For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

By Shankar
Google Oneindia Tamil News

Madras high court
சென்னை: தாமாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்து விசாரிக்கும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு இல்லை என தற்காலிக தடை பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த வக்கீல் பி.சுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில், "தேசிய பசுமை தீர்ப்பாயம் சட்டம்-2010-ன் கீழ் தென்மாநிலத்துக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பாயத்தின் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், உறுப்பினராக தொழில்நுட்ப நிபுணர் ஒருவரும் உள்ளனர். பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி, தாக்கல் செய்யப்படுகின்ற வழக்குகளையும், அப்பீல் வழக்குகளையும் மட்டுமே தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முடியும்.

தாமாக முன்வந்து (Suo-Moto) வழக்குகளை பதிவு செய்து விசாரிக்கும் அதிகாரம், அந்த தீர்ப்பாயத்துக்கு இல்லை. ஆனால், ‘பாக்கெட்' குடிநீர் வழக்குகள் உட்பட பல வழக்குகளை தாமாக முன்வந்து பதிவு செய்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இவ்வாறு தாமாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றத்துக்கு மட்டுமே உள்ளது.

எனவே தாமாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்ய கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட வேண்டும். சூ-மோட்டோ வழக்குகளை பதிவு செய்ய இடைக்கால தடை விதிக்கவேண்டும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் மு.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதம் செய்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தேசிய பசுமை தீர்ப்பாயம் சட்டம் 2010-க்கு உட்பட்டுத்தான் தேசிய பசுமை தீர்ப்பாயம் செயல்பட முடியும். சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து பைசல் செய்வதற்காகத்தான் தேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பாயம், உயர்நீதிமன்றத்துக்கு இணையானது ஆகாது. இந்த தீர்ப்பாயம் சட்டத்தின் நான்கு எல்லைக்கு உட்பட்டுத்தான் செயல்படவேண்டும். தேசிய பசுமை தீர்ப்பாயம் 2010-ம் ஆண்டு சட்டம் பிரிவு 18-ன்படி, தாக்கல் செய்யப்படும் வழக்குகள் மற்றும் அப்பீல் வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும்.

தாமாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க அதிகாரம் இல்லை. ஏற்கனவே ஆர்.காந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தீர்ப்பாயத்துக்கும், நீதிமன்றத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அனைத்து நீதிமன்றங்களும் தீர்ப்பாயமாக செயல்பட முடியும். ஆனால், அனைத்து தீர்ப்பாயங்களும், நீதிமன்றங்களாக செயல்பட முடியாது' என்று தீர்ப்பளித்துள்ளது.

எனவே, மனுதாரர் வக்கீல், பசுமை தீர்ப்பாயத்துக்கு தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்ய அதிகாரம் இல்லை என்பதை தெளிவாக வாதம் செய்துள்ளார். இதை ஏற்றுக் கொள்கிறோம். சென்னையில் உள்ள தென்மாநிலத்துக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்," என்ற உத்தரவிட்டனர்.

English summary
Clipping the wings of the southern bench of the National Green Tribunal (NGT) which has been taking suo motu cognizance of issues at will and issuing directions, the Madras high court has restrained the forum from issuing such proceedings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X