தவிர, இதே லைசன்ஸை வைத்து பி.ஆர்.பி தரப்பு வேறு இடங்களிலும் கற்களை வெட்டியெடுத்தது.

சிறைக்கு போக காரணம்

கிரானைட் குவாரி குறித்து சகாயம் ஆய்வு செய்தபோது படிகாசு பெயரில் செயல்பட்ட குவாரிக்கும் நோட்டீஸ் வந்துள்ளது. நோட்டீஸைக் கண்டு பயப்பட வேண்டாம். அந்த சகாயத்தையே நான் மாற்றிவிடுவேன்' என்று படிக்காசுவிடம் கூறியுள்ளார் பி.ஆர்.பழனிச்சாமி. ஆனால், அந்த சகாயம் கிளப்பிய விவகாரத்தால்தான் இன்று சிறை செல்லும் நிலை படிகாசுவுக்கு ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

நடவடிக்கை எடுங்கள்

படிக்காசு கைது செய்யப்படுவதை தடுக்க அதிமுக புள்ளிகள் மூலம் முயற்சி செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று மேலிடம் உத்தரவிடவே விசாரணைக்கு அழைத்து சென்ற படிக்காசுவை கைது செய்துள்ளனர். மணல் வருமானத்தைத் தாண்டி அவர் ஆசை கிரானைட் பக்கம் எட்டிப் பார்த்ததால்தான் அரசியல் புள்ளிகளிடம் செல்வாக்கு இருந்தும் சிறை செல்ல நேர்ந்தது' என்கின்றனர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள். ஆனால் அதிகம் அச்சப்படுவது திமுக முக்கிய புள்ளிகள்தானாம்.

தமிழக அரசு நடவடிக்கை

உயர்நீதிமன்ற உத்தரவு படி சகாயம் 6 கட்ட ஆய்வுகளை முடித்துள்ளார். இந்த நிலையில் குவாரிகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து தாசில்தார்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட வருவாய் துறையினர் தனியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. துல்லியமாக மதிப்பிடப்பட்டு வருகிறது.

தலைமறைவாகும் புள்ளிகள்

படிக்காசு கைதினை தொடர்ந்து அடுத்தடுத்த விசாரணைகளால் கிரானைட் அதிபர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க பல கிரானைட் அதிபர்கள் மற்றும் முக்கிய ஊழியர்கள் தலைமறைவாகி விட்டனராம். அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என்கிறது போலீஸ் தரப்பு. சகாயத்திற்கு முன்பாகவே தமிழக அரசு முந்திக்கொண்டு நடவடிக்கை எடுப்பதன் காரணம் தெரியாமல் முழிக்கின்றனர் கிரானைட் குவாரி முதலைகள்.

English summary
Here is the background story of sand quarry baron PL. Padikkasu. The Madurai district police on February 1st arrested sand quarry baron P L Padikasu and four others in connection with illegal granite quarrying. The accused were produced before a judicial magistrate and remanded in judicial custody till February 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X